மைத்திரியை அடுத்தவாரம் சந்திக்கின்றது பரணகம குழு

308
காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்திவரும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அடுத்தவாரம் சந்திக்கவுள்ளது. ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலேயே மேற்படி குழு ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளது. இதன்போது தமது ஆணைக்குழுவின் பதவி காலத்தை மேலும் ஆறுமாத காலத்துக்கு நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் ஆணைக்குழுவினர் கோரிக்கை விடுப்பர் என அறியமுடிகின்றது. பரணகமகுழுவின் பதவிக் காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. அதன் பின்னர் மேற்படி ஆணைக்குழுவின் பதவி காலத்தை நீடிப்பதா அல்லது கலைப்பதா என்பது தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே இருக்கின்றது.

அந்தவகையில், இந்த ஆணைக்குழுவை கலைப்பதற்குரிய முடிவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுப்பார் என அறியமுடிகின்றது. பரணகம ஆணைக்குழு கலைக்கப்பட்ட பின்னர் அதற்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் காணாமல்போனோர் தொடர்பில் அமைக்கப்படவுள்ள பணியகத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் அறியமுடிகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசு வகுத்துள்ள நான்கு திட்டங்களில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக தனி பணியகமொன்றை அமைக்கப்படும் என்ற உறுதிமொழியும் இருக்கிறது. எனினும், தமது ஆணைக்குழுவின் பணிகளை முன்னெடுப்பதற்கு மேலும் காலஅவகாசம் வழங்குமாறு தாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளார் என்று மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார்.

போர்க்காலத்தில் வடக்கு, கிழக்கில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக தமது ஆட்சியின் போது ஓய்வுபெற்ற நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலைமையில் மூவரடங்கிய குழுவொன்றை மஹிந்த ராஜபக்ச அமைத்திருந்தார். இந்த விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில், உள்ளக போர்க்குற்ற விசாரணையை முன்னெடுக்கும் வகையில் அதன் விடயப் பரப்பை மஹிந்த விஸ்தரித்ததுடன், அனைத்துலக சட்டத்திட்டம் தொடர்பில் பரணகம குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக டெஸ்மன்ட் சில்வா தலைமையில் அறுவர் அடங்கிய ஆலோசனைக் குழுவொன்றையும் அமைத்திருந்தார். ஆட்சி மாற்றத்தின் பின்னரும் பரணகம குழுவுக்கு பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்புதல் வழங்கினார். அந்தவகையில் விசாரணைகளை முன்னெடுத்த பரணகம ஆணைக்குழு போர்க்குற்றங்கள் தொடர்பிலான தமது இறுதி விசாரணை அறிக்கையை கடந்த ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதியிடம் கையளித்தது. எனினும், காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை. அண்மையில்கூட யாழில் பொது அமர்வு நடத்தப்பட்டது. இந்நிலையிலேயே ஜனாதிபதியை மேற்படி குழு சந்திக்கவுள்ளது.

953e411b93d6419612c5788a94041a76_XL-436x360 Paranagama-commission-sittings

SHARE