மைத்திரி-ரணில் வைத்த பொறியில் சிக்கிய சம்பந்தன்,சுமந்திரன்,செல்வம் அடைக்கலநாதன்

131

 

தமிழினத்தின் ஆயுதப்போராட்டத்தை மழுங்கடித்த இலங்கையரசு, 03தசாப்த காலத்தில் ஆட்சிபுரிந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழினத்திற்கானத் தீர்வுத்திட்டத்தில் மாற்றம் எதனையும் கொண்டுவரவில்லை. படிப்படியாக காலதாமதத்தை நீடித்து 83காலப்பகுதியில் ஒரு அரசியலும், 90களில் மற்றுமொரு அரசியலையும், 95இல் சமாதானம் நோக்கிய அரசியலையும், 2000ஆம் ஆண்டில் இடைக்கால நிர்வாகம் என்ற அரசியலையும், 2000-2005வரை விடுதலைப்புலிகளைப் பிளவுபடுத்தி அவர்களுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தி அதன் பின்னர் விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதை நோக்காகக்கொண்டே ஆட்சியாளர்கள் செயற்பட்டனர மாற்றம் என்கின்றபோது தீர்வுத்திட்டம் தொடர்பான மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை மாறாக ஒற்றையாட்சியின் கீழ் இருக்கக்கூடிய அதிகாரங்களைப் பயன்படுத்தி சில தீர்வுகள் வழங்கப்பட்டது. உதாரணமாக வடகிழக்கு இணைந்த மாகாணங்களாகவே ஆரம்பத்தில் இருந்துவந்தது. அதனைப் பிரித்தாளும் தந்திரத்தைக் கையாண்டுவந்த மஹிந்த ராஜபக்ஷ த.தே.கூட்டமைப்பின் நிராகரிப்போடு கிழக்கு மாகாணத்தில் வெற்றிபெற்றார்.

பின்னர் வடக்கிலும் ஒரு மாகாணசபைத் தேர்தலை நடாத்தி அதில் மாகாணசபை அமைக்கவேண்டும் என்கிற தீர்மானம் மஹிந்தவின் அரசினால் கொண்டுவரப்பட்டது. மாகாணசபையை ஏற்றுக்கொள்வதா அல்லது கைவிடுவதா என்கின்ற சூழலில் நிர்ப்பந்திக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மாகாண சபையினை ஏற்றுக்கொண்டு அதில் போட்டியிடவேண்டும் எனக்களமிறங்கி, வடக்கில் ஆட்சியையும், கிழக்கில் தோல்வியையும் சந்தித்தது. வடக்கிலும், கிழக்கிலும் தமிழர்களே முதலமைச்சர்களாக வரவேண்டும் என்ற எண்ணத்தோடும் முழு முயற்சியோடும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு செயற்பட்டாலும் கிழக்கில் முஸ்லீம் ஒருவரே முதல்வராக வருவதற்கான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னர் மஹிந்தவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு மைத்திரி-ரணிலின் கூட்டாட்சி ஆரம்பமானது. தற்போது இவர்கள் மிக நுட்பமான முறையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைக் கையாண்டு வருகின்றனர். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைப் பொறுத்தவரை கட்சி சார்ந்தவர்களும் இதில் உள்ளடக்கப்படுகின்றனர். இங்கே அரசியல் தந்திரோபாயமாக தமிழரசுக் கட்சியையும் ஏனைய கட்சியிலுள்ளவர்களையும் அரசாங்கத்திற்குள் இரகசியமாக உள்வாங்குவதன் ஊடாக வெற்றி காண முடியும் என்பதை நன்கு அறிந்த மைத்திரி-ரணில் கூட்டரசு பதவிகளை வழங்கி பணத்தினைக்கொடுத்து இவர்களை தன்வசப்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிப் பதவியினை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு வழங் கியதன் ஊடாக கூட்டமைப்பின் தலை வர் இரா.சம்பந்தன் அவர்களை தன்வசம் ஆக்கிக்கொண்டுள்ளது. தேசியப்பட்டியலில் இருந்த சுமந்திரன் அவர்களை பலகோடி பெறுமதியான பணத்தினை வழங்கி அவரைத் தேர்தலில் களமிறக்கி இவ்வரசே இவரைக்கொண்டுவந்துள்ளது. இன்று அரசின் செல்லப்பிள்ளையாக இவ்வரசு அவரை வழிநடத்துகிறது. ஆயுதக்கட்சிகளின் வாயினை அடைப்பதற்கு ரெலோ கட்சியின் தலைவரான செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு பாராளுமன்றில் குழுக்களின் பிரதித் தலைவர் என்கிற பதவியினை வழங்கியுள்ளது.

இப்பதவியினைவிட்டு செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் இறங்கிவரத்தயாராகவில்லை. செல்வம் அடைக்கலநாதன் அவர்களைவிட அரசியலில் அனுபவம் வாய்ந்த திம்பு முதல் டோக்கியோ வரையான அனுபவங்கள் கொண்ட புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் இப்பதவிக்குப் பொறுத்தமானவர். அவருக்கு இப்பதவியினை வழங்கினால் அதில் எவ்விதபயனும் இல்லை என்பதும் அரசிற்குத் தெரியும். இங்கு மிக முக்கிய விடயம் என்னவெனில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்தால் அது ஆபத்தானது என்பதை இவ்வரசு தமிழரசுக்கட்சிக்கு நன்கு விளங்கப்படுத்திக்கூறியுள்ளது. ஆகவே இவ்வாயுதக்கட்சிகளை எவ்வாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் இணைத்துக் கொண்டு அவர்களின் இருப்பை அழிப்பது என்கின்ற திட்டத்திற்கமைவாகவே இன்று தமிழரசுக்கட்சியினை அரசு கையாண்டுவருகின்றது. அரசினால் உள்வாங்கப்பட்ட இம்மூவரும் அரசின் விசுவாசிகளாகவே செயற்பட்டு வருகின்றனர். தமிழ்த்தேசியக்கூட்ட மைப்பைப் பதிவுசெய்யும் விடயத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் மும்முரமாகச் செயற்பட்டது. ஆனால் இதற்குத் தடையாக ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனே செயற்பட்டார். ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய மூன்று கட்சிகளையும் இணைத்துப் பதிவுசெய்தால் தம்மை தமிழ் மக்கள் ஓரங்கட்டிவிடுவார்கள். எனவே நாம் எமது அரசியலைச் செய்யமுடியாது. மீண்டும் நாம் ஆயுத கலாசாரத்திற்குள் செல்லவேண்டிய நிலைமை ஏற்படும் என்பது அவருக்கு நன்கு தெரியும்.

ஏற்கனவே அரசு வழங்குகின்ற உணவுளை தமது முகாமிற்குள் முடங்கிக்கொண்டிருந்து சாப்பிட்ட வரலாறு மீண்டும் தொடரும் என்பதும் இவ்வாயுதக்கட்சிகளுக்குத் தெரியும். ஆகவே இவ்வாயுதக்கட்சிகளை அரசாங்கத்துடன் இணைத்துச்செல்வதற்கு பிடியாக செல்வம் அடைக்கலநாதனை இலகுவான முறை யில் அரசு கையாண்டு வருகின்றது. சுமந்திரனைப் பொறுத்தவரை இன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஒரு சிறந்த பேச்சாளராக அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படும் ஒருவராக, அன்று சந்திரிக்காவின் ஆட்சியில் இருந்த லக்ஷ்மன் கதிர்காமரைப்போன்றே இன்று இவரின ;செயற்பாடும் அமையப்பெற்றுள்ளது.

ஆயுதப்போராட்டத்தின் வலிகள் பற்றி அறியாதவர் தான் இவர் என்பது உண்மை. ஆனால் மொழித்திறமையினால், அவரது சட்ட வல்லமையினால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலிருக்கும் ஏனையவர்களின் வாயினை அடைக்கவல்லவர். இவர்களைத்தான் கிங்மேக்கர் என அழைப்பர். அரசாங்கத்தைப்பொறுத்தவரை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை எதிர் வரும் காலங்களில் தம்மோடு இணைத்துக்கொண்டு ஒரு தேர்தலை நடாத்தவிருக்கிறது. இலங்கை யிலுள்ளவர்கள் அனைவரும் ஒருமித்த கோட்டிலேயே பயணிக்கிறார்கள் என்பதை வெளியுலகிற்குக்காட்டி, வடகிழக்கு இணைப்பு அவசியமில்லை என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துச்சொல்லவே முயற்சிக்கிறது அரசு. இலங்கை சுதந்திரமடைந்த 1948ஆம் ஆண்டில் தமிழ்த்தலைமைகள் செய்த தவறை மீண்டும் சம்பந்தனும், சுமந்திரனும், செல்வம் அடைக்கலநாதனும் செய்யப்போகிறார்கள். இலங்கையரசு வைத்த பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ள இவர்கள் இந்தப் பொறியிலிருந்து வெளி யில் வந்தால் இவர்களுக்கு ஆபத்து என்பதும் தெரியும். ஆகவே அரசாங்கம் கூறுகின்ற எந்தவொரு விடயத்திற்கும் தலைசாய்க்கவேண்டிய தேவை உள்ளது. இவர்களின் பதவி ஆசைக்காக ஒட்டுமொத்தத் தமிழினமும் பலிக்கடாவாக முடியாது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மற்றும் தமிழரசுக்கட்சியின் போக்கினை, அதன் நெளிவு சுழிவுகளை நன்கு அறிந்துகொண்ட வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் இவர்களுக்கெதிரான செயற்பாடுகளில் தற்போது ஈடுபட்டுள்ளார். இதுவே இன்று தமிழ் மக்கள் பேரவை என்ற ஒன்று உருவாகுவதற்கான முக்கிய காரணம். இதிலும் அரசு இரு விடயங்களைப் பார்க்கின்றது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மற்றும் மாகாண சபையினை பிரித்தாளுவதன் ஊடாக தமது செயற்பாடுகளை இலகுவாக்கிக் கொள்ளமுடியும் என்பதுவே அரசினது நிலைப்பாடு. அதனையே தொடர்ந்தும் அரசு முன்னெடுத்துவருகின்றது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைமை கள் அரசின் பிடியில் இருந்து வருகின்றன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருக்கக்கூடிய உறுப்பினர்கள் ஒரு சிலரே உணர்வுபூர்வமாக செயற்படுகின்றார்கள். இவர்களின் செயற்பாடுகளிலிருந்து தமிழ் மக்களுக்கான தீர்வினைப்பெற்றுக்கொடுக்க வந்தவர்கள் யார்? என்பதனை உறுதி செய்யமுடியும். ஆனால் அரசாங்கம் பணத்தினையும், பதவிகளையும் வழங்கி இவர்களை உள்வாங்கிக்கொண்டுள்ளது. எதிர்க் கட்சிப்பதவி என்பது தமிழ் மக்கள் வரலாற்றில் பெருமைகொள்ளவேண்டிய விடயம்தான். இதனைவைத்து பேரம்பேசும் அளவிற்கு நிலைமைகள் மோசமடைந்தால் அந்தப் பதவியினைத் தூக்கியெறிந்துவிட்டு தமிழ் மக்களுக்காக குரல்கொடுக்கவேண்டும் என்பதுவே தமிழ் மக்களின் விருப்பம். விடுதலைப்புலிகளே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரை உரு வாக்கியவர்கள் என்பதுவே வரலாறு. ஆனால் தான் விடுதலைப்புலிகளால் நியமிக்கப்படவில்லை, தான் ஒரு ஜனநாயகவாதி என்கிறார் சம்பந்தன். தேர்தல் காலங்களில் மாத்திரம் விடுதலைப்புலிகளின் வரலாறு, தேசியம், சுயநிர்ணய உரிமை என மேடைமேடையா கப் பேசிக்கொள்ளும் சம்பந்தன் அவர்கள் தற்போது அரசின் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே செயற்படுகின்றார் என்பது உண்மை. இதற்குப் பல அரசியல்வாதிகள் துணை போயுள்ளனர். எப்போது அரசின் இந்தப்பொறியில் இருந்து இம்மூவரும் வெளியேறுகிறார்களோ அன்றுதான் தமிழ் மக்களுக்கானத் தீர்வுகள் சாத்தியமாகும். இல்லையேல் தமிழ் மக்களுக்கானத் தீர்வுகள் என்பது 10தசாப்தங்களைக் கடந்தாலும்கூட இதுபோன்ற இழுபறி நிலையிலேயே தொடரும். தமிழ் மக்களின் தீர்வுத்திட்டத்தில் இழுபறி களை இவ்வரசு மேற்கொண்டமையினால் ஆரம்பகாலம் எவ்வாறு அமைந்திருந்ததோ மீண்டும் அதேநிலைக்கு தமிழ் மக்களை இவ்வரசியல்வாதிகள் கொண்டு செல்வார்கள். தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையில் நில அபகரிப்பு என்பது முக்கிய இடம்வகிக்கின்றது. இவ்வாறான நிலைமைகள் தொடருமாகவிருந்தால் ஏற்கனவே ஆயுதமேந்திப்போராடியவர்கள் மீண்டும் இதேபாணியில் போராட வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

அவ்வாறு ஒரு சந்தர்ப்பம் மீண்டும் ஏற்படுமாகவிருந்தால் இதனது விளைவு எவ்வாறு இருக்கும் என்பதை வார்த்தைகளால் கூறிவிட முடியாது. தேசியத்தலைவர் பிரபா கரனுடன் இணைந்து பயணிக்கவேண்டிய இவ்வாயுதக்கட்சிகள் தமக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்தி, தமிழ் மக்களுக்கானத் தீர்வு விடயத்தில் ஏமாற்றிப்பிழைப்பு நடத்தியதன் விளைவு இன்றும் தொடர்கதையாய் தொடர்கிறது. குறிப்பாக சம்பந்தன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் இம்மூவரும் தமிழ் மக்கள் விடயத்தில் சிந்தித்துச்செயற்படுவது சிறந்தது. அஹிம்சைப் போராட்டம், ஆயுதப்போராடம் என தமிழ் மக்களது போராட்டங்கள் வலுவடைந்து இன்று உலக நாடுகளே வியக்கும் அளவிற்குக் காணப்படுகின்றது. இன்று மைத்திரி-ரணில் கூட்டரசில் எமது தமிழினம் விற்கப்பட்டுவிடுமோ, எமது உரிமைகள் மறுக்கப்பட்டுவிடுமோ என்கின்ற அச்சம்தான் நிலவுகிறது. ஆயுதக்கலாசாரம் என்ற ஒன்று மட்டும் தற்போது இல்லை. ஏனைய அனைத்து விடயங்களும் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. அரசியல் என்ற அரங்கத்தில் களங்கப்பட்டது கட்சிகள் மட்டுமல்ல, ஒட்;டுமொத்தத் தமிழினமும் தான். அரசாங்கம் வைத்தப்பொறியில் இருந்து மீள்வதாகவிருந்தால் எதிர்க்கட்சிப் பதவி, மாகாணசபைப் பதவிகளைத் துறந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்ற ஒரு கட்சியாக, ஒரு குடையின் கீழ் செயற்பட்டால் தமிழ் மக்களுக்கானத் தீர்வுகள் கிடைக்கும். இல்லையேல் தமிழினம் இலங்கையில் வாழ்ந்தது என்கிற வரலாறு மறைக்கப்பட்டு பௌத்த நாடு என்கிற வரலாறு மீண்டும் எழுதப்படும்.

அரசாங்கம் விரித்த வலையில் நீங்கள் சிக்குண்டுள்ளீர்கள் என அறிந்தும், வேடன் வருவான் வலையை வீசுவான், ஆனால் நாங்கள் சிக்கிக்கொள்ளமாட்டோம் என்று கூறுகின்றீர்கள். இது உங்களையே நீங்கள் ஏமாற்றி தமிழினத்தையும் ஏமாற்றும் செயலாகும். தமிழ் மக்களுக்கு நிலையான தீர்வுகள் வேண்டுமாகவிருந்தால் அரசிற்கு விலைபோகாது தேசியம், சுயநிர்ணய உரிமை என்கிற கோட்டுபாட்டுக்கு அமைய எமது அரசியல் பயணம் தொடருமாகவிருந்தால் அரசின் பொறியிலிருந்து மீண்டு, வடகிழக்கு இணைந்ததுதான் தமிழர் தாயகம் என்றுகூறி, சர்வதேச நாடுகளின் உதவியோடு தீர்வுகளைத் தக்கவைத்துக்கொள்ளமுடியும் என்பதனையே இக்கட்டுரையின் மூலம் உணர்த்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இரணியன்

 

SHARE