ஆனையிறவு புலிகளிடம் வீழ்ந்த போது யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்கு பலர் பின் வாங்கிய தருணத்தில் இரண்டு மணி நேரத்திற்குள் பலாலிக்குச் சென்றேன். அங்கு முறையாக திட்டமிட்டோம். அங்கு இன்றும் அப்பதுங்குக்குழியுள்ளது என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்
யுத்தத்திற்கு எவ்விதமான பங்களிப்பையும் வழங்காது யுத்த வெற்றியை தனதாக்குவதற்கு பாதுகாப்பு செயலாளராகவிருந்த கோத்தபாய ராஜபக்ச முனைந்தார்.
யாழ்ப்பாணம் இராணுவத்திடம் வீழ்ந்தபோது அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் சந்திரானந்த சில்வா அதனை தனது வெற்றியாக கொள்ளவில்லை.
ஆனால் எதனையுமே செய்யாது யுத்த வெற்றியை தனதாக்க முயன்றார். அது மிகவும் வெட்கமான விடயம்.
நான் என்ன பங்களிப்புச் செய்தேன் எனக் கேள்வியெழுப்புகின்றீர்கள்.
யுத்தத்தை திட்டமிட்டேன். இராணுவத்தை அதிகரித்தேன். முறையான பொறிமுறைகளை முன்னெடுத்தேன். இதற்கு அப்பால் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட தருணத்தில் உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு தனியொருவனாக எதிர்த்தேன்.
மேலும் ஆணையிறவு புலிகளிடம் வீழ்ந்த போது யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்கு பலர் பின் வாங்கிய தருணத்தில் இரண்டு மணி நேரத்திற்குள் பலாலிக்குச் சென்றேன்.
அங்கு முறையாக திட்டமிட்டோம். அங்கு இன்றும் அப்பதுங்கு குழியுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே மாவிலாறில் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.
அவ்வாறிக்கையில் குருதி சிந்தி அர்ப்பணிப்புடன் போராடிய இராணுவ வீரர்களுக்கு உரிய மதிப்பளிக்காது அவர்களின் அர்ப்பணிப்பை தமது சுயநலத்துக்கு பயன்படுத்தவே முனைந்தார்கள்.
இன்று கூச்சலிடும் நீங்கள் அன்று யுத்தத்தினை முன்னெடுத்த தளபதி திட்டமிட்டு பழிவாங்கப்படும் போது எங்கு சென்றீர்கள்.
நாட்டை மீண்டும் அதள பாதாளத்துக்குள் கொண்டு செல்வதற்கு முயலாதீர்கள். அதன் அபாயத்தை புரிந்து கொள்ளுங்கள்.
நாட்டில் உரிய பொருளாதார அடித்தளம் இல்லை. மனித உரிமை மீறல்கள், ஜனநாயக மீறல்கள் போன்றவற்றால் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையையும் நாம் இழந்து நிற்கின்றோம்.
ஆகவே மீண்டும் குடும்பமொன்றின் நலனுக்காக நாட்டை வீழ்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லாதீர்கள் என்றார்.