சவுதிஅரேபியா தலைமையிலான கூட்டணியின் விமானதாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால் யேமன் கடந்த 100 ஆண்டுகளில் சந்திக்காத மிக மோசமான உணவுப் பஞ்சத்தினை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படலாம் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.
யுத்தம் தொடர்ந்து இடம்பெற்றால் அடுத்த மூன்று மாதங்களில் நாடு பஞ்சத்தில் சிக்கும் என ஐக்கியநாடுகளின் யேமனிற்காக மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் லிசா கிரன்டே தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சுமார் 13 மில்லியன் மக்கள் பட்டினி நிலையை எதிர்கொள்ளவேண்டிவரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் 21 ம் நூற்றாண்டில் கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட பஞ்சம் ஏற்படாது என நினைத்துக்கொண்டிருந்தோம் , ஆனால் யேமன் அவ்வாறான ஒரு உணவுப்பஞ்சத்தை எதிர்கொள்கின்றது என்பதே யதார்த்தம் மற்றும் உண்மை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யேமனின் நிலை குறித்து நாங்கள் வெட்கப்படவேண்டும் என்பது குறித்து எந்த சந்தேகமும் இல்லை எனவும் ஐநாவின் மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
துயரத்தில் சிக்கியுள்ள மோதலில் சிக்கியுள்ள மக்களின் பிரச்சினைகளிற்கு தீர்வு காணவேண்டும் என்ற அர்ப்பணிப்பு அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் தலைமையிலான ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தலைநகர் சனா உட்பட யேமனின் பெரும்பகுதியை கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து கடந்த மூன்று வருடகாலமாக யேமனில் உள்நாட்டு மோதல் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
சவுதிஅரேபியா தலைமையிலான கூட்டணி கிளர்ச்சிக்காரர்களிற்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றது.