வங்கிப் புத்தகத்துடன் இணைத்து அடையாள அட்டையைத் தொலைத்த யாழ்ப்பாணப் பெண் ஒருவருடைய வங்கிக் கணக்கில் இருந்து 5 லட்சம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளது.
மேலும் தெரியவருவதாவது:-
போலியாகத் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டையை வைத்து அந்த வங்கியின் கொழும்புக் கிளையில் திருட்டுத் தனமாகப் பெறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் நேற்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
4ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர்,கடந்த வியாழக் கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்றுள்ளார்.
இதன் போது அவர் தனது கைப்பையில் வங்கிப் புத்தகத் துடன் இணைத்து அடையாள அட்டையையும் வைத்துள்ளார். கொழும்பு சென்றவர் அங்கு தவறுதலாக வங்கிப் புத்தகத்தை தொலைத்ததை அறியாது இருந்துள்ளார்.
நேற்றுமுன்தினம் பணி நிமித்தம் யாழ்ப்பாணத்துக்கு வந்தவர், பணத்தேவையின் பொருட்டு வங்கிப்புத்தகத்தைத் தேடிப்பார்த்துள்ளார்.
இதன்போதே அது தொலைந்தமை தெரியவந்துள்ளது.வங்கிப்புத்தகம் தொலைந்தமை தொடர்பில் தகவல் தெரிவிக்கச் சென்றபோதே அவருக்கு இந்த செய்தி காத்திருந்துள்ளது.
அவரது வங்கிக்கணக்கில் இருந்து 5லட்சம் ரூபா பணம் மீள எடுத்துக்கொள்ளப்பட்டமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் வங்கி அதிகாரிகள் விசாரணை செய்தபோது, கொழும்பு 1இல் உள்ள கிளையில் இருந்து பணம் பெற்றுக்கொண்டமை தெரியவந்துள்ளது.
மேலும், தொலைந்த அடையாள அட்டையை வைத்துப் போலியான அடையாள அட்டை தயாரிக்கப்பட்டே இந்தப் பணம் பெற்றுக்கொண்டமை தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.