
பல நுாற்றாண்டுகளுக்கு முன், சித்தர்கள் கண்டறிந்த ஓர் உண்மைக்கு, இன்று தான் அறிவியல் உலகம் விளக்கம் கண்டுபிடித்திருக்கிறது. மூச்சை மையப்படுத்தி தியானம் செய்வதால் மன ஒருமைப்பாடு, நேர்மறை எண்ணங்கள் ஏற்படும் என்பது சித்த வைத்தியம் மற்றும் ஆன்மிக பயிற்சிகளின்அடிப்படை.
மூச்சை கட்டுப்படுத்துவது, மூச்சின் மீது கவனம் வைத்து தியானிப்பது, ஆகிய பயிற்சிகளின்போது இத்தகைய மாற்றம் ஏற்படுவது ஏன் என்பதை, மேற்கத்திய விஞ்ஞானத்தால் அண்மைக்காலம் வரை விளக்க முடியவில்லை.
இது குறித்து ஆராய்ந்த அயர்லாந்திலுள்ள டப்ளின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மூளையில் சுரக்கப்படும் ‘நோராட்ரினலின்’ என்ற வேதிப்பொருள்தான் மன ஒழுங்கிற்கு காரணம் என கண்டறிந்துள்ளனர். தியானம், மூச்சுப் பயிற்சி ஆகியவற்றின்போது நோராட்ரினலினின் சுரப்பு சீராக இருக்கிறது.நியூராட்ரினலின் அதிகம் சுரந்தால் கவனச் சிதறல் ஏற்படுகிறது. குறைவாக சுரந்தால் மனம் மந்தமடைகிறது. இந்த வேதிப்பொருள் சரியான அளவில் சுரக்கும்போது மன நிலை சீராகி, மன ஒருமைப்பாடும், நேர்மறை சிந்தனைகளும் ஏற்படுகின்றன.
மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் போன்றவை நோராட்ரினலினை கட்டுப்படுத்தக்கூடியவையாக இருப்பதே இந்த நல்ல விளைவுகளுக்குக் காரணம் என அயர்லாந்து விஞ்ஞானிகள் ‘சைக்கோ பிசியாலஜி’ இதழில் தங்கள் கண்டுபிடிப்பை விவரித்துள்ளனர்.