முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் லெப்டினன்ட் யோசித்த ராஜபக்ச இராணுவ நீதிமன்றத்திற்கு முன்னிலையாக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடற்படையின் சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரபூர்வமான பாதுகாப்பு தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளதாக அரசாங்க ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது. இந்த மீறல் தொடர்பில் இலங்கையின் கடற்படை முழுமையான விசாரணையை நடத்தியுள்ளது.
இந்த விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜனாதிபதியின் முடிவுக்கு இணங்கவே அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கடற்படைத்தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
கடற்படை பதவியில் இருக்கும்போதே கார்ல்ட்டன் ஸ்போட்ஸ் நெட்வேக் தனியார் நிறுவனத்தின் தலைவராக கடமையாற்றியமையானது இராணுவ சட்டப்படி குற்றமாகும்.
அத்துடன் எழுத்துமூல அனுமதியின்றி 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்ட குற்றச்சாட்டுக்களும் யோசித்த மீது சுமத்தப்பட்டுள்ளன.
இது இராணுவ நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் யோசித்த தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார் என்று இலங்கையின் அரசாங்க ஆங்கில செய்தித்தாள் தெரிவித்துள்ளது.