யாழ்.மாவட்ட கடற்பரப்பில் பெருமளவு உற்பத்தியாகும் கடல் உணவுகளை ஆய்வுகள் என்ற ரீதியில் இனங்கண்டுவரும் வெளிநாட்டு நிறுவனங்கள் அவ்வளங்களை கொள்ளையடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த வளங்களை கொள்ளையடித்து தமது நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் முயற்சிகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருவதாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களில் சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.
கடல்வளங்களை சுரண்டிச் செல்ல முற்படும் வெளிநாட்டு நிறுவனங்களில் ஆய்வுகளுக்கு யாழ்.பல்கலைக்கழகமும் முறைமுகமான பங்களிப்பினை வழங்குவதாக சம்மேளனம் கூட்டிக்காட்டியுள்ளது.
யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள், கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் நேற்று மாலை ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.
இச் சந்திப்பில் கலந்து கொண்ட சம்மேளனத்தினரினாலேயே மேற்படி குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சம்மேளனத்தில் மேலும் தெரிவிக்கையில்:-
யாழ்.மாவட்ட கடற்பரப்புகளில் பிடிக்கப்படும் கடல் உணவுகளில் தொகை தொடர்பான உண்மையான புள்ளிவிபரங்கள் எவையும் வெளியிடப்படுவதில்லை. உண்மையான புள்ளிவிபரங்கள் வெளியிடப்படாமல் இருப்பதற்கு மறைமுகமான காரணங்கள் உள்ளன.
குறிப்பாக யாழ்ப்பாணம் தீவகப் பகுதிகளில் கடற்பரப்பில் அதிகளவான கடல் உணவுகள் பிடிக்கப்படுகின்றன. பொதுவாக நண்டு, இரால், கனவாய் போன்றவை இங்கு அதிகளவில் பிடிக்கப்படுகின்றன.
குறிப்பாக மண்டைதீவு, அனல்தீவு போன்ற கடற்பரப்பில் ஒரு நாளில் மட்டும் மொத்தமாக 2 ஆயிரத்து 500 கிலோகிராமுக்கும், 3 ஆயிரம் கிலோக்கிராமுக்கும் இடைப்பட்ட நண்டுகள் பிடிக்கப்படுகின்றன.
இது போன்றே இரால், கணவாய் போன்றவையும் இங்கு அதிகளவில் பிடிக்கப்படுகின்றன. ஆனால் இது தொடர்பான உத்தியோகபூர்வமான புள்ளிவிபரங்கள் எவையும் வெளியிடப்படுவதில்லை.
இவ்வாறு ஏற்றுமதி செய்யக் கூடிய கடல் உணவுகள் இங்கு அதிகளவில் பிடிக்கப்படுகின்றன. இவ்வாறு பிடிக்கப்படும் கடல் உணவுகள் தொடர்பான ஆராய்வுகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக யாழ்.பல்கலைக்கழகம் சார்ந்தவர்கள் இவ்வாறு ஜீ.பி.ஏஸ் கருவிகளை பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளுகின்றார்கள். இவர்களுடைய ஆய்வுகளுக்கு பின்னணியில் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளன.
குறித்த நிறுவனங்கள் ஆய்வுகளின் தகவல்களை வெளியிடுவதில்லை. தமது நாட்டில் உள்ளவர்களுடன் அதனை பகிர்ந்து கொள்ளுகின்றார்கள்.
இவ்வாறான ஆய்வுகளின் முடிவில் நண்டு, இரால், கனவாய் போன்றவை குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டு, இவ்வாறு பொய்யான தகவல்களை வெளியிடுவதற்கு காரணமும் உள்ளது.
தற்போது இங்கு கடல் அட்டை, சங்கு போன்றவற்றை பிடிக்க வேண்டுமாக இருந்தால். அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். இவை அருகி வருகின்றமையால் அவற்றினை பிடிப்பதற்கு அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.
இது போன்று நண்டு, கணவாய், இரால் போன்றவையும் அருகி வருகின்றன என்று அறிவிக்கப்பட்டால், அதற்கும் அனுமதி பெற்றே கடற்றொழிலாளர்கள் பிடிக்க முடியும் என்ற சட்டம் உருவாக்கப்படலாம்.
இவ்வாறான சட்டம் உருவாக்கப்பட்டால் இப்போது இங்கு கடல் அட்டை மற்றும் சங்கு பிடிப்பவர்களைப் போல் வெளிநாட்டு நிறுவனங்களும், தென்னிலங்கை நிறுவனங்களும் இங்கு வந்து தொழில் செய்யலாம் என்ற கபட நோக்குடனே இவ்வாறான ஆய்வுகள் செய்யப்பட்டு, உண்மைத் தகவல்கள் மறைக்கப்படுகின்றன.
எமது சம்மேளனத்திடம் இது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதற்கான காரணங்கள், யாழ்.மாவட்டத்தில் ஒரு நாளில் பிடிக்கப்படும் கடல் உணவுகளில் தொகைகள் தொடர்பான தகவல்கள் ஆதாரங்களுடன் உள்ளன. தேவை ஏற்படின் அவற்றை வெளிப்படுத்துவோம் என்றார்கள்.