அதிக மழையுடனான காலநிலையினைப் பயன்படுத்திக் கொண்டு திருடர்கள் தம் கைவரிசையைக் காட்டத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளநீர் நிரம்பியுள்ள வீடுகள் மற்றும் கடைகள், நிறுவனங்களுக்குச் சென்று திருட்டில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து இவ்வாறான முறைப்பாடுகள் அதிகம் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக 119 என்ற இலக்கத்தை அழைத்து அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று தமது முறைப்பாட்டினை தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகளின் போது சிறுவர்கள் தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்த நிலைமையினை பயன்படுத்திக் கொள்ளும் சிலர் சிறுவர்களை கடத்தல், துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கல் போன்ற செயல்களில் ஈடுபடலாம் எனவும் இது தொடர்பில் பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக 1929 என்ற இலக்கத்திற்கு அழைத்து தகவல் தருமாறும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் கூறியுள்ளனர்.