உலக சுகாதார அமைப்பின் தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய மண்டலத்தின் 69வது ஆண்டு அமர்விற்காக உடற்பயிற்சி வேலைத்திட்டம் இன்று காலை காலி முகத்திடலில் நடைபெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் நடைபெற்ற நிகழ்வில் பெருமளவானோர் பங்கேற்றனர்.
சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மஹிபால, உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் மார்கரெட் சான் (Dr.Margaret Chan) , உலக சுகாதார அமைப்பின் துணை இயக்குனர் ஜெனரல் Anarfi Asamoa-Baah, உலக சுகாதார அமைப்பின் ஆசிய இயக்குனர் Poonam Khetrapal Singh, உலக சுகாதார அமைப்பின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி ஜேகப் குமரேஷன் உட்பட சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் இந்த சந்தர்ப்பத்தில் கலந்துக் கொண்டுள்ளனர்.
இதன் போது கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சர்,
உலக சுகாதார அமைப்பின் இந்த அமர்வில் இலங்கைக்கு பல வெற்றிகள் கிடைக்கவுள்ளது. விசேடமாக யானைக்கால் நோய் அற்ற நாடாக இன்று இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பினால் சான்றிதழ் வழங்கப்படுகின்றது.
தொற்று நோயை தடுப்பதே எங்கள் நாடு முகம் கொடுத்துள்ள பிரதான சவாலாகும். இந்த சவாலை வெற்றிக் கொள்வதற்காக விரைவான நிலையான அபிவிருத்தியை இலக்காக கொண்டு இலங்கை பயணிக்க வேண்டியவை தொடர்பில் முக்கிய பல தீர்மானங்கள் இந்த மாநாட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது.
உலக சுகாதார அமைப்பு இலங்கை தொடர்பில் சிறப்பான பதில் வழங்கியுள்ளமையினால் தொற்று நோயினை கட்டுப்படுத்துவதற்காக தற்போது வரையில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை செயற்படுத்துவது எங்களுக்கான செயற்பாடாகும்.
தொற்று நோயை தடுப்பதற்கு உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமான ஒன்றாகும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.