யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் ரி. சிசிதரன் யாழ்ப்பாணம் நீதவான் நீதமன்றத்தில் இன்று புதன்கிழமை (20) ஆஜராகினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், வணிக முகாமைத்துவபீட பீடாதிபதி ரி. வேல்நம்பி மற்றும் விரிவுரையாளர்கள் ஊடாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
இவரை நேற்றுச் செவ்வாய்க்கிழமை (19) இரவு விசாரணைக்கு அழைத்த கோப்பாய் பொலிஸார், விசாரணைகள் முடிந்த பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்தனர்.
மேற்படி சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும், மாணவன் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இவர் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.