யோஷித்தவின் சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனம் இனி அரசுக்கே சொந்தம்

280

 

அரச வளங்களை தவறாக பயன்படுத்தியமை, பணச் சலவை, தவறான முறையில் பணத்தை சம்பாதித்தமை, போலி ஆவணங்களை தயாரித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் உறுதியானத்தை அடுத்து சீ.எஸ்.என். தொலைக்காட்சி மற்றும் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்களை அரசுடமையாக்கும் ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்த பின்னர் சீ.எஸ்.என் ஊடக வலையமைப்பு மற்றும் அதற்கு சொந்தமான சொத்துக்களை அரசுடமையாக்க முடியும் என நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி 142163 என்ற இலக்கத்தின் கீழ் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட சீ.எஸ்.என் நிறுவனத்தின் பதிவு முகவரியாக இலக்கம் 260/12 டொரிங்டன் அவனியூ கொழும்பு 5 என்ற முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் ஆரம்ப பணிப்பாளர்களாக சசித்ர கவிஷான் திஸாநாயக்க, அஷான் ரபிநாத் பெர்ணான்டோ , சாத்தியா கருணாஜீவ, ரொஹான் வெலிவிட்ட ஆகியோர் செயற்பட்டனர்.

சீ.எஸ்.என் தொலைக்காட்சியை ஆரம்பிக்க 2 ஆயிரம் லட்சம் ரூபா கடனாக பெறப்பட்டது எனக் கூறினாலும் அந்த கடன் எப்படி பெறப்பட்டது என்பதை உறுதிப்படுத்த நிர்வாகிகள் தவறியுள்ளனர்.

தொலைக்காட்சியை ஆரம்பிக்க ஃபென் ஏசியா வங்கியின் தலைவர் நிமல பெரேராவிடம் 500 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டதாக கடிதம் ஒன்றில் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.

எனினும் தான் அந்த தொகையை சீ.எஸ்.என் நிறுவனத்தில் முதலீடு செய்யவில்லை என நிமல் பெரேரா நிதி மோசடி விசாரணைப் பிரிவினருக்கு அறிவித்துள்ளார்.

அதேபோல் கடந்த ஜனவரி மாதம் நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கைப்பற்றப்பட்ட நடமாடும் ஒளிப்பரப்பு பஸ் மற்றும் அதில் இருந்த உபகரணங்கள் சீ.எஸ்.என் நிறுவனத்திற்கு எப்படி கிடைத்தது என்பதற்கான தகவல்களும் இல்லை.

அத்துடன் சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனம் இயங்கிய இலக்கம் 236/1 டென்சில் கொப்பேகடுவ மாவத்தை பத்தரமுல்ல என்ற முகவரியில் இருக்கும் காணி 1998 இலக்கம் 23 என்ற சட்டத்தின் கீழ் சமூக நலன்புரி நடவடிக்கைகளுக்காக டி.ஏ. ராஜபக்ச நிதியத்திற்கு வழங்கப்பட்ட காணியாகும்.

இதனை தவிர அன்றைய விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் டப்ளியூ.பி. கணேகல, யோஷித்த ராஜபக்சவுக்கு அனுப்பிய, இலக்கம் 05/12/2011 என்ற அமைச்சரவை பத்திரத்துடனான கடிதத்தில், சீ.எஸ்.என். தொலைக்காட்சிக்கான குளிரூட்டும் சாதனங்களை பொருத்தும் ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்ட யூனைட்டட் இலக்ட்ரிக்கல் எஞ்சினியரிங் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் யோஷித்த ராஜபக்ச கையெழுத்திட்டுள்ளதும், தொலைக்காட்சியுடனான விற்பனை சம்பந்தமாக ரிச்சட் சொய்சாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கை உட்பட ஆவணங்களில் யோஷித்த ராஜபக்ச கையெழுத்திட்டுள்ளதன் மூலம் அவர் நிறுவனத்தை பெயரளவிலான பணிப்பாளர் சபையின் கீழ் நடத்தி வந்துள்ளத்தை நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.

யோஷித்த ராஜபக்ச சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் தலைவராக செயற்பட்டு வந்ததுடன் அதன் நிறைவேற்று அதிகாரியாக பிரியந்த அபேரத்ன என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

அப்போது அவர் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பொது முகாமையாளராக பணியாற்றி வந்தார். 2011 ஆம் ஆண்டு சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் நடவடிக்கை பணிப்பாளராக துசித ஜயவர்தன பணியாற்றி வந்தார்.

அந்த பதவியுடன் அவர் ஜனாதிபதி செயலகத்தின் அபிவிருத்தி அதிகாரி பதவியை வகித்து சம்பளத்தை பெற்று வந்துள்ளார்.இவ்வாறான சகல விடயங்களை உறுதிப்படுத்தி பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு 130 பக்கங்களை கொண்ட அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE