மைத்திரிக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

582
கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் தேசிய சங்க சம்மேளனம் தற்போது பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றது.

தற்போதைய அரசாங்கத்தினால் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், அரசாங்கம் இராணுவத்தினரை விசாரணைக்கு உட்படுத்தி வருவதாகவும், அதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என அறிவித்துள்ள தேசிய சங்க சம்மேளனம், இந்த ஆர்ப்பாட்டங்கள் பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை வரை நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த தருணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பிரசன்னமாகியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் படங்களை ஏந்தியவாறு உள்ளதாக அவர் கூறினார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருட பூர்த்தி நிகழ்வுகள் இன்றைய தினம் நடாத்தப்பட்டு வருகின்ற நிலையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் பாரிய வாகன நெரிசல்

இதேவேளை, ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்ற பகுதிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க, விமல் வீரவங்ச, மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட மேலும் பல அரசியல்வாதிகள் பிரசன்னமாகியுள்ளனர்.

அத்துடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக முன்னோக்கி வருகைத் தந்து, அரச மரத்தடி சந்தியில் சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதனால் குறித்த பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

SHARE