யேமனில் இடம்பெறும் இரத்தக்களறி நிறைந்த மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் பாலியல்வன்முறைகள், விமானதாக்குதல்கள் உட்பட பல வகையான யுத்தகுற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது.
2015 முதல் ஹவுதி கிளர்ச்சிக்காரர்களிற்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2015 இல் மோதல்கள் தீவிரமடைந்ததை தொடர்ந்து ஓரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் இது தவிர கடும் பட்டினி மற்றும் நோயினால் நாளொன்றிற்கு 130 குழந்தைகள் இறப்பதாகவும் புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையிலேயே ஐநா இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
ஆயுதமோதல்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை பலமுறை மீறியுள்ளனர் என கருதமுடியும் என ஐநா விசாரணையாளர்கள் குழு தெரிவித்துள்ளது.
யேமனில் இடம்பெற்றுள்ள இந்த மீறல்களை யுத்த குற்றங்கள் என கருதலாம் எனவும் ஐநா குழு தெரிவித்துள்ளது.
கண்மூடித்தனமாக தடுத்துவைக்கப்படுதல்,பாலியல்வன்முறை, சித்திரவதை மற்றும் சிறுவர்களை படையணியில் சேர்த்தல் போன்ற நடவடிக்கைகள் அதிகமாக இடம்பெற்றுள்ளன எனவும் ஐநா விசாரணை குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஐநா விசாரணைக்குழுவிற்கு தலைமை தாங்கியுள்ள கமெல்ஜென்டுபெய் பல குற்றவாளிகளை இனம் கண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
யேமனில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் குறித்த இரகசிய ஆவணமொன்றை ஐநாவின் மனித உரிமை ஆணையாளரிடம் கையளிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
யேமன் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளே யுத்த குற்றங்களிற்கு காரணம் என கருத இடமுண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யேமன் மற்றும் சவுதி அரேபியாவின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள நாடுகள் யுத்த குற்றங்கள் என கருதக்கூடிய அளவுக்கதிகமான தாக்குதல்களை மேற்கொண்டிருக்கலாம்எனவும் ஐநா விசாரணை குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஹவுத்தி கிளர்ச்சிக்காரர்களும் கண்மூடித்தனமான எறிகணை தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர் என ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.
மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினருக்கு ஆயுதங்களை வழங்கவேண்டாம் எனவும் ஐநா குழு உலக நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளது.