யாழ்.பல்கலை மாணவர்களின் படுகொலை மிலேச்சத்தனமானது என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலை மாணவர்கள் படுகொலையை நல்லாட்சி அரசாங்கம் விசேட பிரச்சினையாகக் கவனத்திலெடுத்துப் பக்கச் சார்பற்ற வகையில் விசாரணை நடாத்திச் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகள் வழங்க வேண்டும்.
அவ்வாறானதொரு செயற்பாடு முன்னெடுக்கும் பட்சத்தில் தான் தற்போதைய ஆட்சி மீது சற்றேனும் மக்களுக்கு நன்மை ஏற்படும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
யாழ். பல்கலை மாணவர்களான சுலக் ஷன், கஜன் ஆகிய இரு மாணவர்களும் கடந்த 20ஆம் திகதி இரவு பொலிஸாரால் கொக்குவில் குளப்பிட்டிப் பகுதியில் வைத்துச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமையும், அதன் பின்னரான நிலைமைகளும் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) நிலைப்பாட்டை அறிவதற்காக இராமலிங்கம் சந்திரசேகருடன் தொடர்பு கொண்ட போது அவர் எமது செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வி வருமாறு,
கேள்வி:- யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டமையும், அதன் பின்னரான நிலைமைகள் தொடர்பாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு என்ன?
பதில்:- பல்கலைக் கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பத்திலேயே தனது கடுமையான கண்டனங்களை வெளியிட்டிருந்தது.
பொலிஸாருக்கு அவ்வாறு சுட்டுப் படுகொலை செய்வதற்கான எந்தவொரு அதிகாரமுமில்லை. மாணவர்களைப் பொலிஸார் தமது மோட்டார்ச் சைக்கிளில் துரத்திப் பிடித்திருக்கலாம். அல்லது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுத்திருக்கலாம்.
ஆனால், அவ்வாறான வரையறையெல்லாம் மீறப்பட்டு ராஜபக்ஷ கால ஆட்சியைப் போன்று விசாரணைகளில்லாத, நீதிமன்றத் தீர்ப்பில்லாத ஒரு படுகொலையாகவே பல்கலை மாணவர்களின் கொலையை நாங்கள் பார்க்கின்றோம்.
அதனால், இந்தச் சம்பவத்திற்கு நாங்கள் எமது கடுமையான கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கேள்வி:- பல்கலை மாணவர்கள் இருவரும் திட்டமிட்ட ரீதியில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என நீங்கள் கருதுகிறீர்களா?
பதில்:- திட்டமிட்டுச் செய்யப்பட்டமைக்கான சான்றுகள் கிடையாது. அவ்வாறு திட்டமிட்டுச் செய்யப்பட்டிருந்தால் இந்தப் படுகொலைகள் வேறு விதமாக நிகழ்த்தப்பட்டிருக்கலாம்.
தற்போது வடபகுதியில் இயங்குகின்ற ஊடகங்கள் இந்த மாணவர்கள் தமிழர் என்ற காரணத்தாலேயே படுகொலை செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகளை வெளியிடுகின்றன.
இதே நல்லாட்சியில் தான் எம்பிலிப்பிட்டிய பகுதியில் ஒரு இளைஞர் பொலிஸாரால் அடித்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். அதேபோன்று இதே ஆட்சிக் காலத்தில் மாணவி வித்தியா காமுகர்களால் நாசப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
அதேபோன்று குருநாகலில் சேயா என்ற சிறிய பிள்ளை அதே கிராமத்தைச் சேர்ந்தவர்களால் வன்முறைகளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
தண்ணீர் கேட்ட மக்களை முன்னைய அரசாங்கம் சுட்டுக் கொண்டது. தொழிலாளர்கள் தங்கள் உரிமையைக் கேட்ட போது ஒரு இளைஞனைச் சுட்டுக் கொண்டார்கள்.
அதேபோன்று மீனவர்கள் தங்களுக்கான மானியத்தை வழங்குமாறு கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேபோன்று தான் யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் மர்மமான முறையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறான சம்பவங்கள் நாடு முழுவதும் இடம்பெறுகின்றன. ஆனாலும், மாணவர்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டனரா? என்பது அலசி ஆராய்ந்து தீர்மானிக்கப்பட வேண்டியது. மாணவர்களின் படுகொலை மிலேச்சத்தனமானதொன்று என்பதை எவராலும் மறுக்க முடியாது.
கேள்வி:- பல்கலை மாணவர் படுகொலைக்குப் பின்னர் யாழ். குடாநாட்டில் ஆவா குழு போன்ற ஆறுகுழுக்கள் இயங்குவதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
பதில்:- தமிழ் மக்கள் மத்தியில் இந்த ஆட்சியாளர்கள் மீது கடுமையான கோபமிருக்கிறது. யுத்தம் காரணமாகப் பல இலட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமற் போனவர்கள் தொடர்பில் இதுவரை உரிய நீதி கிடைக்கவில்லை.
பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் இன்னமும் விடுவிக்கப்பாடாமை, அரசியல் கைதிகள் இன்னமும் விடுவிக்கப்படாமை போன்ற பல்வேறு பிரச்சினைகளும் தொடர்கதையாகியுள்ளன.
இவ்வாறான நிலையில் மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் மேற்படி பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாத கோபங்கள் அனைத்தும் இணைந்து அவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவே உண்மையான நிலைமை.
ராஜபக்ஷ போன்ற இனவாதக் கும்பல்கள் இந்தச் சம்பவம் இடம்பெற்ற பின்னர் வடக்கில் புலி இருக்கின்றனர் என்ற பூச்சாண்டியைக் காட்ட ஆரம்பித்துள்ளனர்.
ஆவாக் குழு ஒரு குழுவெனச் சொல்லப்படுகின்ற போதும் யார்? எவர்? என இதுவரை கண்டறியப்படவில்லை. ஆகவே, ஆவாக் குழுவாகவிருந்தாலென்ன?, ஏனைய குழுக்களாகவிருந்தாலென்ன?
மக்களுக்கு விரோதமாகச் செயற்படுகின்ற அனைத்துச் செயற்பாடுகளும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்கான கடப்பாடு நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற தற்போதைய அரசாங்கத்திற்குண்டு.
ஆகவே, நல்லாட்சிக்குக் குந்தகம் விளைவிக்கின்ற இவ்வாறான நடவடிக்கைகள் உடன் தடுத்து நிறுத்துவதற்கு உடன் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இந்தக் குழுக்களுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
கேள்வி:- நவசமாசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி -விக்கிரமபாகு கருணாரட்ண மாகாண சபைக்குப் பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தால் இவ்வாறான சம்பவங்களைத் தவித்திருக்க முடியும் எனும் அடிப்படையிலான கருத்தொன்றை வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் உங்கள் கருத்தென்ன?
பதில்:- குறைந்த பட்சம் இங்குள்ள மாகாண சபைக்குப் பகிர்ந்தளிக்கப்படுகின்ற நிதி திரும்பிப் போகின்றளவிற்கு எத்தகைய திட்டங்களுமில்லாது செயற்படுகின்ற நிலையில் நாங்கள் எங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தைக் கூடச் சரியாகப் பயன்படுத்தினோமா?
இவ்வாறான நிலையில் நாங்கள் எவ்வாறு பொலிஸ் அதிகாரத்தையும், காணி அதிகாரத்தையும் கோருவதற்கான தகுதி வாய்ந்த மாகாண சபை எங்களிடமிருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.
அதுமட்டுமன்றி இந்த வடமாகாண சபையின் கீழுள்ள உள்ளுராட்சி சபைகள் அனைத்திலும் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாக மாகாண சபை உறுப்பினர்களாலேயே கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூடத் தங்களுடைய மாகாண சபையிலுள்ள உறுப்பினர்கள், அமைச்சர்கள் மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஆகவே, அது தொடர்பில் விசாரிப்பதற்குக் விசேட குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என யோசனை முன்வைத்திருந்தார். இவ்வாறான நபர்களிடம் பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் நிலைமை மோசமானதாகவே காணப்படும்.
ஆகவே, மத்திய அரசாங்கத்தின் கீழுள்ள ஆட்சி முறையிலும், மாகாண சபையிலுள்ள ஆட்சி முறையிலும் வித்தியாசமில்லை. இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
இது நாட்டில் பெரும்பாலானதாக இருக்கின்ற தொழிலாளர் வர்க்கத்தை நசுக்குகின்ற செயற்பாடு மட்டுமல்ல. முதலாளி வர்க்கத்துக்கு மாத்திரமே சட்டம், பொலிஸ், அரசியலமைப்பு என அனைத்துமே பாதுகாப்பு அளிக்கின்றனவே தவிர மக்களுக்கல்ல.
கேள்வி:- புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டு ஒரு வருடங்கள் ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்குரிய நீதி பெற்றுக் கொடுக்கப்படவில்லை.
இதன் தாக்கம் அவரது குடும்பத்தை மாத்திரமல்லாமல் சமூகத்தையும் உளவியல் ரீதியாகப் பாதித்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
இவ்வாறான நிலையில் யாழ். பல்கலை மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது விசாரணைக் குழுக்கள் பல அமைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த விசாரணை தொடர்பில் உங்களுக்கு நம்பிக்கையுள்ளதா?
பதில்:- இன்றைய அரசியல் முறையின் கீழ் இயங்குகின்ற சட்டங்கள், நீதித் துறை இஎதுவுமே சாதாரண மக்களுக்கு நியாயம் பெற்றுத் தரப் போவதில்லை.
வித்தியாவின் படுகொலைக்கு எதிராக யாழ். குடாநாடு மட்டுமல்லாமல் முழு உலகமுமே அதற்கெதிராகக் குரல் கொடுத்தது. ஆனால், தற்போது வித்தியாவின் குடும்பத்தை ஏறெடுத்துப் பார்ப்பதற்கு யாருமே கிடையாது.
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்ற போது மாத்திரம் உணர்ச்சி வசப்பட்டு அதற்கெதிராகக் கொதித்தெழுந்து குரல் கொடுக்கின்ற மக்கள் கூட்டமே எம்மத்தியிலுள்ளது.
இந்த நிலை மாற வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதற்கான மூல காரணங்கள் கண்டறியப்பட்டுக் களையப்பட வேண்டும்.
மாணவி வித்தியாவிற்கு இன்னமும் உரிய நீதி கிடைக்கவில்லை. கொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்குமா? இல்லையா? என்பது சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.
தென்னிலங்கையிலும் இதே நிலைமை தான். சிறந்த ஊடகவியலாளர் லசந்த படுகொலை செய்யப்பட்டார். அவரது படுகொலை தொடர்பில் பலர் விசாரணை செய்யப்பட்ட போதும் தற்போது அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
அதேபோன்று தான் வடபகுதியிலும் நடைபெறுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. எனினும், யாழ். பல்கலை மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமையை நல்லாட்சி அரசாங்கம விசேட பிரச்சினையாகக் கவனத்திலெடுத்துப் பக்கச் சார்பற்ற வகையில் விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகள் வழங்க வேண்டும்.
அவ்வாறானதொரு செயற்பாடு முன்னெடுக்கும் பட்சத்தில் தான் தற்போதைய ஆட்சி மீது சற்றேனும் மக்களுக்கு நன்மை ஏற்படும். அவ்வாறில்லாவிடில் நம்பிக்கை இழக்க வேண்டி வரும். அவ்வாறு நம்பிக்கை இழக்கின்ற போது இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதற்கு ஏதுவான சூழல்கள் ஏற்படும்.
அவ்வாறான சூழல்கள் தொடருமாயின் பாதிக்கப்படப் போவது குழப்பங்களை உண்டுபண்ணுபவர்களல்ல. அல்லது இவ்வாறான சம்பவங்களை வைத்து அரசியல் இலாபம் தேடுகின்ற, உணர்ச்சி வசப்பட்ட பேச்சுக்களைப் பேசுகின்ற அரசியல்வாதிகளல்ல.
சாதாராண அப்பாவி மக்கள் தான். அப்பாவி மக்களுடைய நலன் கருதி அரசாங்கம் இந்த விடயத்தில் துரித நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
கேள்வி:- மாணவர் கொலை விவகாரத்தை ஒரு விசேட பிரச்சினையாக அரசாங்கம் கவனத்திலே கொள்ள வேண்டும் என நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் குரல் கொடுக்குமா?
பதில்:- குரல் கொடுக்கும்….. இது சம்பந்தமாகப் பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.
தொடர்ந்தும் இந்தப் பிரச்சினை உக்கிரமடைந்து வருவதால் விசேட கவனயீர்ப்புப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை நாங்கள் எடுத்திருக்கிறோம் என்றார்.