தாய், சிசுவை கைவிட்டு சென்றுவிட்டதாக கூறிய, பெண்ணொருவர் அந்த சிசுவை தம்புள்ளை பொலிஸில் ஒப்படைத்துள்ளார்.
சிசுவை பொலிஸில் ஒப்படைத்த பெண்ணும் குழந்தையின் தாயும் கனேமுல்ல பிரதேசத்துக்கு வேலைக்கு சென்றபோதே அறிமுகமாகிக்கொண்டனர் என்று தெரியவருகின்றது.
அவ்விருவரும் கனேமுல்ல பிரதேசத்திலிருந்து கொழும்பு கோட்டை பஸ் நிலையத்துக்கு கடந்த 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வருகைதந்துள்ளனர்.
மலசலக்கூடத்துக்கு போய்வருவதாகவும் அதுவரையிலும் குழந்தையை வைத்துகொள்ளுமாறு கூறி தன்னிடமிருந்த சிசுவை அந்த பெண்ணிடம் கொடுத்த தாய், பின்னர் திரும்பவே இல்லை.
சிசுவை வாங்கிய கலேவெல பிரதேசத்தைச்சேர்ந்த திருமணம் முடித்த 21 வயதான பெண், அந்த சிசுவுடன் கலேவெலயில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு சென்று தன்னுடைய கணவரையும் அழைத்துக்கொண்டு தம்புள்ளை பொலிஸ் நிலையத்துக்கு சென்று சிசுவை, பொலிஸில் கையளித்துள்ளனர்.
சிசுவை பொலிஸில் கையளித்த பெண்ணையும் அவரது கணவரையும் கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்திய போதே மேற்படி விவரங்கள் வெளியானது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளுக்காக அந்த பெண்ணும் அவரது கணவரும் பொலிஸில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். சிசுவை , தம்புள்ளை ஆதாரவைத்தியசாலையின் குழந்தைகள் வாட்டில் ஒப்படைத்துள்ளதாகவும் அச்சிசு சுகதேகியாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள பெண்ணிடமிருந்து கிடைக்பெற்ற தகவல்களின் அடிப்படையில் சிசுவின் தாயை தேடி வலைவிரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.