முள்ளிவாய்க்கால் நிகழ்வை ஒரு பிரார்த்தனை நிகழ்வாக மாற்ற வேண்டும். அரசியலாளர்கள் புறமொதுங்கி, மதகுருக்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் சிறார்களும் இந்த நிகழ்வில் இணைந்திருப்பது நல்லது“
“மே 18 – முள்ளிவாய்க்கால் நினைவு கூரல் நிகழ்வு” நடந்து முடிந்து விட்டது. ஆனால், சனங்களின் விருப்பத்துக்கும் நம்பிக்கைக்கும் மாறாக தமிழ் அரசியல் கட்சிகள் உட்படப் பல்வேறு தரப்பினரும் இந்த நிகழ்வைத் தமது நோக்கத்துக்கு ஏற்றமாதிரி உருமாற்றிவிட்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாணசபையின் ஏற்பாட்டில் ஒரு இடத்தில் நினைவு கூரலைச் செய்தது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இன்னோரிடத்தில். சிவாஜிலிங்கம் அன்ட் அனந்தி குழுமம் வேறோரிடத்தில். கிறிஸ்தவ மதகுருக்கள் சிலர் பிறிதோரிடத்தில். ஜனநாயகப் போராளிகள் கட்சி என்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களின் தரப்பு இன்னோரிடத்தில். இதனால் ஒழுங்கமைக்கப்பட்டுக் கூர்மைப்படுத்த முடியாத வகையில் சிதைந்த நிகழ்வாக மாறியது முள்ளிவாய்க்கால் நினைவு கூரல் 2018.
இது போரினால் பாதிக்கப்பட்ட சனங்களிடம் கவலையை உண்டாக்கியுள்ளது. “ஒரு நினைவு கூரல் நிகழ்வில் எதற்காக இத்தனை வேறுபாடுகளும் பிரிவுகளும்?” என்று அவர்கள் கேட்கிறார்கள்.
மட்டுமல்ல, “முள்ளிவாய்க்கால் இழப்புகளையும் அந்தத் துயரத்தையும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் சன மயப்படுத்தி, நினைவு கூர்வதன் மூலமாக விடுதலைக்கான பரிமாணத்தில் ஒரு புதிய பாய்ச்சலை நிகழ்த்தலாம். இங்கே ஏற்பட்ட துயரை, சனங்களின் கூட்டுத்துயராக மாற்றுவதன் மூலம் சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சியே நோக்கியும் அதனுடைய அறத்தின் முன்னும் கேள்விகளை எழுப்பக்கூடியதாக இருக்கும்” என ஆய்வாளர்களும் குறிப்பிட்டு வந்தனர்.
ஆனால், இதற்கான முறையில் நிகழ்ச்சிகள் அமையவில்லை.
“போர்க்காலத்திலும் தாங்கள் கைவிடப்பட்டிருந்தோம். இப்போதும் அப்படியான ஒரு நிலைதான் உருவாகியிருக்கு. ஆளாளுக்குப் போட்டி போட்டுக்கொண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தப்பார்க்கினம். கொல்லப்பட்டவைக்கு உண்மையில அஞ்சலி செலுத்திறதெண்டால், எல்லாருமாகக் கூடி, ஒண்டா நிண்டு அதைச் செய்யலாமே! அப்பிடிச் செய்யாமல், ஏனிப்பிடி ஆளுக்கு ஒரு இடமாக நிண்டு கொண்டாடுகினம்? இது எனக்குச் சரியாகப் படேல்ல. எல்லாரும் எங்களுடைய கண்ணீரையும் கவலைகளையும் இழப்புகளையும் தங்கடை அரசியலுக்குப் பயன்படுத்த முயற்சிக்கினம். இதுதான் நடக்குது”. என்று சொல்லிக் கவலைப்பட்டார் முள்ளிவாய்க்கால் பகுதியில் 2009 மே 17 இல் தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் பலி கொடுத்த தந்தையொருவர்.
சனங்களின் எண்ணங்களையும் கவலைகளையும் யார்தான் கவனத்திற் கொள்கிறார்கள்? தங்கள் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சனங்களை அடக்கிக் கொள்வதற்கே ஒவ்வொரு தரப்பும் முயன்றது. இதனால் எந்த நிகழ்வில் கலந்து கொள்வது என்று தெரியாமல் பெரும்பாலானவர்கள் குழம்பிக் கொண்டு நின்றனர். இதற்குள் தங்கள் நிகழ்வுகளுக்கான ஆட்களைச் சேர்க்கும் நடவடிக்கையில் ஒவ்வொரு தரப்பும் முயன்று கொண்டிருந்தது.
இதைப் பார்த்துவிட்டு, “ஆட்சேர்ப்பு அரசியல் இன்னும் ஓயவில்லை” என்றார் இன்னொருவர். அவருடைய முகம் கறுத்து இறுகியிருந்தது. காறி உமிழ்ந்து விட்டுச் சென்றார்.
முப்பது ஆண்டுகளாக நடந்த யுத்தம் முள்ளிவாய்க்காலில் இறுதி மூச்சை விட்டது. அந்த இறுதிக்கணத்தில் அது ஏராளமான உயிர்களைப் பலியெடுத்தது. அந்தப் பலி தமிழ்ச்சமூகத்தின் ஆழ்மனதில் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. இதுவே முள்ளிவாய்க்கால் நினைவுகூரலுக்கான அடிப்படை. ஆகவே இந்தக் களத்தில் உயிர்ப்பலியாகிய சனங்களை நினைவு கொள்வதற்கென்று தொடங்கப்பட்ட நிகழ்வு அரசியல் ஆடுகளத்திற்கான விளைபொருளாக மாறியிருக்கிறது. இந்த நோய் கடந்த ஆண்டுகளிலேயே வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியது.
இதனால்தான், “இந்த நிகழ்வை காயங்களை ஆற்றும் நிகழ்வாகக் கொள்ளுங்கள். காயங்களைப் பெருக்கும் நிகழ்வாகத் தயவு செய்து மாற்றிவிட வேண்டாம்” எனப் பலரும் தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்தனர். கடந்த ஆண்டுகளில் நடந்த அனுபவங்களைக் கொண்டு, இதை அழுத்தமாகச் சொல்லி வருகிறார்கள் உளநல மருத்துவர்கள்.
குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த நிகழ்வை எப்படி நடத்த வேணும். எப்படி நடத்தக் கூடாது என்ற விதமாக உளவியலின் அடிப்படையில் மனநல மருத்துவர் டொக்ரர் சிவதாஸ் கருத்துத் தெரிவித்திருந்தார். மாங்குளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த வேளையிலேயே அவர் இதைச் சொன்னார். “அரசியலுக்காக, பாதிக்கப்பட்டவர்களின் துயரங்களைக் கிண்டாதீர்கள். நாங்கள் அவர்களைக் குணப்படுத்துவதற்காகப் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் அவர்களை மேலும் காயப்படுத்த முயற்சிக்கிறீர்கள். இது சமூகத்தில் பெரும் எதிர்விளைவுகளை உண்டாக்கும்” என.
ஆகவே “முள்ளிவாய்க்கால் நிகழ்வை ஒரு பிரார்த்தனை நிகழ்வாக மாற்ற வேண்டும். அரசியலாளர்கள் புறமொதுங்கி, மதகுருக்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் சிறார்களும் இந்த நிகழ்வில் இணைந்திருப்பது நல்லது“ என்று கூறப்பட்டது. ஆனால், இதற்கு யார் இடமளிக்கப்போகிறார்கள்? அதுவும் தமிழ்ச்சூழலில்.
தமிழ்ச்சூழலானது, சவப்பெட்டிகளையே தன்னுடைய அரசியலுக்காகப் பயன்படுத்தும் பாரம்பரியத்தைக் கொண்ட ஒன்றல்லவா. இதனால்தான் “சவப்பெட்டிகளின் அரசியல்” என்று தமிழ் அரசியலை விமர்சிக்கும் நிலை உருவானது. “எலும்புக்கூடுகளின் ஊர்வலம்” என்று கவிஞர் சேரன் இந்த நிலைமைகளைக் குறித்து எழுதியதை இங்கே நினைவிற் கொள்ளலாம்.
ஆண் எலும்புக் கூடுகள்
பெண் எலும்புக் கூடுகள்
சிறுவர் சிறுமியர்களின் எலும்புக் கூடுகள்
குழந்தையைக் கையிற் தாங்கிய எலும்புக் கூடுகள்
இளைய எலும்புக் கூடுகள்
முதிய எலும்புக்கூடுகள்
கைகள் அற்றவையும் கூட
இரத்தமும் உயிரும் உறைந்து
அனலடிக்கும் இந்த மணல் வெளியில்
நேற்றும் பட்டி பூத்திருந்தது
இன்றும் பூத்திருந்தது பட்டி.
இன்று
வெள்ளை உடைகளில் விருந்தாளிகள் வந்தனர்.
சுடர்களை ஏற்றினர்.
பட்டிப் பூக்களை மேவி
எடுத்து வந்த பூக்களைப் பரப்பினர்
மலர் வளையங்களைச் சாத்தினர்
துயரும் அழுகையும் மீட்டப்பட்டது
மண்ணடுக்குகளில்
துயரின் ஆழப் படுகைகளில்
புதைந்துறங்கிய மனிதர்கள்
மெல்லக் கண் திறந்து
நேற்றைய நாளை நினைவு கூர்ந்தனர்
அப்படியே
இன்றைய நாளைப் பார்த்தனர்.
பெருகியோடும் கண்ணீரில்
பலியிடப்பட்டோரையெல்லாம்
எரியும் சுடர் பிரதிபலித்தது
பொழுதகல
துயர் விழாவின் காட்சிகளெல்லாம் மெல்ல மாறின
ஏற்றிய சுடர்கள் அணைய முன்
பரப்பிய மலர்கள் வாடமுன்
எல்லோரும் திரும்பிச் சென்றனர்.
மண்ணடுக்குகளில் விழிதிறந்த மனிதர்கள்
மறுபடியும் தனித்தனர்
பட்டிப் பூக்களும் தனித்தன
நாளையும் தனித்தே பூக்கும் பட்டி
என்றொரு கவிதையை இந்த நாளில் எழுத வேண்டியிருந்தது.
என்றாலுமென்ன? தமிழ்ப் பொது அரசியலும் தமிழ்ப் பொது மனமும் தன்னுடைய சுற்றுப்பாதையில் இருந்து விலகிப் பயணிக்கும் குணமுடையதில்லை. சில அபுர்மான தருணங்களும் அபுர்வமானவர்களும் விதிவிலக்காக அமைவதுண்டு. மற்றும்படி எல்லாமே மறதிக்கும் சுய நினைவிழப்பிற்கும் உள்ளான ஒன்றே.
ஆகவே இந்த ஆண்டு நடந்ததைப்போல அடுத்த ஆண்டிலும் இதே தவறுகளோடு ஒரு நினைவு கூரல் – “முள்ளிவாய்க்கால் திருவிழா” நடக்கும். அப்போதும் இதேபோல முள்ளிவாய்க்காலுக்குப் பிரபலங்கள் வருவார்கள். அவர்களைச் சுற்றி ஊடகக் கவனம் குவியும். அரசியல் உரைகள் காற்றில் எழும். பிரகடனங்கள் முழங்கும். சடங்கு என்றால் அப்படித்தானே. எல்லாம் ஒரு நாளில் முடிய மறுபடியும் அந்த வெளி கைவிடப்பட்ட நிலமாக, தனித்த பட்டிப் புக்களின் மேடாகவே இருக்கும். காற்று ஊழையிட்டு அலையும்.
சில காலம் இப்படியே இது போகும்.
அதற்கப்பால்?
அதைப்பற்றி யாருக்குமே தெரியாது. அதுவரையிலும் ஆண்டுத் திருவிழா நடக்கும்.
தமிழ் அரசியல் இவ்வாறான உற்சவங்களோடும் திருவிழாக்களோடும்தான் கடந்து கொண்டும் – கழிந்து கொண்டுமிருக்கிறது. ஜெனிவாத் திருவிழா, மாவீரர்நாள் திருவிழா, முள்ளிவாய்க்கால் திருவிழா என்றவாறாக.
ஏனென்றால், அது கடந்த காலங்களில் இதைப்போன்ற இழப்புகளையும் வலிகளையும் இப்படியே அரசியல் முன்னெடுப்புக்காக அன்றி, அரசியல் ஆதாயங்களுக்காகக் கையாண்டது.
1958 இல் நடந்த வன்முறையைத் தமிழர்கள் மறக்க முடியாதென்றனர். பிறகு 1974 தமிழாராய்ச்சி மாநாட்டின் போதான படுகொலைகளை. பிறகு 1977 வன்முறையை. பிறகு 1981 யாழ் நூலக எரிப்பு மற்றும் யாழ்ப்பாண எரிப்பை. பிறகு 1983 வன்முறையை. பிறகு வெலிக்கடைச் சிறைப்படுகொலைகளை. பிறகு குமுதினிப் படகுக் கொலைகளை. பிறகு கொக்கட்டிச்சோலை, உடும்பன்குளம், வல்வெட்டித்துறை, ஒதியமலை, வட்டக்கண்டல் படுகொலைகளை.பிறகு நவாலி, நாகர்கோயில் படுகொலைகள் என…பிறகு செம்மணிப் புதைகுழிகளை. பிறகு, வாகரைக் கொலைகளை.
இப்போது முள்ளிவாய்க்கால் அழிவை….
எல்லாவற்றையும் வைத்து ஒப்பாரியாக்கி அழுது புலம்பியது தமிழ்த்தரப்பு. இவற்றைத் தடுத்து நிறுத்தும் வல்லமையை அது கொண்டிருக்கவில்லை. ஆயுதப்போராட்ட அரசியல் பல வகையிலும் முன்னேற்றங்களைத் தந்திருந்தாலும் அதனுள்ளிருந்த ஜனநாயகமின்மையிலும் எதேச்சாதிகாரப் போக்கும் ஒட்டு மொத்தத்தில் போராட்டத்தையே அழித்து, சனங்களையும் பேரழிவுக்குள்ளாக்கியது. இப்படியெல்லாம் நிகழ்ந்த பின்னும் இந்த வரலாற்றிலிருந்து படிப்பினைகளைப் பெறவில்லை. சுய மதிப்பீட்டைச் செய்யவில்லை. ஆய்வுகளுக்குச் செல்லவில்லை.
பதிலாக இப்படித் திருவிழாச் செய்து கொண்டிருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை வைத்து, அரசியல் கைதிகளை வைத்து, கொலைகளை வைத்து, போராடி வீழ்ந்த போராளிகளை (மாவீரர்களை) வைத்து….
ஒடுக்கப்பட்ட இனமொன்றின் கனதியான நாட்களை, உயிர் வலி வலி நிரம்பிய வாழ்வின் அடையாளங்களை இப்படி எளிமைப்படுத்தலாமா என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். உங்களின் கேள்வி நியாயமானதே. நிச்சயமாக அப்படிச் செய்யக்கூடாது என்பதில் மறுப்பில்லை.
ஆனால் ஒடுக்கப்பட்ட இனமொன்று அல்லது விடுதலைக்காகப் போராடும் சமூகமானது தனக்கு ஏற்பட்ட காயங்களையும் வலிகளையும் எதிர்கொள்ளும் முறையே வேறாக இருக்க வேணும். தன்னுடைய காயங்களிலிருந்தும் வலிகளில் இருந்தும் படிப்பினைகளையும் போராட்டத்துக்கான உத்வேகத்தையும் பெற்றுக்கொள்ள வேணும். அவற்றை மலினமான அரசியலுக்குப் பயன்படுத்தக்கூடாது.
முள்ளிவாய்க்கால் நினைவு கூரலை இலங்கையின் ஏனைய சமூகத்தினரும் பங்கேற்கும் வகையில் மாற்றியிருக்க வேணும். அப்படிச் செய்திருக்க முடியும். நல்லாட்சிக்கான இந்தச் சந்தர்ப்பத்தில் – புதிய அரசியல் திருத்தங்களுக்கும் மாற்றங்களுக்கும் உரிய இந்தச் சூழலில், காயப்பட்ட மக்களை ஆற்றுப்படுத்தும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு. இதை அரசியலுக்கு அப்பால் அணுகி, அவர்களை ஆற்றுப்படுத்துவோம் என்று தமிழ்த்தரப்பு முயற்சி செய்திருக்க வேண்டும். இதில் சரியாக வேலை செய்திருக்க வேண்டியது சம்மந்தனும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும்.
இது தமிழ் அரசியலை முன் கொண்டு சென்றிருக்கும். அரசியல் பேசாத வெற்றிகரமான அரசியலாக மாறியிருக்கும். மற்றவர்களின் அரசியலுக்கு எப்போதும் தலையாட்டிக் கொண்டிருப்பதை விட தமது அரசியலுக்குப் பிறரையும் சம்மதிக்க வைப்பதே பரபரஸ்பர அரசியல் செயற்பாடாகும். இது புரிந்துணர்வுக்கும் பகை மறப்புக்கும் நல்லிணக்கத்துக்குமுரிய நாட்கள் என்றால், அதற்காக முள்ளிவாய்க்காலுக்கு வாருங்கள் என்று பகிரங்கமாகவும் தனிப்பட்ட முறையிலும் சம்மந்தன் அழைத்திருக்க வேண்டும்.
ஆனால் அப்படி நடக்கவில்லை. மட்டுமல்ல, தமிழ்த்தரப்பைக்கூட ஒருங்கிணைக்க எந்தவொரு சக்தியினாலும் முடியவில்லை. இதனால்தான் ஆளாளுக்கு திருவிழாச் செய்ய முனைந்தனர்.
ஆகவே, மெய்யான முறையில் முள்ளிவாய்க்கால் நிகழ்வு பின்னடைவையே தந்திருக்கிறது. சனங்களின் வலி பெருப்பிக்கப்பட்டுள்ளது. கவலைகள் கூடியுள்ளன. மட்டுமல்ல, காலியிலிருந்து மகாசென் பலகயா என்ற அமைப்பினர் கிளிநொச்சிக்கு வந்து, சிங்கக் கொடியை ஏற்றிவிட்டுப்போகும் அளவுக்கு சிங்களத்தரப்பில் எதிர்நிலையை உண்டாக்கியுள்ளது. அரசாங்கம் யுத்த வெற்றியை வேறு நடத்தியுமிருக்கிறது.
இதெல்லாம் இந்த நாட்டுச் சூழல் எதிர்நிலையில் பயணிப்பதையே காட்டுகின்றன. வேறொன்றுமில்லை, “பேய்களின் ஊர்வலமும் சவப்பெட்டிகளின் அரசியலும்” என்ற நிலையிலேயே இலங்கையின் அரசியலும் இலங்கைச் சமூகங்களின் எதிர்காலமும் உள்ளன என்பதையும்தான்.
“பேய்களின் ஊர்வலமும் சவப்பெட்டிகளின் அரசியலும்”
முள்ளிவாய்க்கால்: அறைகூவலுக்கான ஒரு காரணம்;
ஸ்ரீலங்கா மிகவும் தீர்க்கமான திருப்பங்களில் ஒன்றை, இல்லையென்றால் மிகவும் தீர்க்கமான மற்றும் அதன் 1948க்குப் பின்னான வரலாற்றில் ஒரு சகாப்தமான திருப்பத்துக்கு முகம் கொடுத்து இப்போது எட்டு வருடங்களாகிவிட்டன. எல்.ரீ.ரீ.ஈ க்கு எதிரான இறுதி இராணுவத் தாக்குதலின் முடிவு,கொழும்பின் பெரு வெற்றி மற்றும் புலிகளின் தோல்வி என்றே ஆனது, இதன் விளைவாக தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்பு கட்டமைப்பில் கணிசமானளவு மாற்றத்தை ஏற்படுத்தியது. இது முன்னர் கல்வியாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் வட்டத்தில் சாத்தியமற்ற ஒன்றாகக் கருதப்பட்டது. ஸ்ரீலங்கா ஆராய்ச்சியாளர்கள் என அழைக்கப்படும் – மானிடவியலாளர்கள், புவியலாளர்கள் மற்றும் அபிவிருத்தி ஆய்வாளர்களைக் கொண்ட ஒரு கலவைக்கு – ஸ்ரீலங்கா பற்றி அதிகாரபூர்வமாக எழுதுவதற்கான சுதந்திரம் கிடைத்தது, மே 2009 ஒரு எதிர்பாராத விளைவு.
இராஜதந்திர முன்னணியைப் பொறுத்தவரை, பல அரசாங்கங்கள், குறிப்பாக டெல்லி மற்றும் மேற்கு என்பன அவர்களால் அழைக்கப்படும் சமாதானத் தீர்வு என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் இருந்தன. அவர்களது கவலைகள் எல்லாம் ஸ்ரீலங்கா அரசாங்கம் இறுதியாக தெரிவு செய்யும் நடவடிக்கையை பற்றியதாக இருந்தது முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு சில வாரங்கள் முன்பாக கௌச்சர் – மில்லிபான்ட் ஆகியோரின் ஸ்ரீலங்காவுக்கான இராஜதந்திர விஜயம் இதற்கு சாட்சி பகருகிறது. சிலருக்கு இந்த நாள் இறுதி வெற்றியை, இல்லாவிட்டால் புலிகளிடம்; இருந்து ஸ்ரீலங்கா விடுதலை பெற்றதை பிரதிபலிக்கிறது. மற்றவர்களுக்கு இந்த நாள் முன்னுவமை இல்லாத அளப்பரிய வன்முறைகள், கொலைகள், கற்பழிப்பு சித்திரவதை நிறைந்த ஒரு நாளாகக் கருதப்படுகிறது.
இராணுவ வெற்றி பாரிய மனிதாபிமான நெருக்கடிகளுக்கு வழிவகுத்தது, அதைப் பற்றி விபரிப்பதற்கு அந்த துயரத்தை அனுபவித்த தமிழ் மக்கள் மிகவும் குறைவாகவே உயிர்வாழ்கிறார்கள் என்று கூறுவது மிகவும் கவலையளிக்கிறது. எனினும் அரசாங்கம் முற்று முழதாக அதை மறுத்துரைக்கும் கொள்கையை நடைமுறைப்படுத்தியது. அரசாங்க அதிகாரிகளைப் பொறுத்த வரை, முகாம்களில் உள்ள மக்களை உபசரித்தது ஒரு முன்னுதாரணம். பாலியல் வன்முறை பற்றிய முறையீடுகள் முற்றாக நிராகரிக்கப் பட்டன. கையடக்கத் தொலைபேசியில் உள்ள புகைப்படக் கருவிகள் மூலம் யுத்தத்தின் இறுதிக்கட்ட நிகழ்வுகள் பற்றிப் பதிவு செய்யப்பட்ட தொழில்முறை சாரா காணொளிகள் மேற்குலகம் மற்றும் பிரித்தானிய ஊடக நிறுவனம் மற்றும் ஒரு வெள்ளையர் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அதை மூலதனமாக பயன்படுத்தலானார். கொழும்பு முற்றாக மறுதலிக்கும் தனது கொள்கையை தொடர்ந்து பின்பற்றியது மற்றும் இதற்கு ஒரு படி முன்பாகச் சென்று தனது சொந்த தயாரிப்பாக ‘ஒப்புக்கொள்ளப்பட்ட பொய்கள்’ என்கிற ஒரு படத்தையும் வெளியிட்டது. இந்த எழுத்தாளர் சிங்கள பௌத்த ஸ்ரீலங்காவாசி, முள்ளிவாய்க்கால் பற்றி விவாதிக்கும்போது தனது பாதையிலேயே தங்க விரும்புகிறார்.
ஒரு சிங்கள, மற்றும் சிங்கள பௌத்த உணர்வு முள்ளிவாய்க்கால் பற்றி எதைப் பின் தொடர்கிறது என்றால், ஸ்ரீலங்கா அரசாங்கம் என்ன நடந்தது மற்றும் அதில் என்ன தங்கியுள்ளது என்று ஒரு முதிர்ச்சியான உரையாடலை எப்படி ஆரம்பிக்கலாம் என்பதையே.
நிராகரிப்பு அரசியலுக்கு இடமில்லை
மறுப்பு தெரிவிக்கும் அரசியல் – விசேடமாக பொருளாதார மற்றும் நிதி ரீதியாக மிகவும் பலவீனமான நிலையில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை மறுப்பது – ஒருபோதும் சாத்தியமற்றது. மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ள முதல் உண்மை இதுதான். பொதுமக்களின் இழப்புகள் இல்லாமல் யுத்தங்கள் ஒருபோதும் நடத்தப்படவில்லை. எல்.ரீ.ரீ.ஈ தொடர்பாக ஆயுதப் படையினரின் ஒரு பிரிவினருக்கு அதன்மீது பெரும் கோபம் ஏற்பட்டிருப்பது உண்மை. பரவலான சிங்கள சமூகத்தினரதும் விஷயமும் இதுதான். ஊடகங்கள் மற்றும் அரசியல் வர்க்கம் என்பன ஒரு முக்கிய உண்மையை ஒருபோதும் பிரதானப் படுத்திக்காட்ட விரும்பவில்லை – தமிழ் புலிகள் இல்லையெனில் எல்.ரீ.ரீ.ஈ அல்லது 1970 முதல் 2000 ன் பிற்பகுதிவரை எல்.ரீ.ரீ.ஈ யில் இணைந்த இளைஞர்கள் அனைவருமே ஸ்ரீலங்கா குடிமக்கள்ஃ அவர்கள் அனைவரும் சாதாரணமாக எங்களைப் போன்ற ஸ்ரீலங்கா வாசிகளே. அதில் உள்ள ஒரேஒரு வித்தியாசம் என்னவென்றால் பல்வேறு விஷயங்களில் அவர்களிடமுள்ள தீவிர அதிருப்தி உணர்வு, கோபம் மற்றும் விரக்தி என்பனவே ( அவை பெரிய அளவில் தொடர்ந்து தீர்க்கப்படாமல் உள்ளன.)
எல்.ரீ.ரீ.ஈ : ஏன்?
எல்.ரீ.ரீ.ஈ அட்டூழியச் செயல்களைப் புரிந்துள்ளது. தமிழ் சமூகத்தின் ஒரு பிரிவினர் மீது அதன் தந்திரமான,வன்முறை மற்றும் சர்வதேசரீதியிலான ஒடுக்குமுறைகளை புரிந்து வந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. எல்.ரீ.ரீ.ஈக்கு எதிராக பரவலான கோபம் சிங்களவர்களிடத்தில் மட்டுமன்றி முஸ்லிம் மக்களிடத்திலும் ஆனால் அநேக தமிழ் மக்கள் மத்தியிலும் உள்ளது.
எனினும் எல்.ரீ.ரீ.ஈ உருவாக்கிய எல்லா வன்முறைகளுக்கும் மாறாக, ஸ்ரீலங்கா அரசாங்கம் ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படையாக அங்கீகரிக்க வேண்டும் – ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு இழைத்த தவறுகளே எல்.ரீ.ரீ.ஈ தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது என்பதை. 1948க்கு பிந்தைய வருடங்களில் மிகவும் அவதானமான அணுகுமுறையை பின்பற்றியிருந்தால் எல்.ரீ.ரீ.ஈ யினது எழுச்சி – கடின உழைப்பாளியும் முன்னோக்கி நகரும் ஊக்கமுள்ள மக்கள் மத்தியில் தோன்றியிருக்காது.
இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு, ஸ்ரீலங்கா அரசாங்கம் சிங்கள இளைஞர்களிடமும் தோற்றுள்ளது என்கிற உண்மையில் இருந்து பார்வையை விலக்கிவிட முடியாது, விசேடமாக எல்.ரீ.ரீ.ஈ யினை உருவாக்கி போராடிய தமிழ் இளைஞர்களிடம் இருந்த அதே சமூக நிலைப்பாட்டை பகிர்ந்து கொண்ட சிங்கள இளைஞர்களிடம். இன்றைய பிரிவினைவாத அரசியலை பார்க்கும்போது, வரம்புக்கு உட்பட்டவர்களின குரல்களை அமைதியாக்கும் பெரிய முயற்சிகள் கையாளப்படுகின்றன, ஒரு அமைப்பு அரசியல் வம்சாவழியினருக்கு முறைப்படி சலுகையளித்து அவர்களை ஊக்குவிக்கிறது. சமூக பிரிவுகளில் இந்த நிலை தொடர்வதினால் வடக்கு மற்றும் கிழக்கில் ஆயுத வன்முறைகளுக்கு வழிவகுத்த பிரச்சினைகளும் சரியான தீர்வு இன்மையால் தொடர்கின்றன.
அடிப்படை யதார்த்தங்களை ஏற்றுக் கொள்ளுதல்
1971 மற்றும் 88 – 89 களில் ஆயுத வன்முறையை நடத்திய ஜேவிபியினர்; மற்றும் 1970 களில் இருந்து ஆயுத வன்முறைகளை தேர்ந்தெடுத்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் (மற்றும் ஏனைய தமிழ் குழுக்கள்) ஆகிய அனைவரும் சில காரணங்களுக்காகவே இதைச் செய்தார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் அனைவரும் ஸ்ரீலஙகா குடிமக்கள். எல்.ரீ.ரீ.ஈ யினை உருவாக்கி, பலப்படுத்தி போராடியவர்கள் குறிப்பாக ஒரு தனி நாட்டுக்கு அழைப்பு விடுத்திருக்கலாம். தற்போதைய காலகட்டத்தில் விசேடமாக சிங்கள சமூகம் மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கம் என்பனவற்றுக்கு ஏன் அவர்கள் ஒரு தனி நாட்டுக்கான வாதத்தை வளர்த்தார்கள் என்பதற்கான காரணங்களை மீண்டும் நினைவு படுத்துவது முக்கியமாகும். அந்த வழியிலான பிரதிபலிப்பின் மூலமே இன்றைய சவால்களுக்கான உறுதியான பதிலைக் காணலாம்
நினைவு கொள்வதற்கான உரிமை
தங்கள் இனம் நம்பிக்கை அல்லது அரசியல் நிலைப்பாடு என்கிற நிலையை சாராது யுத்தத்தின்’ காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் இறந்தவர்களுக்கான நினைவேந்தலுக்கு உரிமையுடையவர்கள். இந்த உரிமை பேச்சு வார்த்தைகள் மற்றும் மாற்றித் தருதல் என்பனவற்றுக்கு உட்படாதது. அது அரசு மற்றும் ஆயுதப்படை என்பன மதிப்பளிக்க வேண்டிய ஒரு உரிமை. மே 18ம் திகதி, ஸ்ரீலங்கா அரசாங்கம் அதன் உயர்மட்டத்தில் தமிழ் போராளிகளின் நடவடிக்கைகளின் எழுச்சிக்கு வித்திட்ட காரணங்கள் மற்றும் அத்தகைய வன்முறைகளுக்கு கடந்த கால அரசாங்கங்கள் ஆற்றிய பங்களிப்புகள் பற்றி பிரதிபலிக்க வேண்டிய ஒரு நாள்.
ஆட்சியை பொறுத்தமட்டில் சில முக்கியமான காரணங்கள் உள்ளன – அதாவது ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு தொடர்பான புவிசார் அரசியல் நிலவரம் – அது யுத்தத்துக்கு பின்னான கட்டத்தின் அரசாங்கத்தின் கொள்கையில் பங்கு கொள்கிறது. மிகவும் முக்கியமானதும் எதிர்கால செயல்பாட்டின் மையப் புள்ளியாக இருப்பதும் வடக்கு மற்றும் கிழக்கு ஸ்ரீலங்காவின் உள்ளுர் மக்களை வரைமுறைக்கு உட்படுத்துவதற்காக அடக்கு முறையை பிரயோகிப்பதை சாத்தியமான அளவு தவிர்ப்பதற்கான வழியை தேடுவதே. இது வெளிப்படையாக பல்வேறு வகையான வரம்புகளுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் ஸ்ரீலங்காவின் வேறு இடங்களில் இடம்பெறவில்லை என்று அர்த்தப் படுத்தவில்லை. இன்றைய நாளின் தேவைக்குரியது, அடிப்படை உரிமைகள் மீது அதன் தர்க்க ரீதியான அதிகாரமளித்தலுடன் பாலின நீதி மற்றும் சமத்துவத்துக்காக ஊடறுத்துச் செல்லும் நிலைய்hன ஒரு கவனிப்பு.