யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களும் பாரிய அபிவிருத்தி அடைய வேண்டும்

105

அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்தினூடாக, நாட்டின் அனைத்துப் பாகங்களும் அபிவிருத்தி அடையவுள்ளதுடன், குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குப் பிரதேசங்களும் பாரிய அபிவிருத்தி அடையுமென, நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினருமான கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். இதற்காக, பிரதேச மக்களின் பாரிய ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது எனவும் அவர் கூறினார்.

அரசாங்கத்தின் கம்பெரலிய வேலைத்திட்டத்திலும் ஏனைய நிதியொதுக்கீட்டின் கீழும், ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில், பொதுமக்களின் கருத்துகளை அறியும் பொதுக்கூட்டம், ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் ஏற்பாட்டில், அவரது தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், பிரதேச ஆலயங்கள், பாடசாலைகள், சமய சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, அவர்களது ஆலோசனைகளை முன்வைத்தனர்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கோடீஸ்வரன் எம்.பி, “உங்களது பிரதேச அபிவிருத்தி, உங்களது கையில்” எனக் கூறியதுடன், உங்களது பிரதேசத்துக்கு மிகவும் தேவையாகவுள்ள அபிவிருத்தித் திட்டங்களை, முன்னுரிமை அடிப்படையில் உடன் சமர்ப்பிக்குமாறும் கூறினார்.

பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள், புனரமைப்புச் செய்ய வேண்டிய வணக்கத்தலங்கள், வீதி அபிவிருத்திகள், மின்சார வசதிகள், விளையாட்டுக் கழகங்களுக்கான உதவிகள் போன்ற அபிவிருத்திகளுக்காகவே, குறித்த நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதெனவும் கூறினார்.

கல்வி அபிவிருத்தியை முன்கொண்டு செல்ல, 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான கல்வி அபிவிருத்தி மையக் கட்டடம் ஒன்றை நிர்மாணித்து வரும் அதேவேளை, மாதிரிப் பரீட்சைத்தாள் அச்சிடும் இயந்திரமும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன், அடுத்த சில மாதங்களில் கட்டட வேலைகள் நிறைவுற்றதும், அப்பணி தொடரும் என்றார்.

மேலும், கட்சி பேதமின்றி அனைவரையும் ஒன்றிணைத்தே இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

(Dilan Maha)

SHARE