யாழ் – நாவற்குழி பிரதான பாலத்தில் விரிசல்! பயணிகள் அச்சத்தில்

328

யாழ் – நாவற்குழிப் பாலத்தில் விரிசல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. அதனால் பயணிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ்   – நாவற்குழிப் பாலம், கடந்த 2000ம் ஆண்டு போர் நடவடிக்கை காரணமாக அழிக்கப்பட்டது. இதன் பின்னர், 2001ம் ஆண்டு இராணுவத்தின் பொறியியல் பிரிவால் பாலம் இரும்புக் கேடர்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டிருந்தது. அன்று தொடக்கம் இன்று வரையும் குறித்த பாலம் சீர்திருத்தம் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் பாலத்தில் கரையோரமாக ஆரம்பத்தில் ஏற்பட்ட சிறு பிளவு தற்போது விரிவடைந்துள்ளது. அதனால் பாலத்தில் பயணிப்பவர்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

யாழ் – கண்டி வீதியான ஏ-9 பிரதான வீதியில் முக்கிய பாலமாக இது காணப்படுகின்றது. குறித்த பாலம் அமைந்துள்ள வீதியினால்  தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகளும் பெருமளவான வாகனங்களும் பயணிக்கின்றன.

இது குறித்து வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் வினவிய போது, விரைவாக குறித்த பாலத்தை சீர்செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் யாழ்.மாவட்டப் பிரதான பொறியியலாளர் வி.சுதாகர் தெரிவித்தார்.

SHARE