யாழ்.மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயம் மற்றும் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களினால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பில் இன்றைய தினம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான அழைப்பு தனக்கு விடுக்கப்படவில்லை. என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன கெட்டியாராச்சி தலமையில் முப்படை தளபதிகள் மாவட்டச் செயலர், பிரதேச செயலர்கள் கலந்துகொண்ட உயர்மட்ட கூட்டம் இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றிருந்தது.
மேற்படி கூட்டத்தில் யாழ்.குடாநாட்டில் உயர்பாதுகாப்பு வலயத்தினாலும், படையினர் வீடுகள், நிலங்களை பயன்படுத்துவதாலும் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொகை என்ன? அவர்கள் எங்கே? எத்தனை முகாம்களில் வாழ்கின்றார்கள்? என்பன தொடர்பான தகவல்களை அறிவதற்கான உயர்மட்ட கூட்டம் நடை பெற்றிருந்தது.
இதில் கலந்து கொள்வதற்கான அழைப்பு முதலமைச்சருக்கு விடுக்கப்பட்டபோதும் அவர் கலந்துகொள்ளவில்லை என சில தரப்புக்கள் மத்தியில் பேச்சுக்கள் இடம்பெற்றமையினாலும்,
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வடக்கின் மீள்குடியேற்றம் மற்றும் மீள் குடியேற்ற தேவைகள் தொடர்பில் மாகாண முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள், மற்றும் மாவட்டத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் பேசி முடிவுகளை எடுக்குமாறும் முன்னர் கூறியிருப்பதாலும் முதலமைச்சர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளாமைக்கான காரணம் என்ன? என முதலமைச்சரிடம் வினவியபோதே முதலமைச்சர் மேற்படி தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. என தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மேலும் கூறுகையில் தமக்கு அழைப்பு கிடைக்கப் பெற்று அதனை தாம் பார்க்க தவறியுள்ளதா? என சந்தேகித்து மீள் பரிசீலணை செய்து பார்த்தபோதும் தமக்கு இந்த கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
புத்தூரில் வெடிப்புக்குள்ளான நிலப்பகுதிகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர்
யாழ்.புத்தூர் மேற்கு நவக்கிரி பகுதியில் கடந்த 23ம் திகதி அதிகாலை நிலத்தில் வெடிப்புக்கள் உண்டான பகுதியை இன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், அப்பகுதி மக்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.
மேற்படி பகுதியில் நிலத்தில் உண்டான வெடிப்புக்கள் மேலும் விரிசல் அடைந்துள்ளதுடன், சில பகுதிகளில் நிலம் கீழ் இறங்கி காணப்படுகின்றது. இந்நிலையில் இந்த விடயத்தை ஒட்டியதாக பல்வேறு வதந்திகள் அந்தப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பரவவிடப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் முதலமைச்சர் மேற்படி பகுதிக்கு நேரில் சென்று நில வெடிப்புக்களையும் நில வெடிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள வீட்டையும் பார்வையிட்டுள்ளதுடன், அந்தப் பகுதி மக்களுடனும் பேசினார். இதன்போது விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றது.
அது தொடர்பான முடிவுகள் வெளியாகும் முன்னர் வதந்திகள் தொடர்பாக அவதானமாக இருக்கும்படி முதலமைச்சர் மக்களுக்கு கூறியுள்ளார். மேலும் மேற்படி நில வெடிப்புக்கள் உண்டான பகுதியில் விவசாயிகள் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பாக மக்கள் முதலமைச்சருக்கு சுட்டிக்காட்டியிருக்கும் நிலையில் அதனை தாம் கவத்தில் எடுத்துக் கொள்வதாக முதலமைச்சர் மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முதலமைச்சரின் அமைச்சின் வீடமைப்பு திட்ட நிதியில் 2015ம் ஆண்டு கட்டப்பட்ட புதிய வீடு முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டு பயனாளியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
- யாழில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மீள்குடியேற்ற கூட்டம்
- வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயம் தொடர்பில் மீள்குடியேற்றக் கூட்டத்தில் பேசவில்லை: என்.வேதநாயகன்