யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைச் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட துப்பாக்கிகள் பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பொலிஸாரில் 3 பேர் சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அழைத்துச் செல்லப்பட்டு, குற்றம் நடைபெற்ற இடம் அடையாளம் காணப்பட்டு அங்கு விசாரணைகள் இடம்பெற்றன.
கடந்த 20ஆம் திகதி நள்ளிரவில் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் யாழ்ப்பாணப் பக்கமிருந்து காங்கேசன்துறை பக்கமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களான சுலக்சன், கஜன் ஆகியோர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டனர்.
பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக 5 பொலிஸார் மறுநாள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் நடாத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் யாழ்.நீதிவான் மன்றில் நகர்த்தல் பத்திரம் சமர்ப்பித்து சம்பவ இடத்தில் நின்றிருந்த பொலிஸாரின் துப்பாக்கிகளை மேலதிக விசாரணை செய்வதற்காக அரச பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்புவதற்கு அனுமதி கோரினர். நீதிமன்று அனுமதி வழங்கியது.
அதன் பிரகாரம் கைத்துப்பாக்கி ஒன்றும், ரி – 56 ரக துப்பாக்கி ஒன்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அனுப்பிவைக்கப்பட்டன.
இதேவேளை, கொல்லப்பட்ட மாணவர்கள் தொடர்பான இறப்பு விசாரணைகள் கடந்த வாரம் யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் இடம்பெற்றன. இதன்போது பலரது சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டது.