
மே 18ஆம் திகதி இடம்பெறவுள்ள இராணுவ வெற்றி தினத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த விழாவில் இம்முறை அவர் கலந்துகொள்ள முடியாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைதியான முறையில் இம்முறை வெற்றி தினம் கொண்டாடப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டது.இந்த தகவலை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதில் அரசியல் மேடைகளுக்கு எந்த அனுமதியும் இல்லை என்பதனாலேயே அழைக்கப்படவில்லை என்றும் இம்முறை இராணுவ வெற்றி தினத்தில் யுத்தத்தில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தவும், இராணுவ வீரர்களை கௌரவப்படுத்துவதற்குமான நிகழ்வுகளும் நடைபெறும் என்றும் கூறிய அவர் அதை தவிர எவரது புகழும் இதில் பறைசாற்றப்படாது என்றார்.
அத்துடன் எளிமையான வகையில் இராணுவ வெற்றி தினத்தை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அனாவசியமான செலவுகள், அனாவசியமான விளம்பரங்கள் அனைத்தையும் நாம் நிராகரித்துள்ளதாகவும் கூறினார்.
அத்துடன் இன ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் செயற்பட தயாராகியுள்ளதாகவும் அதை குழப்பும் எந்த நடவடிக்கைக்கும் அரசாங்கம் இடமளிக்காது என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன மேலும் தெரிவித்தார்.