யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட மூன்று தனியார் காணிகளை விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை ஆராய்வதற்கு ஸ்ரீலங்கா உச்சநீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது.
குறித்த மனுக்கள் தொடர்பில் எதிர்வரும் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் விளக்கமளிக்குமாறு தலைமை நிதிபதி ஸ்ரீபவன் உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் ஸ்ரீலங்கா இராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சம்பந்தப்பட்ட தனியார் காணிகளை ஸ்ரீலங்கா இராணுவம் 2012ஆம் ஆண்டு பலவந்தமாக கையகப்படுத்தியதாக குற்றம் சாட்டினார்.
காணிகளை கையகப்படுத்துபடுத்தும் போது காணி தொடர்பான சட்ட விதிமுறைகளை அணுக இராணுவத்தினர் தவறியுள்ளதாக குற்றம் சாட்டிய சட்டத்தரணி மனுதாரர்களுக்கு நட்டஈடு வழங்கப்படவில்லை எனவும் வலியுறுத்தினார்.
இந்நிலையில், சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்கும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு அவர் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.
எனினும் அரசு தரப்பு சட்டத்தரணி சம்பந்தப்பட்ட காணிகளை யாழ்ப்பாண பிரதேச செயலாளர் சட்டரீதியாக கையகப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
எனினும், தகவலை ஏற்றுக்கொள்ள முடியாதென கூறிய மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சட்ட ரீதியாக கையகப்படுத்தப்பட்டிருந்தால் மனுதாரர்களுக்கு நட்டஈட்டை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் ஏன் தவறியது என கேள்வி எழுப்பினார்.
இந்த மனு தொடர்பில் அரச தரப்பின் விளக்கங்களை கோருவது அவசியமென்று கூறிய நீதிமன்றம் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
அன்றைய தினம் சம்பந்தப் பட்ட காணிகள் கையகப்படுத்தப்பட்ட விதம் குறித்து விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் ஸ்ரீலங்கா இராணுவத்தினருக்கு உத்தரவிட்டது.