குர்திஷ் படையின் கட்டுப்பாட்டில் இருந்த மேலும் பல சர்ச்சைக்குரிய பகுதிகளையும் ஈராக் அரச படை கைப்பற்றியுள்ளது. இதில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவிடம் இருந்து மூன்று ஆண்டு மோதலில் குர்திஷ் பெஷ்மர்கா படையினரால் மீட்கப்பட்ட மொசூல் அணை உட்பட நின்வேஹ் மாகாணத்தின் பகுதிகளையும் ஈராக் இராணுவம் கைப்பற்றியுள்ளது. முன்னதாக ஈராக் இராணுவம், பொலிஸ் மற்றும் சிறப்புப் படையினர் எண்ணெய் வளம் கொண்ட கிர்குக் நகரை குர்திஷ் படையிடம் இருந்து மீட்டது.
ஈராக்கின் தன்னாட்சி பெற்ற குர்திஷ் பிராந்தியம் தனிநாடாக பிரிவதற்கு சுதந்திர வாக்கெடுப்பொன்றை நடத்தி சில வாரங்களிலேயே குர்திஷ் படைக்கு எதிராக ஈராக் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.
எனினும் கிர்குக்கில் இருந்து குர்திஷ் படை மோதல் இன்றி பின்வாங்கியது. தற்போது அந்த நகர் ஈராக் இராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குர்திஷ் படை ஏனைய பிரச்சினைக்குரிய பகுதிகளில் இருந்தும் பின்வாங்கியுள்ளது.