யாழ் மாநகரசபை மேயர் விவகாரத்தில் ஈ.பி.டி.பி கட்சிக்குள் சிறிய குழப்பம்

114

யாழ் மாநகரசபை மேயர் விவகாரத்தில் ஈ.பி.டி.பி கட்சிக்குள் சிறிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ரெமீடியஸின் நடவடிக்கையினால் தான் சிக்கல் ஏற்பட்டதாக கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கருதுகிறார்கள். இந்த அதிருப்தி டக்ளஸ் தேவானந்தாவிடமும் உள்ளது.

உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களை வென்ற கட்சிகள் ஆட்சியமைக்கலாமென ஒரு எழுதப்படாத இணக்கப்பாடு கூட்டமைப்பு, ஈ.பி.டி.பிக்குள் ஏற்பட்டிருந்தது.

எனினும், யாழ் மாநகரசபையில் அதை ஈ.பி.டி.பியால் நிறைவேற்ற முடியவில்லை. காரணம்- ரெமீடியஸ்.

தனது உறவினரான ஆனோல்ட் மேயராக கூடாதென்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதனால், தன்னை மேயராக்க வேண்டுமென இரகசிய முயற்சிகளில் இறங்கினார்.

அவரை முதல்வராக்க யோகேஸ்வரி பற்குணநாதனும் ஆதரவளித்தார். தானே ரெமீடியஸின் பெயரை முன்மொழிகிறேன் என்றும் வாக்களித்தார்.

எனினும், ரெமீடியஸை வழிமொழிய ஈ.பி.டி.பிக்குள் யாருமில்லாத நிலையில், ஐ.தே.க வை சேர்ந்த ஒருவரை அதற்காக தயார்படுத்தினார்.

மாநகரசபையில் த.தே.கூ இற்கு ஆதரவளித்து, சுமுகமான உறவை பேணவே டக்ளஸ் விரும்பினார். மாவை, சுமந்திரனுடனான உரையாடலிலும் அதை கூறியிருந்தார்.

எனினும், ரெமீடியஸின் நடவடிக்கை அதை குழப்பி, வீணாண சர்ச்சைகளை தோற்றுவித்து விட்டதென கட்சிக்குள் அதிருப்தி எழுந்துள்ளது.

நேற்று இரவு தன்னுடன் உரையாடிய சில பத்திரிகையாளர்களிடம் டக்ளஸ் தேவானந்தா தனது பாணியில் இந்த நடவடிக்கையை விமர்சனம் செய்திருந்தார். “குளிக்கப்போய் சேறு பூசிக் கொண்டு வந்துள்ளார்கள்“ என கூறியிருந்தார்.

தனது அதிருப்தியை ரெமீடியசிடம் நேரடியாகவே தெரிவிக்க டக்ளஸ் தேவானந்தா திட்டமிட்டுள்ளதாக கட்சியின் உயர்மட்ட பிரதிநிதிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

 

SHARE