யுத்தம் ஓய்ந்து தங்களது வீடுகளில் இருந்து வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு தலைப்பட்டுள்ள மக்களுக்கு மீண்டும் வனஜீவராஜிகளில் இருந்தும் தம்மை பாதுகாத்து கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

291

மட்டக்களப்பு மாவட்டம், வனாந்தரங்களையும், மலைசாரல்களையும், கடல்வெளிகளையும், ஆறுகளையும் கொண்டமைந்த ஒரு பிரதேசமாகும்.

இம்மாவட்டத்தில் அதிகளவான பகுதி காடும், வயல்வெளிகளையும் சார்ந்ததாக அமையப்பெற்றுள்ளது. இங்கு வாழ்கின்றவர்களில் நகர்புறத்தினை அண்டிய மக்கள் அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள், திணைக்களங்களில் தொழில்புரிபவர்களாகவும், தொழிலதிபர்களாகவும் இருக்க, ஏனைய பிரதேசத்து மக்கள், விவசாயம், மீன்பிடி, கூலிவேலை செய்பவர்களாகவும் இருக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தினை இரண்டுபெரும் பிரிவுகளாக மக்கள் பிரித்து அழைக்கின்றனர். சூரியன் உதிக்கும் பிரதேசத்தினை எழுவான்கரை என்றும், சூரியன் மறையும் பிரதேசத்தினை படுவான்கரை என்றும் மட்டக்களப்பு வாவியை மையமாக கொண்டு குறிப்பிடுகின்றனர்.

மாவட்டத்தில் வவுணத்தீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி, வாகரை, செங்கலடி, சித்தாண்டி, கிரான் போன்ற பிரதேசங்கள் கடந்த 30வருடகால யுத்தத்தின் போது அதிகமாக பாதிக்கப்பட்டதுடன், இங்கு வாழ்ந்த மக்கள் அகதிகளாக்கப்பட்டு, பின்னர் குடியமர்த்தப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர்.

யுத்தம் ஓய்ந்து தங்களது வீடுகளில் இருந்து வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு தலைப்பட்டுள்ள மக்களுக்கு மீண்டும் வனஜீவராஜிகளில் இருந்தும் தம்மை பாதுகாத்து கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (14) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (15)

குறிப்பாக யானையின் தாக்குதலில் இருந்து தம்மையும், தம் உடமைகளையும், விவசாயத்தினையும் பாதுகாக்க வேண்டிய பாரிய சிக்கல்களுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இன்றுவரை எதிர்நோக்கியுள்ளனர்.

இதற்கான தீர்க்கமான எந்த தீர்வுகளும் இன்னும் அரசினால் முன்வைக்கப்படவும் இல்லை. மக்களும் தங்களால் இயன்ற பாங்குகளில் அரசுக்கு தமது பிரச்சினைகளை முன்வைத்தும் தீர்வு காணப்படவில்லை.

குறிப்பாக ஆர்ப்பாட்டங்கள் செய்தும், அபிவிருத்தி கூட்டங்களில் குறிப்பிட்டும், அரசியல்வாதிகளுக்கு தெரிவித்தும் இன்னும் தீர்வுப்பெறப்படவில்லை.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (16)

நாளுக்கு நாள் யானைகளின் தாக்குதல் அதிகரிக்க, உயிரிழப்புகளும், அங்கங்களின் இழப்புக்களும், சொத்து தேசங்களும் அதிகரித்த நிலையே இருந்து கொண்டிருக்கின்றது.

இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 51பேர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களில் 30பேர் பலியாகியுள்ளனர். 21 பேர் உடல்பாதிப்புக்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.

பயன்தரக்கூடிய மா, பலா, தென்னை போன்ற மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. 60 ஏக்கர் வரை வயல்நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளது. 15க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில் அரசாங்கத்தினால் இழப்பீடுகள் உயிரிழந்தவர்களுக்க வழங்கப்பட்டிருக்கின்றது. அதேநேரம் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு இன்னும் இழப்பீடுகள் வழங்கப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பிடுகின்றனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (17)

அவ்வாறானவர்களுக்கு இழப்பீடுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் நடமாடும் சேவை ஒன்றினை மேற்கொள்வது என அண்மையில் நடைபெற்ற மாவட்ட கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டமையும் சுட்டிக்காட்டப்படவேண்டியுள்ளது.

காலையில் எழுந்து வெயிலில் நின்று வியர்வை சிந்தி தொழில் ஈடுபட்டு, வீட்டிற்கு வருகைதந்தும் வீட்டில் நிம்மதியாக நித்திரைகொள்ள முடியாமல் பல குடும்பங்கள் தங்களது வாழ்க்கையை கொண்டுசெல்கின்றனர்.

கூச்சல் சத்தமும், யானையை துரத்துவதற்காக கொழுத்தப்படும் வெடில்கள் ஓசையும் உறங்கும் போது கண்முன்னும், காதுகளிலே ஒலித்துக்கொண்டு உயிருக்கு அஞ்சி வாழ்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

யானையொன்றினால் உயிர் காவுகொள்ளப்படும் போது அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை அதுதொடர்பில் பேசுவதும், குறித்த இடங்களுக்கு சென்று ஒருசிலர் பார்வையிடுவதும் வழக்கம்.

அத்துடன், அதற்கான உடனடி தீர்வுகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டு ஒரு வாரங்கள் இது தொடர்பிலான பேச்சுகளும் முணு முணுக்கப்படும்.

அதன்பின்னர் இன்னொருவரை தாக்கும் வரையும் யானை தாக்குதல் பிரச்சினை பற்றிய முணுமுணுப்பு குறைந்து தாக்குதலின் பின் மீண்டும் பேசப்படுவதுமே மாவட்டத்தில், வழமையாக நடைபெறுகின்றது.

எனினும், ஒருசிலர் மாத்திரம் இது தொடர்பில் தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருப்பதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

அதேநேரம் அதிகாரிகள் ஒரு சிலரும், அரசியல்வாதிகள் ஒருசிலரும் தம்மால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், எல்லோரும் ஒன்றிணைந்தால் இதற்கான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்ற சொற்பிரயோகங்கள் ஒரு சிலர் பேசுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை தாக்குதல் தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் சிலவற்றை குறிப்பிடுவதும் சாலப்பொருத்தமானது.

கிரான் பிரதேசத்தில் 19.07.2016ஆம் திகதி காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

இவர் புலிபாய்ந்தகல் என்ற பகுதியிலுள்ள முறுத்தானை – காஞ்சிரங்காடு எனும் இடத்திலுள்ள வயலுக்கு தனது மகனுடன், மோட்டார் சைக்கிளில் சென்ற போது, காட்டுப் பகுதியில் மறைந்திருந்த யானை இவர்களை துரத்தி தாக்கியுள்ளது.

இதனால் 58 வயதுடைய 6 பிள்ளைகளின் தந்தையான சிவராசா மகேஸ்வரன் என்பர் உயிரிழந்தார். அதே போன்று 2016.6.01ஆம் திகதி மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திற்குட்பட்ட கற்பககேணி எனும் இடத்தில் தனது மாமியின் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த தந்தை, மகள் ஆகிய இருவரையும் யானை தாக்கியது.

இதன் போது 6 வயது சிறுமியான ராசையா ரோஜினி உயிரிழந்தார். அவரது தந்தை காயப்பட்டார். 26.04.2016ஆம் திகதி வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாவற்கொடிச்சேனை, கண்ணகிநகர் போன்ற கிராமங்களில் அதிகாலை வேளையில் காட்டுயானை தாக்கியதில் நான்கு வீடுகள் சேதமடைந்தன.

வீடுகளில் இருந்த நெல் மூடைகள், அரிசி, மின்சாரப் பொருட்கள், வீட்டுப் பாவனை உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் சேதமாக்கப்பட்டன.

23.09.2015ஆம் திகதி வெல்லாவெளி மண்டூர் சுணையங்கல் பிரதேசத்தில் வைத்து காட்டுயானை தாக்கி மண்டுர் கணேசபுரத்தில் வசித்த 6 பிள்ளைகளின் தந்தையான சோமசுந்தரம் தர்மரத்தினம் என்பவர் உயிரிழந்துள்ளார்.

இவர் தனதுதொழில் நிமிர்த்தமாக மண்டூர் சுணையங்கல் பகுதிக்கு நான்கு பேருடன் சென்றபோது யானை அவர்களை துரத்தியதில் மூவர் தப்பிய நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.

சாமந்தியாறு – நெல்லிக்காட்டில் 2015.06.10ஆம் திகதி அதிகாலை யானை தாக்கி கொக்கட்டிசோலையை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சற்குணம் இராசதுரை உயிரிழந்தார்.

இவர் தமது சேனைப்பயிர் செய்கையை மேற்கொண்டிருந்த போதே யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார்.

அண்மையில் சித்தாண்டி சந்தனமடு ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நான்கு பிள்ளைகளின் தந்தை குமாரன் யோகநாதன் உயிரிழந்துள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (19) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (20)

அதுமட்டுமின்றி செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட பல பகுதிகளில் காட்டு யானையின் தாக்கம் அதிகரித்த வண்ணமே உள்ளது.

இவ்வாறு உயிரிழப்புக்களும், பொருட்சேதங்களும் எற்பட மறுபக்கம் யானை உயிரிழக்கும் சம்பவங்களும் இடம்பெறுக்கொண்டே இருக்கின்றன.

இதற்காக அரசினால் மின்வேலிகளும், யானையினை துரத்துவதற்கு வெடிகளும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

எனினும், இதனால் தமக்கான பாதுகாப்பு கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மாற்றுத்தீர்வுகளும் இன்னும் அமுல்படுத்தபடவுமில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வனஜீவராசி திணைக்களத்தினால் யானைகளை கட்டுப்படுத்த முடியாமைக்கான காரணம் அவர்களுக்கான வளங்கள் குறைவாக இருப்பதாகவும் அதனால் தான் இப்பிரச்சினைகளை தீர்க்க முடியாதுள்ளதாகவும் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் கூறினார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (21)

மேலும் யானைப்பிரச்சினை தொடர்பாக அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிகமாக தேசம் விளைவிக்கும் யானைகளை பிடித்து வேறு இடங்களுக்கு கொண்டு செல்லுதல், யானைவேலிக்கு உள்ளே தங்கியிருக்கின்ற யானைகளை யானைவேலிகளுக்கு வெளியே செல்ல வைத்தல், வேலி இல்லாத இடங்களுக்கு புதிய வேலிகளை அமைத்தல், திருத்தவேண்டிய வேலிகளை திருத்துதல் போன்ற திட்டங்களை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

எனினும், இந்த திட்டங்கள் இன்னும் மேற்கொள்ளவில்லை எனவும் மாகாணசபை உறுப்பினர் குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறெனினும் யானையின் தாக்குதலினால் உயிரிழந்தவர்களில் அனேகமானவர்கள் குடும்ப தலைவர்கள்.

இவர்கள் அன்றாடம் தொழில் செய்து தமது குடும்பத்தினை வழிநடத்தி சென்றவர்கள். இவர்களின் உழைப்பில் தங்கி வாழ்ந்த குடும்பங்கள் இன்று நிர்க்கதியாகி உள்ளனர்.

அரசினால் வழங்கப்படும் இழப்பீடு உயிரிழந்தவரின் மரணச்செலவுக்கே போதுமானது. வாழ்நாள் பூராக தமது தந்தைகளை இழந்து உதவியின்றி வாழும் பிள்ளைகளின் எதிர்காலம்?

கணவனை இழந்து குடும்பத்தை வழிநடத்தும் மனைவியின் எதிர்காலம்? அங்கங்களை இழந்து தவிப்பவர்களின் எதிர்காலம்? அவர்களின் குடும்பங்களின் எதிர்காலம்?

625.0.560.320.160.600.053.800.668.160.90 (22)

இது போன்ற பல்வேறுபட்டவர்களின் எதிர்காலங்கள் கேள்விக்குறிகளாக மாறியிருக்கின்றது. இவ்வாறான குடும்பங்களின் சுமைகளையும், வலிகளையும் துடைப்பதற்கு எவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கமும், சமூகநலன்சார் அக்கரையுள்ளவர்களும் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் சிந்திக்க வேண்டும்.

ஒருநாள் ஒரு ரூபாயையும், ஒரு உதவியையும் வழங்கிவிட்டால் அவர்களின் வாழ்க்கையில் ஒளி கிடைத்துவிட்டது என்று எண்ண முடியாது.

ஒவ்வொருநாளும் ஒவ்வொரு ரூபாயும் கிடைப்பதற்கான வழிவகைகளும் ஏற்படுத்த வேண்டும். இன்னோர் பக்கம் உயிருக்கு அஞ்சி வாழ்வை கொண்டு செல்லும் மக்களுக்கான தீர்வினை இன்னோர் வீட்டில் அழுகுரல் கேட்பதற்கு முன்னர் விரைவாக தீர்வு காணப்பட வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (23) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (24)

 

SHARE