
யு.எஸ் டொலர்ஸ் உம், இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரமும்!
-அ.ஈழம் சேகுவேரா-
காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகத்தை (Office for Missing Persons – OMP) திறப்பதற்கு, காணாமல் ஆக்கப்படுதலுக்கு எதிராக வேலை செய்யும் சிவில் சமுக அமைப்புகளிடமிருந்து ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதற்கான சந்திப்புகள் கடந்த மே மாதத்தின் முற்பகுதியிலிருந்து வடக்கு கிழக்குக்கு வெளியே (இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சில்) நடத்தப்பட்டுள்ளன.
இந்தச் சந்திப்புகளில் கலந்துகொண்ட அமைப்புகளில் ஒன்றிரண்டு அமைப்புகள், OMP ஐ திறப்பது தொடர்பில் அரசாங்கத்தின் அணுகுமுறைகளிலுள்ள குற்றம் குறைகளை சுட்டிக்காட்டி, தமது பரிந்துரைகளையும் உள்ளீர்த்துக்கொண்டு அதன்படி அலுவலகம் திறக்கப்படுமாயின் முழுமையான ஒத்துழைப்பை வழங்க முடியும் என்று கராராக தெரிவித்து விட்டதாக அறியக்கிடைக்கின்றது. இதில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும் உள்ளடக்கம்.
ஆயினும், அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்காது பச்சைக்கொடி காட்டியுள்ள தென்னிலங்கையை செயல்பாட்டுத் தளமாக கொண்டுள்ள அமைப்புகளுக்கு பெருந்தொகையான யு.எஸ் டொலர்கள் வழங்கப்பட்டு, காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அறிவுறுத்தும் செயலமர்வுகளோ அன்றி கலந்துரையாடல்களோ அவற்றால் நடத்தப்படுகின்றன.
இவ்வாறானதொரு சூழலில், ‘உங்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்லர்’ எனும் கணக்காக, தென்னிலங்கை அமைப்புகளுக்கு சவால் விடும் அளவுக்கு, வடக்கு கிழக்கு மாகாணங்களில் தங்களுக்கு என்று ஒரு கோட்பாட்டுத்தளமோ, தங்களுக்கு என்று ஒரு செயல்பாட்டுத்தளமோ கிடையாத, சிவில் சமுக அமைப்புகள் சிலவும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்தின் வாசலில் யு.எஸ் டொலர்களுக்காக மூட்டை முடிச்சுகளுடன் படுத்துக்கிடக்க தொடங்கிவிட்டன.
யார் இவர்கள்? தமது ஒரு காலைத்தானும் ஊன்றி இந்த மக்களுக்காக வீதியில் இறங்கிப் போராடாத, அந்த ஒருங்கிணைப்புக்குழு, இந்த அமையம் என்று சொல்லிக்கொண்டு சிபாரிசு அடிப்படையில் தங்களைத் தாங்களே தேர்ந்து எடுத்துக்கொண்ட ஒரு அறிக்கை கமிட்டியே இவர்கள். அதாவது வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திக்கும் மேட்டுக்குடியினரின் அறிக்கை குழு. ஓரளவுக்கு ஆங்கில மொழிப்புலமை இருந்து விட்டாலே போதுமானது, வெளிநாட்டு தூதுவராலயங்களிடமிருந்து காசு கறந்து விடலாம் என்பதற்கு மிகவும் மோசமான முன்னுதாரணங்கள் இவர்கள்.
அமெரிக்க தூதுவராலயத்தின் வாசல் கதவுகள் திறந்து டொலர்கள் ஈ என்று பல்லை இழித்தது தான் தாமதம், ‘இந்தா பாரு, தீயாய் வேலை செய்யணும் பாஸ்’ என்று ஒருவரை ஒருவர் பார்த்து சொல்லிக்கொண்டு, பம்பரமாய் சுழல்கின்றார்கள். ஆலாய்ப் பறக்கின்றார்கள்.
தமது பரிந்துரைகளையும் உள்ளீர்த்துக்கொண்டு அதன்படி அலுவலகம் திறக்கப்படுமாயின் முழுமையான ஒத்துழைப்பை வழங்க முடியும் என்று தெரிவித்த இதர அமைப்புகள், இவர்களை நோக்கி ‘யு.எஸ் டொலர்ஸ் என்றதும் என்னம்மா இப்பிடி பண்ணீட்டீங்களேம்மா?’ என்று கேள்வி கேட்டால், தாங்கள் ஒன்றும் சும்மா இல்லை, விமர்சனங்களுடனேயே ஆதரவு தெரிவித்திருப்பதாக மழுப்புகின்றனர்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் மட்டும் நாள் ஒன்றுக்கு குறைந்தது 15க்கும் மேல்பட்ட அமர்வுகளாவது இவர்களால் பரவலாக நடத்தப்படுகின்றன. வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே அங்கொன்றும் இங்கொன்றுமாக, ஒன்றிரண்டு அமர்வுகள் இரண்டு மூன்று நாள்களுக்கு என்று தொடர்ச்சியாகவோ அன்றி தொட்டம் தொட்டமாகவோ நடத்தப்படுகின்றன.
மக்களுக்கு அறிவுறுத்தும் வேலைத்திட்டம் என்று சொல்வதை விடவும், பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இவர்களால் ‘மூளைச்சலவை’ செய்யப்படுகின்றனர் என்று சொல்வதே சரியானதாகும். ஏனெனில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குழுமத்துக்குள்ளிருந்து பத்திரிகை வாசிப்பு பழக்கமுடைய, ஓரளவுக்கு சமகால அரசியலைப் புரிந்துகொண்டு கேள்வி எழுப்பக்கூடியவர்கள் இவ்வாறான அமர்வுகளுக்கு அழைக்கப்படுவதில்லை. காய் வெட்டிவிடப்படுகின்றனர்.
ஏன்? எதற்காக? இப்படி? என்றால், அதற்கான பின்னணி பற்றியும் ஆராயப்படல் வேண்டும்.
வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலையும் குடும்பங்கள் உள்ளன. அவர்கள் தத்தமது மாவட்டங்களில் தங்களுக்கு என்று சங்கங்களை தோற்றுவித்து ‘தமது உறவுகளை தேடிக்கண்டறியும் ஒரு இயக்கமாகவே’ செயல்பட்டு வருகின்றனர்.
மாவட்ட வாரியான இந்த சங்கங்களை, மேலேகுறிப்பிட்டுள்ள யு.எஸ் டொலர்ஸ் அமைப்புகள் சின்னஞ்சிறு குழுக்களாக உடைத்து, ஏலவே நொந்து போயுள்ள மக்களை ‘கருத்தமர்வு – செயலமர்வு’ என்று சொல்லிக்கொண்டு, வடக்குக்கும் தெற்குக்கும் மந்தைகள் போல ஓட்டிக்கொண்டு, அலைக்கழித்து திரிந்தபோது, இவர்களின் இந்த மோசமான மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பகிரங்கமாக எதிர்வினையாற்றியதும், அந்த மக்களுக்கு ‘அவர்களுக்குள்ள அடிப்படை உரிமைகள் – சுயகௌரவம்’ தொடர்பாக தெளிவூட்டி, இந்த யு.எஸ் டொலர்ஸ் அமைப்புகளின் வேலைத்திட்டங்களுக்கு எதிராக மக்களைத் திருப்பி விட்டதும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தான்.
வெளிநாட்டு தூதுவராலயங்களிடமிருந்து நிதியை பெற்றுக்கொள்வதற்கு இவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை ஒரு கருவியாகவோ, ஊடகமாகவோ பயன்படுத்தி வந்தபோது, இவர்களின் என்.ஜி.ஓ மேலாதிக்க கனவுகளுக்கு கணிசமான அளவு தடைபோட்டது என்னவோ வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தான்.
என்.ஜி.ஓ மேலாதிக்க கனவுலகில் சஞ்சரிக்கும் இந்த யு.எஸ் டொலர்ஸ் அமைப்புகள், தமது சில்லறைத்தனமான வேலைகளுக்கு மாவட்ட வாரியான சங்கங்களை சின்னஞ்சிறு குழுக்களாக உடைத்தும் – பிளவுறுத்தியும் தத்தமது இஸ்டத்துக்கு கையாண்டமையினால் வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் தலா இவ்விரண்டு சங்கங்கள் தொழில்படும் மோசமான சம்பவங்களும் நடந்தேறியுள்ளன.
ஆள்கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்படல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் பிரச்சினையை சர்வதேச விவகாரமாக பேசவைக்க வேண்டியதொரு காலத்தில், அதனை இந்த யு.எஸ் டொலர்ஸ் அமைப்புகள் குழுநிலை விவாதமாக்கிக்கொண்டிருந்த ஒரு சிக்கலான சூழலில், மாவட்ட வாரியான சங்கங்களை ஒன்றிணைத்து ‘தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கம் (Forum for Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives – Tamil Homeland) என்ற பெயரில் அவர்களை ஒரு கூட்டு இயக்கமாக தொழில்பட நெறிப்படுத்தியது வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு.
FSHKFDR எழுச்சி பெற்ற பின்னர், இந்த மக்களை முன்னரைப்போல ‘அந்த கருத்தரங்குக்கு வா – இந்த செயலமர்வுக்கு வா’ என்று மிருகங்களைப்போல, இந்த யு.எஸ் டொலர்ஸ் அமைப்புகளால் தத்தமது விருப்பத்துக்கு இருத்தி எழுப்ப முடியவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
ஒன்று, மக்கள் கேள்வி மேல் கேள்வி கேட்கத்தொடங்கி விட்டார்கள். இரண்டு, FSHKFDR இன் பாதுகாப்பு வலயமாகவும், வோட்ஜ்மேனாகவும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு உள்ளமை.
காணாமல் ஆக்கப்பட்டுள்ள சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ‘அது செய்யப்போகின்றோம் இது செய்யப்போகின்றோம் என்று சொல்லி, உங்கள் பெயரை கூவிக்கூவி விற்றுத்தான் யு.எஸ் டொலர்ஸ்களை இந்த அமைப்புகள் வாங்குகின்றன’ என்பது தொடர்பில் FSHKFDR க்கு நன்கு அறிவூட்டப்பட்டிருப்பதால்,
இப்போதெல்லாம் யு.எஸ் டொலர்ஸ் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படும் கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளும் மக்கள், ‘காசு எங்கிருந்து வந்தது? எவ்வளவு வந்தது? எவ்வளவு செலவு? எவ்வளவு மீதமுள்ளது?’ என்றெல்லாம் உரிமையோடு உரத்துக் கேள்வி கேட்கத்தொடங்கி விட்டனர்.
பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பெயரை விற்று பெறப்பட்ட பணத்தில் தாங்கள் சம்பளமும் எடுத்துக்கொண்டு, வாகனத்தையும் வாடகைக்கு அமர்த்திக்கொண்டு, அதற்கு எரிபொருளும் நிரப்பிக்கொண்டு, உயர்தர ஹோட்டல்களில் உணவும் அருந்திக்கொண்டு, ஓய்வுக்கு ஏசி அறைகளையும் ஒதுக்கிக்கொண்டு, கலந்துரையாடல்களுக்கு சமுகமளிக்கும் மக்களுக்கு இந்த யு.எஸ் டொலர்ஸ் அமைப்புகள் ஐநூறு ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரையான போக்குவரத்து கொடுப்பனவும், இருநூற்று ஐம்பது ரூபாய் பெறுமதியான சோற்றுப்பார்சலும் கொடுத்து வந்துள்ளன.
வடக்கு கிழக்குக்கு உள்ளே என்றாலும் சரி, வெளியே என்றாலும் சரி, இந்த யு.எஸ் டொலர்ஸ் அமைப்புகள் கலந்துரையாடல்கள் என்று அழைத்ததும், பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ‘தங்கள் பிள்ளைகள் பற்றிய உறுதியான முடிவு ஏதாவது கிடைத்துவிடும்’ என்ற நப்பாசையில் ஓடோடிச்சென்று விடுவர். தரமற்ற உணவைக் கொடுத்தாலும் வாங்கி உண்டு விடுவர். சுவாத்தியமற்ற ஓடைக்குள்ளும் ஒண்டிக் குறாவிக்கொண்டு தூங்கி விடுவர்.
FSHKFDR எழுச்சி பெற்ற பின்னர் இப்போதெல்லாம் அப்படியல்ல. கலந்துரையாடலை ஏற்பாடு செய்தவர்கள் யார்? யார் யார் கலந்துகொள்கிறார்கள்? யார் யாருக்கு அழைப்பு விடுத்துள்ளீர்கள்? ஏன் அவருக்குச் சொல்லவில்லை? நாங்கள் அவருக்குச் சொல்லலாமா? இவரைக் கூட்டி வரலாமா? கலந்துரையாடலின் நோக்கம் தான் என்ன? எத்தனை நாள்கள் நடைபெறும்? தங்குமிட வசதிகள் எப்பிடி? என்றெல்லாம் பலவாறான கேள்விகளால் துளைத்தெடுக்கத் தொடங்கி விட்டனர். கலந்துரையாடலுக்கான எந்தவொரு அழைப்பையும் புறக்கணிக்காமல் அங்கு சென்று நடப்பவற்றை கண்காணிக்க வேண்டும் என்பதிலும் மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பெயரால் பெறப்பட்ட பணத்துக்கு, இந்த யு.எஸ் டொலர்ஸ் அமைப்புகள் எப்பொழுதுமே மக்கள் மன்றத்தில் கணக்கறிக்கை காட்டியதில்லை. நிதி விடையத்தில் அந்த மக்களுக்கு உண்மையாக நடந்து கொள்ளாத யு.எஸ் டொலர்ஸ் அமைப்புகளுக்கு, இப்பொழுதெல்லாம் மக்களின் இந்தக் கேள்விகள் பெருத்த நெருடலையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
ஆதலால் FSHKFDR உம், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும் இந்த யு.எஸ் டொலர்ஸ் அமைப்புகளின் கண்களுக்கு பயங்கரவாதிகளாகவே தென்படுகின்றன. இந்த யு.எஸ் டொலர்ஸ் அமைப்புகள் தாங்கள் மேற்கொள்ளும் நிலைமாறு காலகட்ட நீதி செயல்பாடுகளை FSHKFDR உம், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும் குழப்புவதாக அரசாங்கத்துக்கும் – இதர வெளிநாட்டு தூதுவராலயங்களுக்கும் குத்தியும் காட்டியும் கொடுக்கின்றன.
தென்னிலங்கையை செயல்பாட்டுத்தளமாக கொண்டுள்ள யு.எஸ் டொலர்ஸ் அமைப்பு ஒன்று, கடந்த ஜீன் 10இல் இருந்து மூன்று நாள்கள் கருத்தமர்வை (OMP ஐ திறப்பது தொடர்பில் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக) களனி பகுதியில் ஒழுங்கு செய்திருந்தது. மாவட்ட வாரியான சங்கங்களிலிருந்து பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தலா அறுவருக்கு அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது. தாங்கள் தவறாக வழிநடத்தப்படலாம் எனும் ஒரு எச்சரிக்கையாக வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் செயல்பாட்டாளர் ஒருவரையும் அந்த மக்கள் தம்முடன் வருமாறு கூறி அழைத்துச்சென்றிருந்தனர்.
இத்தனைக்கும் அந்த செயல்பாட்டாளரும் காணாமல் ஆக்கப்படுதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர் தான். ஆனால் ‘அவரை உள்ளே அனுமதிக்க முடியாது’ என்று ஏற்பாட்டாளர்கள் சொல்ல, ‘அவரை உள்ளே அனுமதிக்காவிட்டால் நாங்களும் கலந்துரையாடலை புறக்கணித்து வெளியேறிச்செல்வோம்’ என்று பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கூறவும், வேறு வழியின்றி அவர் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆயினும், அந்த மூன்று நாள்களும் அந்த செயல்பாட்டாளர் ஒரு தீண்டத்தகாதவரைப் போலவும், பயங்கரவாதியை நோக்குவதைப் போன்ற ஒரு மனோநிலையுடனும் நடத்தப்பட்டுள்ளார்.
மே 20 அன்று வெளிவிவகார அமைச்சரை சந்தித்து பேசுவதற்கு முதல் நாள் நடைபெற்ற (OMP ஐ திறப்பது தொடர்பாக) தயார்ப்படுத்தல் கூட்டத்துக்கும் பாதிக்கப்பட்டுள்ள மக்களும், சில சிவில் சமுக அமைப்புகளின் செயல்பாட்டாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். இங்கு அமையம் ஒன்றின் பெயரால் கலந்துகொண்டிருந்த கிருஸ்தவ பாதிரியார் ஒருவர், OMP க்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து இரண்டு பக்க குற்றப்பத்திரிகையை வாசித்துவிட்டு, அதில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை கையெழுத்து வைக்குமாறும் கோரியிருந்தார். ஆனால் அதே கிருஸ்தவ பாதிரியார் மூன்று நாள்களின் பின்னர், அந்த மக்களுக்கே தெரியாமல் பின்பக்க வாசல் கதவால் சென்று OMP ஐ திறப்பதற்கு முழுமையான ஆதரவு தெரிவித்து பச்சைக்கொடி தூக்கியுள்ளார்.
இந்த யு.எஸ் டொலர்ஸ் அமைப்புகள் தாங்கள் ஒழுங்கு செய்யும் கலந்துரையாடல்களில், ‘காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினையை தேசிய மட்டத்துக்கு கொண்டு செல்லப்போகின்றோம்’ என்று கூறுகின்றன. அது எந்த வகை தேசிய மட்டம்? தமிழ்த் தேசியமா? சிங்களத் தேசியமா? எனும் கேள்விகளுக்கு அவர்களிடம் உருப்படியான பதில்கள் ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, கேள்வியை எழுப்பவர்களை நோக்கி கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று குற்றமே கூறுகின்றனர்.
ஆள்கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்கள், தமிழ் மக்களை பொறுத்தவரையில் ஒரு தேசிய பிரச்சினையாகும். அது இனப்பிரச்சினையுடனும் தொடர்புபட்டுள்ளது. ஆயினும் இந்த யு.எஸ் டொலர்ஸ் அமைப்புகள் சொல்வதைப்போல ‘தமிழ்த் தேசியம்’ என்று, ஒன்று இல்லை எனும் வாதத்தை ஏற்றுக்கொண்டுதான் இந்த தேசியப்பெருந்துயரை தமிழர் தரப்பு கடந்து செல்ல வேண்டுமா?
இந்த இரண்டு தேசிய மட்டங்களுக்கும் அப்பால், சர்வதேச விவகாரமாகியுள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை, இன்னும் கூர்மைப்படுத்தும் வேலைத்திட்டங்கள் வடக்கு கிழக்கில் சிவில் சமுக அமைப்புகளிடம் உள்ளனவா?
யார் எதிர்த்தாலும், யார் தடுத்தாலும் காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகம் (Office for Missing Persons – OMP) இலங்கையில் திறக்கப்பட்டுவிடும். அதை யு.எஸ் டொலர்கள் தான் தீர்மானிக்கின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தமிழ்த் தேசிய அரசியல் தளத்தில் ஏலவே நிர்மூலமாக்கப்பட்டு விட்டது. இவ்வாறானதொரு அபாயகரமான சூழலில் சிவில் சமுக வெளியிலும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் யு.எஸ் டொலர்களால் மூழ்கடிக்கப்பட்டு விடுமா?
-அ.ஈழம் சேகுவேரா-