யோசனைகள் சமர்ப்பிக்காத முஸ்லிம் தலைமைகள்

253
உத்தேச அரசியலமைப்புத் திருத்தம் அல்லது அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றேனும் இதுவரையில் லால் விஜேநாயக்க தலைமையிலான அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் ஆலோசனை பெறறுக் கொள்ளும் ஆணைக்குழுவிடம் தமது யோசனைகளை சமர்ப்பிக்கவில்லை.

பெரும்பான்மைக் கட்சிகளும் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான சிறுபான்மை தமிழ்க் கட்சிகளும் உரிய வேளைக்குள் தத்தமது யோசனைகளை சமர்ப்பித்திருக்கும் நிலையில் முஸ்லிம் கட்சிகள் தனித்தோ, ஒன்றுபட்டோ எந்த யோசனைகளையும் முன்வைத்ததாக தெரியவில்லை.

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தளவில் காலம் கடந்து கைசேதப்படுவது பழக்கப்பட்ட விடயமாகவே உள்ளது.

ஆலோசனை பெற்றுக்கொள்ளும் ஆணைக்குழுவின் காலக்கெடு முடிவடையும் நிலைக்கு வந்திருக்கும் நிலையில் ஒருசில முஸ்லிம் அமைப்புகள் தமது யோசனைகளை முன்வைத்திருக்கின்றன.

ஆனால் முஸ்லிம் அரசியல் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோ, அகில இலங்கை மக்கள் காங்கிரஸோ ஏனைய அரசியல் தரப்புகளோ இதுவரையில் மௌனம் கலையாமலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றன.

மீதமிருக்கின்ற குறுகிய காலத்துக்குள் இக்கட்சிகள் துரிதமாகச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை அக்கட்சிகளின் தலைமைகள் உணர்ந்து செயற்படுவார்களா என்ற எதிர்பார்ப்புடன் முஸ்லிம் சமூகம் காத்துக் கொண்டிருக்கின்றது.

இதற்கிடையில் இந்த புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக அரசியலமைப்பு நிர்ணய சபை எதிர்வரும் 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதற் தடவையாக பாராளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவிருக்கின்றது.

இந்த அரசியலமைப்பு நிர்ணய சபையானது இலங்கையின் இரண்டாவது அரசியலமைப்பு நிர்ணய சபையாகும். முழு பாராளுமன்றமும் அரசியலமைப்பு சபையாக மாற்றம் பெற்று மொத்த உறுப்பினர்களான 225 பேரும் கூடி புதிய அரசியலமைப்பு குறித்து ஆராயவுள்ளனர்.

2017 ஆம் ஆண்டில் புதிய அரசியல் யாப்பை அறிமுகப்படுத்தும் நோக்கிலேயே இச்சபை செயற்படவுள்ளது. புதிதாக ஒரு அரசியல் யாப்பைத் தயாரிப்பதா? அல்லது இருக்கும் யாப்புக்கு வலுவான திருத்தங்களை உள்வாங்கி அதனை பலப்படுத்துவதா என்பது குறித்த உறுதியான முடிவெதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

அரசியல் கட்சிகளாலும், பொதுமக்கள், பொது அமைப்புக்களாலும் சமர்ப்பிக்கப்படுகின்ற யோசனைகளை இந்த அரசியலமைப்பு நிர்ணய சபை விரிவாக ஆராய்ந்ததன் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

நாட்டில் இன்றுள்ள அரசியலமைப்புக்குள் பாரிய மாற்றங்கள் தேவைப்படுவது அண்மைக் காலத்தில் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

நிறைவேற்றதிகாரம் தனிநபரிடம் இருப்பதை மக்கள் நிராகரித்துவிட்டனர். பதிலாக நிறைவேற்றதிகாரம் பாராளுமன்றத்திடமே இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

2015 ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இந்தக் கோரிக்கைக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது. இன்னமும் அந்த நிலைப்பாட்டையே பெரும்பலான மக்கள் கொண்டிருக்கின்றனர்.

புதிதாக தயாரிக்கப்படக்கூடிய அரசியலமைப்புச் சட்டமானது நாட்டின் சிறுபான்மை தமிழ், முஸ்லிம்களை பெரும்பான்மை சிங்கள மக்களுடன் இணைத்து செயற்படுவதற்குரிய வகையிலான திட்டத்தையே நாடு எதிர்பார்க்கின்றது. இது காலத்தின் கட்டாயமானதும் கூட.

நாடு சுதந்திரமடைந்து 68 வருடங்கள் கடந்த நிலையிலும் கூட இன்று வரையில் சகல இனங்களையும் ஒன்றுபடுத்த முடியாத அவல நிலையே தொடர்கதையாகக் காணப்படுகின்றது.

இன, மத, மொழி ரீதியில் நாடு பிளவுபட்டதன் விளைவு உலகில் பின்னடைவைக் கொண்டதாகவே இலங்கை தொடர்ந்தேச்சையாக நோக்கப்படுகின்றது.

ஒற்றுமை, நல்லிணக்கம் எமது மக்களிடையே கேள்விக்குறியாகவே காணப்படுகிறது. இதன் விளைவாகவே 30 ஆண்டுகளுக்கும் கூடுதலான காலம் நாடு யுத்தத்தை எதிர்கொண்டது.

அதன் காரணமாக லட்சக்கணக்கானோரின் உயிர்களை நாடு பறிகொடுத்தது. கடந்த காலத்தை படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்தில் பிளவுகள் ஏற்படாத வண்ணம் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தி உலகுக்கு முன்னுதாரணமான நல்லாட்சியை நாம் வெளிக்காட்ட வேண்டும்.

எல்லாத் தரப்பினரையும், சகல இனங்களையும் ஒன்றிணைக்கக்கூடிய அரசியல் யாப்பொன்றே இன்று நாட்டுக்குத் தேவைப்படுகின்றது.

அரசியலமைப்பு நிர்ணய சபை செயற்படத் தொடங்கும் போது முஸ்லிம் கட்சிகளின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு எவ்வாறானதாக இருக்கப் போகின்றது அவர்களின் வகிபாகம் என்னவாக இருக்கப் போகின்றது? என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது.

காலாகாலமாக முஸ்லிம் தரப்புகள் முட்டி மோதிக்கொண்டு கட்சி ரீதியில் பிளவுபட்டு நானா? நீயா? என்ற வீணான பிடிவாதப் போக்குகளால் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட பின்னடைவு, தோல்விகளை தொடர்ந்தும் எதிர்கொள்வதா? அல்லது அனைவரும் ஒன்றுபட்டு ஒரே முடிவை ஏகமனதாக எடுத்து அதில் வெற்றி காண்பதா? என்ற தீர்க்கமான முடிவுக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் வரவேண்டும்.

தமக்கிடையே ஒருமித்த கருத்து உருவாக வேண்டியது கட்டாயமானதாகும். சிவில் சமூகத்தைவிட பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 21 முஸ்லிம் உறுப்பினர்களும் ஒன்றுபட வேண்டும். இவர்களின் கைகளில்தான் முஸ்லிம்களின் அரசியல் இருப்பு தங்கியுள்ளது.

கட்சி அடிப்படையில் முஸ்லிம்கள் நான்கு கட்சிகளிலும் உள்ளனர். அரசியலமைப்பு விடயத்தில் நாம் பிரிந்து நிற்க முடியாது. ஒன்றுபட்டே ஆக வேண்டும்.

சமூகத்தின் எதிர்காலம், அரசியல் இருப்பு, பாதுகாப்பு என்பவற்றை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும். கட்சி ரீதியில் முரண்படுவதைவிட நாம் மக்கள் சக்தியாக மாற வேண்டும்.

பெரும்பான்மையினரின் மனதை வெல்லக்கூடியதான பிரேரணைகள் எம்மால் முன்வைக்கப்பட வேண்டும். இதனைத் தனித்துச் செய்வதைவிட சகல தரப்புகளும் ஒன்றுபட்டுச் செய்வதன் மூலம் முஸ்லிம் சமூகம் பலமடைய முடியும்.

முஸ்லிம் சமூகம் தேசிய நீரோட்டத்தோடு இணைந்து பயணித்தாலும் அந்தச் சமூகம் கரைந்து போய்விடாத வகையிலான உறுதியானதும், நிலையானதுமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்.

நியாயமான விடயங்களில் விட்டுக் கொடுத்து தமது அரசியல் இருப்பு, உரிமைகளை பாதுகாப்பதில் முஸ்லிம் தலைமைகள் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும். இதனையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

SHARE