
அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் நாளை (ஓகஸ்ட் முதல் திகதி) வரை கைச்சாத்திடப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தங்களுக்கு அளித்த வாக்குறுதியை மீறியுள்ளார் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க சம்மேளனம் குற்றஞ்சு மத்தியிருக்கின்றது.
இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன் தங்களது சம்மேளனத்துடன் நாளைய தினத்துக்கு முன் கலந்துரையாடப் போவதாக வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி, அவசர அவசரமாக இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியிருப்பது பெரும் நம்பிக்கைத் துரோகம்.
நாட்டின் தலைவரொருவர் ஒரே வாரத்தில் தான் கொடுத்த வாக்குறுதியை இவ்வாறு மீறியிருப்பது ஜீரணிக்கவே முடியாத விடயம் எனவும் ஜனாதிபதிக்கு தாங்கள் கடிதமூலம் அறிவித்திருப்பதாக அச்சம்மேளனத்தின் அமைப்பாளர் டீ.ஜே.ராஜகருண தெரிவித்துள்ளார்.
கடந்த 26ஆம் திகதி தாங்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது ஜனாதிபதி மூன்று முக்கிய அமைச்சர்களுடன் தங்களைச் சந்தித்த போது அளித்த இந்த வாக்குறுதியை நம்பியே தாங்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிட்டதாகவும், எனினும், அவர் தங்களை நன்றாக ஏமாற்றி விட்டார் எனவும் ராஜகருண விசனம் தெரிவித்துள்ளார்