யாழில் தொடரும் கொலைகள்

165

யாழில் மீண்டும் ஒரு படுகொலை பொலிஸாரால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. கடந்த மூன்று வருடங்களில் நடந்த இவ்வாறான நான்கு சம்பவங்களில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவரும் அதில் அடக்கம்.இதில் எந்தவொரு கொலைக்கும் இதுவரையில் நீதி வழங்கப்படவில்லை என்பதும் கவனத்திற்குரியது.

இந்த நிலையில் கேட்டுக் கேள்வியின்றி நடக்கும் இத்தகைய அதிகாரக் கொலைகள் நின்றபாடில்லை என்பது கண்டனத்திற்கும் உரியது.

2106ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 20ஆம் திகதி கொக்குவில் குளப்பிட்டியில் பொலிஸார் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரைச் சுட்டுக் கொன்றனர்.

அவர்கள் பொலிஸாரின் சமிக்ஞையைப் பொருட்படுத்தாமல் சென்றதால் அவர்களைச் சுட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

2017ஆம் ஆண்டு ஆடி மாதம் 9ஆம் திகதி துன்னாலையைச் சேர்ந்த இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டார். கள்ள மணல் ஏற்றிச் சென்ற வாகனத்தை நிறுத்தச் சுட்ட போது அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

2017 ஐப்பசி மாதம் 22ஆம் திகதி கொழும்புத்துறை மணியந்தோட்டப் பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.அந்தக் கொலை தொடர்பில் பொலிஸாரின் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மல்லாகத்தில் மற்றொரு இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.

மல்லாகத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த சம்பவத்தில் பாக்கியராஜா சுதர்சன் (வயது 34) என்ற இளைஞன் உயிரிழந்திருக்கிறார்.

சம்பவம் தெல்லிப்பளைப் பொலிஸ் பிரிவிற்குள் நடந்திருக்கின்ற போதும் மல்லாகம் பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர்களே கொலையுடன் தொடர்புபட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை.

வாள் வெட்டுக் குழுக்கள் இடையிலான மோதலைத் தடுக்கச் சென்ற பொலிஸாரை அந்தக் குழுவினர் தாக்க முயன்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

எனினும் வாள் வெட்டுக் கும்பல் ஒன்று ஒருவரை இலக்கு வைத்துத் தாக்க முயன்ற போது அவரைக் காப்பாற்ற முயன்ற இளைஞரே பொலிஸாரின் சூடுபட்டு இறந்தார் என்று நேரில் கண்ட சாட்சிகள் கூறுகின்றனர்.

2016ஆம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் நள்ளிரவில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையும் முதலில் விபத்து என்றே பொலிஸார் கூற முற்பட்டனர் என்பதும் கவனத்திற்குரியது.

யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்று அது தொடர்பில் தனியான விசாரணைக்கும் உத்தரவிட்டு இருக்கிறது.

எனவே குழு மோதலில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரைத் தாக்க முயன்றதால் தான் சுட்டார்கள் என்று கூறப்படும் காரணம் எந்தளவு தூரம் உண்மையானது என்பது கேள்விக்குரியதே.

சம்பவம் இடம்பெற்றதும் அதனுடன் தொடர்புபட்ட பொலிஸார் இருவரும் அந்த இடத்திலிருந்து தப்பியோடி இருப்பதும் சந்தேகத்தைக் கிளப்புவதாக அமைந்திருக்கிறது.

இந்தச் சம்பவங்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவையாகவே இருக்கின்றன. சம்பவ இடங்களில் இருந்த கீழ்மட்ட பொலிஸார் தன்னிச்சையாக முடிவெடுத்து துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருப்பது நான்கு சம்பவங்களிலும் தெளிவானது.

நான்கு சம்பவங்களிலும் சந்தேகநபர்களை எச்சரிக்கை செய்யவோ கைது செய்யவோ நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான சாட்சியங்களும் இல்லை.

இவ்வாறு கீழ்மட்டப் பொலிஸார் தமது துப்பாக்கிகளை மேலதிகாரிகளின் அனுமதியின்றிப் பயன்படுத்துவதற்கான தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் இருந்ததற்கான ஆதாரங்கள் எவையும் இல்லை.

பொலிஸாருக்கு உயிராபத்தை விளைவிக்காத ஒரு சூழ்நிலையில் எடுத்த எடுப்பில் பொலிஸார் தமது ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அதிகார மமதையும் துணிவும் அவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது?

அதுவும் கீழ்மட்டப் பொலிஸார் அவ்வாறு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அதிகாரத்தை எப்படிக் கொண்டிருக்கிறார்கள்?

மேல்மட்ட ஆசீர்வாதம் இன்றி இந்தத் துணிச்சலும் தான்தோன்றித்தனமும் வளர்ந்து செல்ல முடியுமா? அல்லது இதுபோன்ற மனோ நிலை பொலிஸாருக்கு ஊட்டி வளர்க்கப்படுகிறதா?

இதற்கு வேறு திட்டமிட்ட பின்னணிகள் உள்ளனவா? என்பன எல்லாம் ஆராயப்படவேண்டிய கேள்விகள்.

தொடர்ந்து செல்லும் இத்தகைய கொலைகள் எதேச்சையான, குற்றவாளிகளுக்கு எதிரான சட்டம் ஒழுங்குக் காவலர்களின் நடவடிக்கை என்று குறிப்பிட்டு விட்டு அவ்வளவு இலகுவில் இவற்றைக் கடந்து செல்ல முடியாது.

SHARE