முல்லைத்தீவு தேவிபுரம் வீதி புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு திறந்துவைப்பு… வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன்…
முல்லைத்தீவு மாவட்ட தேவிபுரம் கிராமத்துக்கு செல்லும் பிரதான வீதி வாகனப் போக்குவரத்துக்கு ஒவ்வாத வகையில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தவேளையிலே, அந்த பிரதான வீதியை புனரமைக்க வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் ஊடாக வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தனது கடந்த ஆண்டு அமைச்சின் செலவிற்கு ஒதுக்கப்பட்ட தொகையில் இருந்து ரூபாய் 4 மில்லியன் நிதியும் மேலதிகமாக 2 மில்லியன் நிதியும் ஒதுக்கி, திட்டத்தினை ஆரம்பித்துவைத்தார், தற்போது அப் பிரதான வீதியின் சுமார் 780 மீட்டர் புனரமைப்புப் பணிகள் யாவும் நிறைவுற்ற நிலையில் அவ் வீதியை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கும் நிகழ்வு 29-01-2016 வெள்ளி மாலை 3 மணியளவில் இடம்பெற்றது.
நிகழ்விற்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் கந்தையா சிவநேசன் அவர்களும் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்ட பிரதம பொறியியலாளர் திரு.ஜெகானந்தன் ஆகியோர் கலந்துகொண்டு வீதியை திறந்துவைத்தனர்.
இவ் நிகழ்வில் உரையாற்றிய வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர், தனது இந்த கிராமத்து வீதியை தார்வீதியாக புனரமைப்பு செய்வதற்கு இங்குள்ள மக்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்கவும், இந்த வீதியை நேரில் பார்வையிட்ட பின்னருமே தாம் புனரமைப்பு செய்ததாகவும், அத்தோடு இன்று இந்த வீதியை எனது மக்களின் பாவனைக்கு திறந்துவைத்து மனமகிழ்வு அடைவதாகவும், இதே தேவிபுரத்து மக்களுக்கு கடந்த ஆண்டு தமது கிராம அபிவிருத்தி திணைக்களம் ஊடாக விக்கி வீதிக்கு 02 மதகுகளும் பாரதி வீதியில் 01 மதகுமாக சுமார் 5 இலட்சம் செலவில் அமைத்துக் கொடுத்துள்ளதாகவும், அத்தோடு இந்த ஆண்டு கிராம அபிவிருத்தி சங்கத்தின் கட்டிட திருத்த வேலைக்காக 2 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். தாம் தமது மக்களுக்கு தேவைகளின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து வேலைத் திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருவதாகவும், மக்கள் ஒற்றுமையோடு ஒன்றுபட்டால் நிச்சயம் ஓர் நிலையான அபிவிருத்திக்குள் செல்லமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.