மூட்டுவலியை சரிசெய்யும் ஆளி விதை

345

மூட்டு வலியை சரிசெய்ய கூடியதும், சிறுநீர் பெருக்கியாகவும், உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது, தாய்பால் சுரப்பை அதிகரிக்க கூடியது, சீத கழிச்சல், மூலத்துக்கு மருந்தாக இருப்பது ஆளி விதை.

ஆளி விதை பல்வேறு நன்மைகளை கொண்டது. இது அற்புதமான மருந்தாகி, உள் உறுப்புகளுக்கு பலம் தரக்கூடியது. உயிரணுக்களை அதிகப்படுத்தும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். ஆஸ்துமாவுக்கு மருந்தாகிறது. ஆளி விதை உடலுக்கு பலம் கொடுக்க கூடியது.  இது சிவப்பு அரிசியை போன்று இருக்கும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ஆளி விதையை வாங்கி சுத்தப்படுத்தி பொடி செய்து வைத்துக் கொண்டு மருந்துக்கு பயன்படுத்தலாம்.

ஆளி விதையை பயன்படுத்தி சிறுநீர் சுருக்கு, சீத கழிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் ஆளி விதை பொடியுடன், அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்க்கவும். பின்னர், நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும். இது சிறுநீர் பெருக்கியாகிறது. கழிச்சல், விக்கல், வயிறு பொருமல் போன்றவை குணமாகும். ஆளி விதையானது மூட்டு மற்றும் கணுக்காலில் ஏற்படும் வீக்கம், வலியை குறைக்கும். மாதவிலக்கை சீர்செய்யும். தாய்பால் சுரப்பதற்கு இது பயன்படுகிறது. விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

ஆளி விதையை பயன்படுத்தி தாய்பாலை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: ஆளி விதை பொடி, நெய், சர்க்கரை, காய்ச்சிய பால். அரை ஸ்பூன் நெய் எடுத்து உருக்கியதும், அதனுடன் ஒரு ஸ்பூன் ஆளி விதை பொடியை சேர்த்து லேசாக வறுக்கவும். நீர்விட்டு வேக வைக்கவும். ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். பின்னர், காய்ச்சி பால் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். இது பால் சுரப்பை அதிகரிக்கும். விந்தணு குறைபாட்டை சரிசெய்யும்.

கருவுற்ற தாய்மார்கள் ஆளி விதையை தவிர்ப்பது நல்லது. கருச்சிதைவு ஏற்படும் என்பதால் முதல் 3 மாதங்கள் இதை எடுத்துக்கொள்ள கூடாது. ஆளி விதை பொடியை, நெய்யுடன் வறுத்து சர்க்கரை சேர்த்து எள் உருண்டை போன்று செய்து சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்படும். மாதவிலக்கு சரியாக வராதவர்கள் ஆளி விதையை எடுத்துக்கொண்டால் மாதவிலக்கு தூண்டப்படும். வாதத்தினால் மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கத்தை போக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.

ஆளி விதை பொடியுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதில் சிறிது நீர்விட்டு பேஸ்ட் போன்று தயாரிக்கவும். வலி, வீக்கம் உள்ள இடங்களில் பத்துபோன்று பூசினால் வலி சரியாகும். ஆளி விதையை பயன்படுத்தி மூலத்துக்கான மேல் பூச்சு மருந்து தயாரிக்கலாம். விளக்கெண்ணையுடன் ஆளி விதை பொடி சேர்த்து தைல பதத்தில் காய்ச்சவும். இதை துணியில் வடிகட்டிய பின், ஆசனவாயில் பூசும்போது மூலம் குணமாகும்.

SHARE