12 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் வடமராட்சிப் பகுதியில் மீட்கப்பட்ட சம்பவம் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.யாழ் குடாநாடு போதைப்பொருள் வியாபாரத்தின் கேந்திர நிலையமாக மாற்றமடைகிறதா? என்ற கேள்வி இப்போது எழுகிறது.
பொதுவில் யாழ்.குடாநாடு ஆட்களை இனங் காண்பதில் சிரமம் கொள்ளாத ஓரிடம். ஊர்களுக்குள் புதியவர்கள் வந்தால் எந்த ஊர் என்று கேட்பது; அவர் தனது ஊரை சொல்ல, அந்த ஊரில் இவருக்குத் தெரிந்தவர்கள் பற்றி விசாரிப்பது, அதிலிருந்து வந்த புதியவர் யார்? என்று உறுதி செய்வது என்பன தான் எங்கள் வடபுலத்தின் சிறப்பு.
சில வேளைகளில் யாருடைய மகன் என்று கேட்பது கூட எங்கள் வாழ்வியலின் நெருக்கத்தை காட்டும் குறியீடாக இருந்தது. ஆனால் போருக்கு பின்பு புதிய முகம்களின் வருகை அதிகரித்துவிட்டது.
தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள், வெளிநாட்டவர்கள் என வடபுலத்திற்கான புதியவர்களின் நுழைவு அதிகரித்ததன் காரணமாக எவரையும் எவரும் விசாரிக்க நினைக்காமல் தாமும் தம்பாடு என்பதாக வடபுலத்து வாழ்வு மாறிவருகிறது.
முன்பெல்லாம் ஒரு விபத்தில் ஒருவர் சிறு காயத்துக்கு ஆளானாலும் வீதியால் செல்வோர் உடன் தங்கள் வாகனத்தை நிறுத்தி என்ன? எது? என்று விசாரித்து, உரிய முதலுதவி செய்து, வைத்தியசாலையில் சேர்ப்பித்து செய்ய வேண்டிய அத்தனை உதவிகளையும் புரிந்த ஒரு மக்கள் சமூகம், இன்று விபத்தை வேடிக்கை பார்க்கின்ற அளவிற்கு மாறிவிட்டது.
காயமடைந்தவரை உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றிருந்தால் அவரின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று மருத்துவர் கூறும் அளவில், விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற யாரும் இல்லாத நிலைமை.
இந்த நிலைமைதான் வடபுலம் தனது சமூக உறவு என்ற அடையாளத்தை இழந்து வருகிறது என்பதற்கான சான்று. இத்தகையதொரு சூழ்நிலையில் தான் போதை வஸ்து கடத்தல்களும் துஷ்பிரயோக நடவடிக்கை களும் கருக்கட்ட ஆரம்பிக்கின்றன.இந்த அறிகுறிகள் தென்பட்டு கருக்கட்டல் முதிர்ச்சி அடைந்துவருகிறது என்பதாக நிலைமை மாறியுள்ளது.
இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது. இப்போது போதைவஸ்து வியாபார நிலையமாக்கப்படும் எங்கள் யாழ் குடாநாட்டை உரிய முறையில் நாம் பாது காக்கத்தவறினால் போதைவஸ்து காரணமாக துப்பாக்கிப் பிரயோகங்களும் கொலைகளும் நடப்பதற்கான வாய்ப்புகள் ஏராளம் உண்டு என்பதால் இது தொடர்பில் நாம் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும்.
இந்த விழிப்பு என்பது மீளவும் எங்கள் சமூக உறவைப் பலப்படுத்துவதாக அமையும். எங்கள் ஊர், எங்கள் கிராமம், எங்கள் கடல்வெளி, எங்கள் நகரம் என்ற உணர்வும் உறவும் இருந்தால் நிச்சயமாக போதைப்பொருள் கடத்தல்களும் துஷ்பிரயோகங்களும் அடியோடு வேரறுக்கப்படும்.
யுத்தத்திற்குப் பின்பான ஏ9 பாதை, புகையிரதப் பயணம் என்பன யாழ்ப்பாணத்தை நகரமயமாக்கலின் உச்ச நிலைக்கு கொண்டு சென்றிருந்தாலும் எங்களின் வாழ்வியல் முறைமைகளை, சமூக உறவுகளை மீளவும் கட்டிக்காப்போமாயின் எங்கள் வட புலத்தில் எந்த அநீதியும் இடம்பெறாமல் தடுக்க முடியும் என்பது நிச்சயமான உண்மை.