கடந்த காலங்களைப் போன்று யுத்த வெற்றி விழாக்கள் இனி நமது நாட்டில் கொண்டாடப்பட மாட்டாதென அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானமானது வரவேற்கத்தக்கது என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அதே போன்று தமிழ்ப் பகுதிகளில் யுத்த வெற்றிச் சின்னங்களாகக் கருதப்பட்டு, பராமரிக்கப்பட்டு, பாதுகாத்து வரக்கூடிய அனைத்தையும் அகற்றவும் இந்த அரசு முன்வர வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
யுத்த வெற்றி விழாக்கள் கடந்த காலங்களில் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், கடந்த கால யுத்தம் தொடர்பான ஞாபகார்த்த நிகழ்வுகள் எவையாயினும், அவற்றால் தமிழ் பேசும் மக்களின் உணர்வுகள் புண்படக்கூடாது என்ற விடயத்தை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளோம். எமது இந்த நிலைப்பாட்டை இந்த அரசு அவதானத்தில் எடுத்து, அதனை நடைமுறைப்படுத்தியிருப்பதானது, தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நல்ல ஆரம்பங்களில் ஒன்றாகுமென நாம் கருதுகின்றோம் என சொல்லியுள்ளார் டக்ளஸ்.