யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பொதுமக்கள் பயன்பாட்டுக்கான மலசலகூடம் கடந்த 2 வாரங்களாக பூட்டப்பட்டிருக்கும் நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்துவரும் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.
இந்தநிலையில், மேற்படி மலசலகூடத்தின் மலக்குழி நிறைந்துள்ள நிலையில் அதனை சுத்தம் செய்வதற்கு யாழ்.மாநகரசபை நடவடிக்கை எடுக்காமையினாலேயே மலசலகூடம் கடந்த 2 வாரங்களாக பூட்டப்பட்டுள்ளதாக இ.போ.சபையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேற்படி விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்குள் பயணிகளின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டிருக்கும் பொது மலசலகூடத்தின் மலக்குழி நிறைந்துள்ளமையினால் மேற்படி மலசலகூடத்தை பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதேபோன்று யாழ்.நவீன சந்தை கட்டிடத் தொகுதிக்குள் மாநகரசபையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொது மலசலகூடத்தின் ஆண்கள் மலசல கூடமும் பயன்படுத்த முடியாத நிலையில் பூட்டப்பட்டிருக்கின்றது.
இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பயணிகள் குறிப்பாக அதிகாலையில் வரும் பயணிகள் மலசலகூடம் இல்லாத நிலையில் பெரும் அசௌகரியங்களை சந்திக்கின்றார்கள்.
இந்நிலை குறித்து இ.போ.சபையின் யாழ்.சாலை முகாமையாளர் எஸ்.குணபாலசெல்வத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது,
யாழ்.நகரம் அதிகளவான மக்கள் வந்து போகும் ஒரு இடம். குறிப்பாக யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேர் வரையில் தினசரி வந்து செல்கிறார்கள்.
இவ்வாறு வந்து செல்பவர்களில் நோயாளிகள், கர்ப்பணிகள், பெண்கள், வயோதிபர்கள் என பல வகையானவர்கள் உள்ளனர். நிலை இவ்வாறிருக்க கடந்த 2 வாரங்களாக மலக்குழி நிறைந்த நிலையில் மலசலகூடத்தை பயன்படுத்த முடியாத நிலை உருவாகியிருக்கின்றது.
இது குறித்து யாழ்.மாநகரசபையிடம் கேட்டபோது பல்வேறு காரணங்களை அவர்கள் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக மலக்கழிவுகளை கொட்டுவதற்கு இடமில்லை. எனவும் கூறுகின்றார்கள்.
அவ்வாறெனில் யாழ்.நகருக்குள்ளேயே தனியார் கழிவகற்றும் நிறுவனங்கள் உள்ளன. அவர்கள் எவ்வாறு அகற்றுகின்றார்கள்? எனவே இந்த விடயத்தில் யாழ்.மாநகரசபை பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் இவ்வாறான நிலை இல்லை. நாங்கள் ஒரு தொலைபேசி அழைப்பை எடுத்து விடயத்தை கூறினால் அடுத்த சில மணி நேரங்களில் சுத்தப்படுத்தப்படும்.
ஆனால் தற்போதுள்ள மாநரசபை ஆணையாளர் பொறுப்பற்ற விதமாக நடந்து கொள்கின்றார். எனவே இந்த விடயத்தில் பொறுப்பு வாய்ந்தவர்கள் உடனடியாக தலையிட்டு விடயத்தை சீர்செய்ய வேண்டும். என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த பிரச்சினை சாதாரண பிரச்சினையல்ல. பெருமளவான பயணிகள் பல அசௌகரியங்களை சந்திக்கின்றார்கள். இதனை விட துர்நாற்றம் வீசுகின்றது.
இந்தநிலை அதிகளவான வெளிநாட்டவர்கள் அதிகம் விரும்பிவரும் யாழ்ப்பாணத்தில் அதுவும் யாழ்.நகரில் இடம்பெறுவதை மாநகரசபை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதனை எம்மால் ஒத்துக்கொள்ள முடியாது.
எனவே நாங்கள் மீண்டும் மீண்டும் வினயமாக கேட்டுக் கொள்கிறோம். மாநரசபை மற்றும் பொறுப்பு வாய்ந்தவர்கள் உடனடியாக இதில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.