மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாளில் இந்திய அணி, 9 விக்கெட் இழப்புக்கு 500 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் 304 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி.
மேற்கிந்தியத் தீவுகளின் கிங்ஸ்டன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 52.3 ஓவர்களில் 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிளாக்வுட் 62, சாமுவேல்ஸ் 37 ரன்கள் எடுத்தனர். இந்தியத் தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுளையும், முகமது சமி, இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 303 பந்துகளில் 3 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 158 ரன்கள் குவித்தார். கேப்டன் விராட் கோலி 44 ரன்கள் எடுத்தார்.
நேற்று தன் பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார் ரஹானே. அவர் 231 பந்துகளில் சதம் எடுத்தார். விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா 47 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 500 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் 304 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ரஹானே 108 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.