வடபகுதியில் குறிப்பாக யாழ்.மாவட்ட கடல் பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய தொழில் முறையால் 2013 ஆம் ஆண்டு 6.4165 மில்லியன் ருபா, 2014ஆம் ஆண்டு 17.2 மில்லியன் ருபா, 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை சுமார் 4 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த இழப்புக்கள் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களினால் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பதிவின் பிரகாரம் இது பெறப்பட்டுள்ளது. சில தொழிலாளர்கள் தமக்கு ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பில் விபரங்கள் பதிவு செய்யாதும் உள்ளனர்.
இதேவேளை இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் 2013ஆம் ஆண்டு 48 படகுகளும் 220 மீனவர்களும் 2014 ஆம் ஆண்டு 99 படகுகளும் 427 மீனவர்களும் 2015ஆம் ஆண்டு ஆவணி வரை 21 படகுகளும் 143 மீனவர்களும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதுவரையில், இலங்கை மற்றும் இந்திய மீனவ விவகாரத்தில், எவ்வித நிரந்தர தீர்வுகளும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.