யுத்தம் காரணமாக சிறுவர்களே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளும் அரசாங்கப் படையினருக்கும் இடையிலான யுத்தம் காரணமாக அதிகளவில் சிறுவர்களே பாதிக்கப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளது.
சிறுவர்களும், யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சிறுவர் சிறுமியராக இருந்தவர்களும் யுத்தத்தின் பாதிப்பினையும் அழுத்தங்களையும் மிக மோசமாக அனுபவித்துள்ளனர் என தெரிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பிலான அறிக்கையிலும் சிறுவர்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.
சிறுவர் போராளிகளாக இணைக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள், காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் விசேடமாக கவனிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
உண்மை கூறுதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், நட்டஈடு வழங்குதல் உள்ளிட்ட அனைத்து செயன்முறைகளிலும் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காணாமல் போன தமது பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்பதனை அறிந்து கொள்ளும் உரிமை அனைத்து பெற்றோருக்கும் உண்டு என யுனிசெப் சுட்டிக்காட்டியுள்ளது. யுத்தம் காரணமாக சிறுவர் சிறுமியருக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் அனர்த்தங்களை ஐக்கிய நாடுகள் அமைப்பும் ஏனைய தரப்பினரும் அங்கீகரிக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.