இலங்கையில் யுத்தகுற்றவிசாரணைகளை மேற்கொள்வதற்கு ஏற்றவகையில் உள்நாட்டின் சட்டங்களை மாற்றவேண்டும் என கருத்துதெரிவித்துள்ள ஓய்வுபெற்ற நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம இறுதி யுத்தத்தில் 40000பேர்கொல்லப்படவில்லை என தங்களது ஆணைக்குழு கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அவரது ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் இந்திய ஊடகமொன்றிற்கு கருத்துதெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.
ஈழயுத்தத்தின் இறுதி தருணங்களில் இடம்பெற்றதாக குற்றம்ச்சாட்டப்பட்டுள்ள யுத்தகுற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு உள்நாட்டில் சட்டங்கள் எதுவும் இல்லை,இலங்கையின் குற்றவியல் சட்;டத்தை அதற்கு பயன்படுத்த முடியாது.
எனினும் பொருத்தமான சட்டமூலங்களை கொண்டுவருவதற்கான ஏற்பாடு அரசமைப்பில் காணப்படுகின்றது,மேலும் எங்களது அறிக்கையில் யுத்தகுற்றங்கள் தொடர்பாக விசாரணைசெய்வதற்கு விசேட உயர்நீதிமன்றம் ஓன்றை ஏற்படுத்தவேண்டும் என நாங்கள் பரிந்துரைசெய்துள்ளோம்.
இதேவேளை அவரது ஆணைக்குழு கலப்புநீதிமன்றத்தினை உருவாக்குவது குறித்து பரிந்துரைசெய்துள்ளதா என கேட்டதற்கு மக்ஸ்வெல்பரணகம, அது ஓரு அரசியல்விவகாரம் நாட்டின் அரசியல் தலைமையே அது குறித்து தீர்மானிக்கவேண்டும் என தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து நாங்கள் தலையிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
பரணகம அறிக்கை யுத்தத்தின் இறுதிதருணங்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஏற்றுக்கொண்டுள்ளபோதிலும் 40,000ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர் என தருஸ்மன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை நிராகரித்துள்ளது.
வெளிநாட்டு முகவர் அமைப்புகளின் அறிக்கையை ஆராய்ந்தோம், வீடுவீடாக அதிகாரிகள் கணக்கெடுப்பை மேற்கொண்டனர் , இதன்போது சுமார் 7000பேரே கொல்லப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது, இந்த எண்ணிக்கை குறித்து எங்களால் உறுதியாக தெரிவிக்கமுடியாது,ஆனால் 40000பேர் கொல்லப்படவில்லை என நாங்கள் நம்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்