யாழ்.நகர அபிவிருத்தி தொடர்பான முக்கிய கலந்துரையாடலொன்று, வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபையினுடாக, 55 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் யாழ் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. இது குறித்த கலந்துரையாடல் இதற்கு முன்னரும் இடம்பெற்றிருந்த நிலையில் இன்றைய கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஆளுனர் அலுவலகத்திலான இன்றைய கலந்துரையாடலை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முற்றாகப் புறக்கணித்தார்.
வட மாகாண சபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். தமிழரசுக் கட்சி அங்கத்தவர்கள் தவிர்ந்த ஏனைய மாகாண சபை உறுப்பினர்களும் இக்கலந்துரையாடலைப் புறக்கணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இக்கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு மாகாண சபை உறுப்பினர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.