மூவினங்களும் நாம் இலங்கையர் என்ற பொது அடையாளத்தை ஏற்றுக் கொள்வது எப்போது?

153

ஆடு நனைகின்றது ஓணாய் அழுவது அரசியலில் சர்வசாதாரணம். அது நாம் வழக்கமாக அரசியல் மேடையில் நாளும் காணும் அரசியல் அரங்கேற்றங்கள.; அது இப்போது தாரளாமாக நடந்து கொண்டிருக்கின்றது.

கதிரைகளைக் கைப்பற்றுவதற்காக மக்கள்மீது அனுதாபம் காட்டும் கண்துடைப்புக்கள்.
ஓணாயும்; ஆடும் ஒன்றாக ஒற்றுமையாக இருக்கும் அற்புதம் நிகழும் என்ற எதிர்பார்ப்புடன் கிறிஸ்தவர்கள் இருக்கும் நிலையில், இலங்கையில் சிங்கள, தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றாக சமத்துவமாக இலங்கையர் என்ற அடையாளம் தாங்கி நிற்பது எப்போது? என்ற சிந்தனையை தவிர்க்க முடியவில்லை.

இலங்கை அரசியல்வாதிகள் எல்லோரிடமுமே இனத்துவம் என்ற குரலே ஓங்கி ஒலிக்கின்றது. அது முற்றாக தவிர்க்கப்பட்டுவிட்டால் அரசியல்வாதிகள் விலாசம் இழப்பார்கள் என்பதே உண்மையாகும். அதில் தமிழ் முஸ்லிம் கட்சிகளும் விதிவிலக்கல்ல.

இலங்கை அரசியலில் இன முரண்பாடுகளை, 24 மணிநேரத்தில் தனிச் சிங்கள சட்டத்தை தனது கட்சிக்கு மூலதனமாக கொண்டுவந்து ஆரம்பித்து வைத்தார் பண்டாரநாயக்கா. அன்றிலிருந்து, இனத் துவேசத்தில் குளிர்காயும் அரசியல்வாதிகள் உருவாக தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கென தனி தனிக் கடசிகளும் தோற்றம் பெற வைத்துவிட்டன. நடுநிலை அரசியல்வாதிகள் பிரகாசிக்கவில்லை. அவர்கள் காணாமல் போய் கனகாலமாகிவிட்டது.

இனத்துவேசம் சிங்கள மக்களிடம் உருவாவதற்க தமிழ் தரப்பும் ஒரு காரணமாக இருந்திருக்கின்றது என்பதை மறைப்பதற்கில்லை. அன்று சோல்பரி ஆணைக்குழுவிடம் தமிழர்களுக்கு ஐம்பதுக்கு ஐம்பது வேண்டும் என்று விடாப்பிடியாக அமரர் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் அடம் பிடித்ததும் சிங்கள மக்களிடம் சினத்தை தூண்ட வைத்தது. இனத்துவேசத்தை ஆரம்பித்து வைத்தது.

அப்போதே எமக்கான தீர்வுக்கான சந்தர்ப்பத்தைக் கை நழுவ விட்டோம். இன்று அதன் விளைவை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். அன்றைய சந்தாப்பம் நிர்ப்பந்தம் ஏதுமின்றி இதயசுத்தியுடன் மேற்கொள்ளப்பட்டது.

இந் நிலையில் எந்த சிங்கள, தமிழ். முஸ்லிம் கட்சிகளும் அந்த இனத்துவ கோட்பாடோடுதான் அதைக் கைவிடாமல், கட்டிபிடித்துக் கொண்டிருக்கின்ற அவல நிலையையே காண்கின்றோம்.

இலங்கை இனப் பிரச்சனையைப் பொறுத்தவரையில் மொழி ரீதியாக ஒரே இனமாகக் கணிக்கப்படுகின்ற தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகள் அடிப்படை உரிமைப் பிரச்சனையை வென்றெடுக்க மட்டுமாவது, ஒன்றிணைந்து செயற்படுகின்ற நிலமை இன்னும் முழுமையாக எட்டப்படவில்லை. இது துர்அதிஸ்டவசமானது.

எனினும் இந்த அரசியல் தீர்வு நோக்கிய பயணத்தில், இக்கட்டான ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கையில் நடைபெற இருக்கும் உள்ளுராட்சி தேர்தல், தமிழ் முஸ்லிம் கட்சிகளில் பிளவுகளையும் ஆசனப்பகிர்வுகளில் முரண்பாடுகளையும் தோற்றுவித்து, கடசிகளின் இருப்புக்களை ஆட்டம்காண வைத்திருக்கின்றன. இது மிகவும் கவலையளிக்கின்ற விடயமாகும்.

இதில் தமிழ்தேசிய கூட்டமைப்பம், முஸலிம் காங்கிரசும் பலத்த தலையிடியில் இருக்கின்றன. இக் கட்சிகளின் இந் நிலைக்கு காரணம் தலைமைகளின் ஆளுமையில் உள்ள குறைபாடுகளும். தலைமைகளின் தன்னிச்சையான முடிவுகளும். கொழும்பு அல்லது யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து, தீர்மானங்களை மேற்கொள்வதுமாகும். தொண்டர்களை புரிந்துணர்வுக்குள்ளாக்குவதற்கான செயற்பாடுகள் செயலிழந்தமையுமாகும்.

எனினும் இந்த குட்டித்தேர்தலுக்காக களமிறங்கியுள்ள கட்சிகளிடம் குத்து வெட்டுக்களும் குத்திக் கரணங்களும்தான் மேலோங்கியிருக்கின்றன.இது கொள்கையை மையப்படுத்தியல்லாமல் தலைவர்களைக் காப்பாற்றிக் கொள்கின்ற தேர்தலாகவே அமைந்திருக்கின்றது. தொண்டர்கள் வழக்கம்போல பலிக் கடாக்கள்தான். இதையே இத்தேர்தலும் உணர்த்த தவறவில்லை.

தமிழ் மக்கள் மலைபோல் நம்பியிருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு, இன்று மயிர்போல் ஆகிவிட்டதோ என்று தமிழ் மக்கள் ஆழ்ந்த கவலையில் இருக்கின்றனர். சொந்த வீடே வெடித்துக் கொண்டிருக்கின்றதே, எப்போ விழுந்துவிடுமோ என்ற ஏக்கத்தில் இருக்கின்றார்கள். வீடும் தரைமட்டமாகி விட்டால் தங்களுக்கு போக்கிடம்ஏது என்ற அச்ச உணர்வில் இருக்கின்றார்கள். தாங்கள் எடுப்பார் கை பிள்ளைகளாக நிரந்தர அடிமைகளாக ஆகிவிடுவோமா? ஏன்ற அவநம்பிக்கையில் இருக்கின்றார்கள்.

அதே நிலைதான் முஸ்லிம் காங்கிரசுக்கும் முஸ்லிம் பகுதியில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கிழக்கில் ஏற்பட்டுள்ளது. விருட்சமாக இருந்து நிரந்தர நிழல் கொடுத்து முஸ்லிம அபிலாசைகளை வென்று கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் வேட்டு விழுந்த நிலையைத்தான் காண்கின்றோம்.

ஏனேனில் தலைவர் அஸ்ரப்பால், அழகிய முதிர்ந்த விழுதுகள் நிறைந்த விருட்சமாக அழகுபார்க்கப்பட்ட , வளர்த்தெடுக்கப்பட்ட அபார வளர்ச்சிபெற்ற மரம் இன்று முக்கிய விழுதுகளான ஹரிஸ். சேகுதாவுத் போன்றோர் வெட்டப்பட்ட நிலையில் பொலிவிழந்து காணப்படுகின்றது. இதை முஸ்லிம் சமூகமும் பொறுத்துக் கொள்ள முடியாமல் தவிக்கின்றது. மரமே பிழந்து சரிந்துவிடுமோ என்ற சிந்தனை அவர்களிடமும் இருக்கின்றது.

ஓட்டு மொத்தமாக பார்க்கையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தமிழ் மக்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பையும், முஸ்லிம் மக்கள் முஸலிம் காங்கிரசையும் தான் நம்பி இருந்தார்கள் என்பதற்கு மாற்றுக் கருத்து முன்வைக்கப்பட்டாலும் கூட உண்மை அதுதான். உலக அரங்கின் நிலைப்பாடும் அதுதான்.

இரு கட்சிகளுமே இரு சிறுபான்பைச் சமூகமும் ஒன்றுபட்டு அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டுமென்பதில் ஒத்த கருத்துக் கொண்டவை. எனவே தான் இரு கட்சிகளின் பிளவுகளையும் சுயநலத்துடன் நோக்கமால மக்கள் சுய மரியாதையுடன் நோக்குகின்றார்கள்.

இரு கட்சிகளின் சரிவுகளுக்கும் அந்தந்த தலைவர்களே நோக்கியே சுட்டுவிரல்கள் குறிவைப்பதைக் காண்கின்றோம். காய்த்தமரம் கல்லெறி படுவது இயற்கைதான். காய்க்கான பூவை கூட இவர்கள் கண்டு கொள்ளாமையே அதற்கு முக்கிய காரணமாகும். அதற்கு தலைமைகளின் தன்னிச்சையான சர்வாதிகாரப் போக்கும், மட்டக்களப்பு. அம்பாறை மாவட்டங்களைப்; பொறுத்தவரையில,; பிரதேச தலைவர்களை ஒரம் கட்டிவிட்டு, தாமாக தலைக் கனத்துடன் பிரதேசம் பற்றி எடுக்கும் ஒருதலைப்பட்ச முடிவுகளுமாகும்.

இது இரு மாட்டங்களுக்கு அப்பாலும் வியாபித்திருப்பதையே அண்மைக்காலமாகக் கண்டு கொண்டிருக்கின்றோம். அதன் அறுவடைதான் இன்று நடக்கும் அரசியல் அவலங்கள். அந்த போக்கை தட்டிக் கேட்டும் தகுந்த பரிகாரம் இன்மையால்தான் இன்று தனி வழி நிற்க முயற்சிகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.

இது தமிழ் தேசிய கூட்டமைப்பிலும எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய ஏதுநிலை காணப்படுகின்றது. இதுபற்றி கிழக்கில் பொதுவாக மட்டக்களப்பில் உள்ள புத்தி ஜீவிகள் எதிர்காலத்தில் பிராந்திய ரீதியாக அமைப்பொன்றை ஏற்படுத்துவது பற்றி சிந்திக்க ஆரம்பித்துள்ளதான தகவலும் இருக்கினற்து.; எது எப்படியிருந்தாலும் எப்படி நோக்கினாலும் இது பேரினவாதிகளுக்கு மட்டுமே சந்தோசத்தை ஏற்படுத்தும்.

முஸ்லிம் காங்கிரசைப் பொறுத்தவரை அஸரப் அவர்களின் மறைவுக்குப் பின்னர் பிளவுகள் சாதாரணமாக நடந்து கொண்டே இருக்கின்றது. பிரிவதும் பின்னர் சேர்வதும் வழக்கமான செயற்பாடாக அமைந்து வருகின்றது. எனினும் மரத்தை அசைப்பதென்பது வேறு. வீழ்துவது என்பது வேறு. எனினும் மரம் வீழந்;துவிடக் கூடிய நிலைக்கு இன்னும் வரவில்லை என்பதுதான் வரலாற்று உண்மை.

அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது பார்வையைச் செலுத்தினால், மேற் குறித்த காரணங்கள் பொருந்தும். எனினும் அதில் வித்தியாசமாக பார்வையைச் செலுத்த வேண்டியிருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸ் என்னும் போது அது தனிக் கட்சி. தமிழ்தேசிய கூட்டமைப்பு என்னும் போது அங்கே பல கட்சிகள் சேர்ந்த ஒரு அமைப்பு. வடக்கு கிழக்கிற்கு உரிய கட்சி. ஆயுதப் போராளிகள் ஜனநாயக வழிக்குத் திரும்பியபின் அவர்களையும் கட்சி ரீதியாக உள்வாங்கிய அமைப்பு. அதில் தமிழரசுக் கட்சியே பிரதான இடத்தில் இருக்கின்றது..

எனவே கூட்டுப் பொறுப்பு என்பது அதன் அடிநாதமாக இருக்க வேண்டும். அது அங்கே இல்லை என்பதே அடிப்படைக் காரணம். இந்த குட்டித் தேர்தலின் போது உள்வீட்டுப் பிரச்சனை அம்பலமாக்கப்பட்டுவிட்டது. பாராளுமன்ற தேர்தலை எதிர் கொள்ள நேர்ந்தால் என்னாகும் என்பது கற்பனை பண்ண முடியாதிருக்கின்றது. இதற்கு அவ் அமைப்பில் உள்ள அத்தனை கட்சிகளுமே பொறுப்பு.

ஒரே நோக்கத்திற்காக ஒன்று சேர்ந்தவர்கள் கட்சி என்ற சுய இலாபத்திற்காக பொது எதிரிக்கு தீனி போடுவதைதான் பொறுத்துக் கொள்ள முடியாதிருக்கின்றது. குறிப்பாக போராளிகளாக இருந்து செய்த அளப்பரிய தியாகங்களுக்கு அரசியல் களத்தில் புகுந்து அரசியல் கதிரைகளுக்காக ஆளையாள் சேறு பூசுவது விரும்பத்தக்கதல்ல. இதையா தமிழ் மக்கள் அவர்களிடம் எதிர்பார்க்கின்றார்கள்?

எமது கடந்த 3தசாப்தகால வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்க வேண்டிய சந்தர்ப்பம். போரளிகளாக இருந்து இனத்திற்காக உயிரை கையில் பிடித்து ஆயிரம் ஏந்திப் போராடியவர்கள்.. ; இனத்திற்காக ஒரே நோக்குடன் இன்றுவரை இருப்பவர்கள்.

ஆயுதப் போராட்டத்தில் வல்லரசுகளின் கோரக் கரங்கள் அவர்களை பிளவுபடுத்தியது. சகோதரப் படுகொலைகளுக்கு அனுமதித்தது. காட்டிக் கொடுக்கச் சொன்னது. கடைசியில் எல்லாம் இழந்து ஆண்டி ஆக்கியது.

அதைச் சிறந்த பாடமாக கொள்ளாமல் அதே நிலையை தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஏற்படுத்தி பிளவுகளுக்கு வழிவகுத்து வழிமாறிச் செல்வது வலிந்து பேரினவாதிகளுக்கு எமது பலவீனத்தை வெளிப்படையாக காட்டுவதுபோல் ஆகிவிடும். இதற்கும் வெளிநாட்டுச் சக்திகள் (போராளிகளைப் பிரித்துச் சின்னாபின்னப் படுத்தியதுபோல்) கூட்டமைப்பையும் சிதைக்க முயற்சிக்கின்றதா? ஏன்ற கேள்வியம் எழத்தான் செய்கின்றது.

அண்மையில் யாழ் மேயர் சம்பந்தமாக வெளியிடப்பட்ட அறிக்கைகளும், மறுப்புக்களும் தமிழ்தேசிய கூட்டமைப்பில் கூட்டுப் பொறுப்பு என்பது இல்லை என்பதையே வெளிப்படுத்தியுள்ளது. பொறுப்பவாய்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற வீட்டிற்குள் இடையில் குடிபுகுந்து உயர்மட்ட தலைவர்களாக இடம் பிடித்து ஏற்படுத்திவரும் குழப்பங்களில் இதுவும் ஒன்று. மறுதலையாக வீடு எனக்கே சொந்தம் என வாதிடுவதைப் போன்றது. ஆனால் தீர்ப்பு என்பது இழுபடடுச் சென்று கோவையே காணாமல் போன கதையாகிவிடும். தொடர்ந்தால் எல்லாமே தொலைதூரத்திற்குச் சென்றுவிடும்.

சிங்கள கட்சிகளாக இருந்தாலும் சரி;, தமிழ் கட்சிகளாக இருந்தாலும சரி; அவைகள் முதன்மைப்படுத்துகின்ற ஒரே விடயம் தேசியம் என்ற ஒரே சொல்தான். அது இனம் சார்ந்து வெளிப்படுத்தப்படுவதுதான் இன ஒற்றுமைக்கு சவாலாக இருக்கின்றது. நாம் இலங்கையர் என்ற சிந்தனையை முளையிலேயே கிள்ளிவிடுவதாக அமைகின்றது.

அரசியல் கட்சிகள் நாம் இலங்கையர் என்ற சிந்தனையை உருவாக்காமல், நான் சிங்களவன். பௌத்தன், தமிழன், முஸ்லிம் என்ற விரோத சிந்தனைiயையே விதைத்து வருகின்றன. அதற்காக இனங்களுக்கிடையே சந்தேகங்களை வளாத்து வருவதிலேயே ஆர்வமாக இருக்கின்றன. அப்படித்தான் தங்கள் தங்கள் கட்சிகளை தக்க வைத்துக் கொள்ளுகின்றன.

தீர்வு என்று வரும்போது தமிழ் முஸ்லிம் தலைமைகள் ஒரே குரலில் பேச வேண்டிய தருணம் இது. இணைந்து செயற்பட வேண்டிய தருணம் இது. இதற்கு உதாரணமாக கடந்த கிழக்கு மாகாண சபையில் இரு பிரதான தமிழ் கட்சிகளும் செய்த இணக்கப்பாட்டு ஆட்சி. இது இரு சிறுபான்மையினமும் பேரினவாதத்திற்கு அடிமையாகாமல் எம்மை நாமே ஆள முடியும் என்பதற்கான அத்திவாரம்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு கிழக்கை பேரினவாத கட்சிகளிடம் ஒப்படைத்துவிடக் கூடாது என்பதற்காக பாரிய விட்டுக் கொடுப்புக்களைச் செய்தே முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கிழக்கின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. முதலமைச்சர் பதவியையும் விட்டுக் கொடுத்தது.

எனவே இந்த பக்குவத்தை இரு கட்சிகளும் பாதுகாப்பதே முக்கியம். இன்றைய தேவையும் கூட. ஆனால் அதைச் சிதைப்பதுபோல் இருபக்க அரசியல்வாதிகளும் பகிரங்கமாக கருத்துக்களை தற்பெருமைக்காக வெளியிட்டுவருவது ஆரோக்கியமாக இருக்காது. இது நாம் தீர்வை நெருங்கவிடாமல் தடுப்பதற்கே உதவும்.

7பேர் உறுப்பினர்களாக இருந்தும் கிழக்கு முதலமைச்சராக நாமே இருக்கின்றோம் என்று தம்பட்டம் அடிப்பதும், வடக்கு கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என வன்முறையை ஞாபகப்படுத்துவதும் யானைச் சின்னத்தில் நாமிருந்தாலும் பாகனாகத்தான் நாமிருப்போம் என இறுமாப்புடன் பேசுவதும், மறுபுறமாக முஸ்லிம்களின் கொட்டத்தை அடக்கவே தேர்தலில் நிற்கிறேன் என்பதும் நிச்சயமாக தமிழ் முஸ்லிம் இணக்கப்பாட்டிற்கு இடையூறாகவே இருக்கும்.

எனவே அரசியல் நேர்மையுடன்; இரு சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்பார்ப்பிற்கு சாதகமான கருத்துக்களையே தலைவர்கள் முன்வைக்க வேண்டும். இதில் எந்த சுயநலமோ சுய விளம்பரமோ இருக்கக் கூடாது. யார் குத்தினாலும் அரிசியானால் போதும் என்ற பெருந்தன்மை காட்ட வேண்டும்.

முன்னாள் முதலாவது வடக்கு கிழக்கு முதலமைச்சர் வரதராஜப்பெருமாளும் காணாமல்போய் இவ்வளவகாலமும் ஒதுங்கியிருந்து தீர்வுக்கான ஆய்வில் இறங்கியிருந்தாரோ என்னவோ திடீரென வந்து. குட்டித் தேர்தலில் முகம் காட்டிய கையோடு தீர்வுக்கு தமிழ் முஸ்லிம் இணைந்த செயற்பட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி நல்லதொரு கருத்தை முன்வைத்துள்ளமையானது இங்கு குறிப்பிடத் தக்கது. வரவேற்கத்தக்கது. அவரும் சொன்னதோடு நில்லாமல் அதற்கான பங்களிப்பைச் செய்ய வேண்டும்.

அழுதழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும். எனவே தமிழ் முஸ்லிம் இணைந்து செயற்பட்டாலொழிய அழுது புரண்டாலும் தீர்வென்ற குழந்தை பிரவசமாகாது. அறுவைச் சிகிச்சையும் ஆகாது. அவ்வாறு செய்தால் தாயும் சேயும் தவறும் அபாயம்தான். இந்திய டாக்டர் அல்லது அமெரிக்க டாக்டர் வருவார் அல்லது ஐக்கிய நாடுகள் சபை டாக்டர் வருவார் என்ற எதிர்பார்பெல்லாம் ஏமாற்றத்தைத்தான் அளிக்கும். அதைவிட உள்ளுர் மருத்துவிச்சி நிபுணத்துவம் வாய்ந்தவளாக இருப்பாள் என்ற நம்பிக்கையை நாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நாம் இலங்கையர் என்ற ஐக்கியம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். உணர்வுபூர்வமாக உருவாக்கப்பட வேண்டும்.

SHARE