யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் வன் முறைகளுக்கு என்ன பின்னணி?

314
யாழ்ப்பாணத்தில் சமீப நாட்களாக இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளன. குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப் கேள்விக்குள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மையில் யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு யாழ்ப்பாணத்தை பெரும் அச்சறத்திற்கு உள்ளாக்கியிருந்தது. அதனைத் தொடர்ந்து யாழ் கொக்குவில் பகுதியில் இருபது வயது இளைஞன் ஒருவன் பலத்த வாள்வெட்டுக்கு இலக்காகியிருந்தான்.
வன்முறைகளில் ஈடுபடுபவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டு அதிரடிப்படையை கடமையில் ஈடுபடவும் கட்டளை பிறப்பிதிருந்தார்.
கடந்த சில நாட்களாக சுன்னாகம் பகுதியில் பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு வன்முறையில் ஈடுபட்டவர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டது.
இதேவேளை நேற்று முந்தினம் வேலனைப் பகுதியில் ஆயுதங்களுடன் வீடு புகுந்து பெண் ஒருவரைக் கடத்திய குழுவினர் அவரை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவர்களில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்த பின்னர் கிணற்றுக்குள் போட்டுக் கொல்ல முயற்சித்திருந்தாகவும் அப் பெண் காலில் விழுந்து கதறி அழுது புத்திசாலித்தனமாக நடந்ததால் உயிர்தப்பியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மிக நீண்டகாலமாக குடா நாட்டு மக்கள் அமைதியற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இலங்கை அரசும் இராணுவமும் கடந்த காலங்களில் அவ்வப்போது வன்முறைகளை கட்டவிழ்த்து யாழ்ப்பாணத்தை அச்சப் பிராந்தியமாக மாற்றியிருந்தது.
இந்த நிலையில் மீண்டும் யாழ்ப்பாணத்தின் அங்காங்கே தலைதூக்கியுள்ள வன்முறைகள் எதற்கானவை என்றும் அவற்றின் பின்னணி என்றும் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது.
SHARE