யாழ்.மாநகர சபை பகுதியை உலக வங்கியின் நிதி உதவியுடன் அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் உலக வங்கி அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இன்று காலை 9 மணி முதல் மாலை 1.30 மணி வரை இடம்பெற்றுள்ளது.
முதலமைச்சர், அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் சுமார் 20 பேர் வரையான உலக வங்கி அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
மாநகர எல்லைக்குட்பட்ட குளங்கள், வாய்க்கால்கள், வீதிகள், போக்குவரத்து, பொது வெளிகள், கலாச்சார மையங்கள் என்ற அடிப்படையிலேயே இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் முன்மதிப்பீடு தற்போது இடம்பெற்று வரும் நிலையில் பெப்ரவரி மாதமளவில் இறுதி மதீப்பீடு இடம்பெற்று மே மாதம் இது தொடர்பாக உலக வங்கியின் மீளாய்வு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து ஜுன் மாதமளவில் இந்த வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி செயற்திட்டமானது யாழ்ப்பாணம், கண்டி மற்றும் காலி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.