நேற்றைய முன்தினம் யாழ் மாவட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் இரு கொடும்பாவிகள் எரிக்கப்பட்டமை தொடர்பில் இதனுடைய பின்னணி என்ன? தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சியினைச்சார்ந்த பூநகரி பிரதேச சபை அங்கத்தவர் ஒருவர் பெண்கள் மீதான பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக குற்றஞ்சாட்டப்பட்டும் இவ்விடயம் தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர்கள் இதனைக் கணக்கெடுக்கவில்லை என்கின்ற காரணங்களை வலுப்படுத்தியே இவ்விருவரினதும் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. இவ்விடயம் தொடர்பாக பதிலளித்த இரா.சம்பந்தன், பூநகரி பிரதேச சபை உறுப்பினர் தொடர்பில் எம்மிடம் எவ்வித முறைப்பாடுகள் கொண்டுவரப்படவில்லை.
தற்பொழுது மாவை சேனாதிராஜா அவர்கள் வெளிநாட்டில் இருக்கின்றார். அவர் வந்தவுடன் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதா? என ஆராயந்து அதற்கான தீர்வுகள் மேற்கொள்ளப்படும். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் இவ்வாறு நடந்துகொள்கின்றார்கள் என நேரடியாக எமது தலைமைப்பீடத்திற்கு தெரியப்படுத்தி, அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளமுடியும். கொடும்பாவிகளை எரித்து இவ்வாறான கருமங்களில் ஈடுபடுவது உகந்த செயல் அல்ல. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மற்றும் தமிழரசுக்கட்சி போன்றவற்றை பலவீனப்படுத்தும் வகையில் செயற்படுகின்றனர். இதனது பின்னணியினையும் நாம் ஆராயவேண்டும்.
பெண்களின் விடுதலை மற்றும் நலன், பாதுகாப்பு பற்றியும் பாராளுமன்றங்களிலும், வெளிநாடுகளிலும் பேசிக்கொண்டிருக்கும் தமிழர்களாகிய நாம் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டிய தேவை இல்லை. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் செயற்பாடுகள் கடந்தகாலங்களில் இருந்து இன்றுவரை நேர்த்தியாக இடம்பெறுகின்றது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மீது சேறுபூசும் வகையில் பலர் செயற்பட்டு வருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய விடயம். அவ்வாறு எமது பிரதேச சபை உறுப்பினர் நடந்துகொண்டிருந்தால் அதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.