யோஷித்தவின் வெளிநாட்டு பயணங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன

243

பணச் சலவை குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள யோஷித்த ராஜபக்ச 2006ம் ஆண்டு கடற்படையில் இணைந்து கொண்ட பின்னர், 2014ம் ஆண்டு இறுதி வரை 27 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரியவந்துள்ளது.

இந்த பயணங்களுக்கான உத்தியோகபூர்வ அனுமதியை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே வழங்கியுள்ளார்.

யோஷித்த ராஜபக்ச உக்ரைன் நாட்டுக்கே அதிகமான முறை பயணம் செய்துள்ளதுடன் 11 முறை அந்த நாட்டுக்கு சென்று வந்துள்ளார்.

பிரித்தானியாவுக்கு மூன்று முறையும், கொரியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இரண்டு முறையும் விஜயம் செய்துள்ள அவர், அமெரிக்கா, ஈரான், ஹொங்கொங், ஜப்பான், மலேசியா, மியன்மார், ரஷ்யா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு தலா ஒரு முறை பயணம் செய்துள்ளார்.

வெளிநாட்டு பயிற்சிகளுக்காக 12 தடவைகளும், தேசிய றக்பி அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறி 6 தடவைகளும் வெளிநாடு சென்றுள்ள யோஷித்த, மூன்று முறை தனிப்பட்ட பயணமாக வெளிநாடு சென்றுள்ளார்.

பணி நிமித்தம் மற்றும் விசேட பணி நிமித்தம், தேசிய துப்பாக்கி சுடும் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி தலா ஒரு முறையும் வெளிநாடு சென்றுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

யோஷித்த ராஜபக்ச உக்ரைன் நாட்டில் பாடநெறி ஒன்றை கற்பதாக கூறப்பட்ட போதிலும் பாடநெறியை கற்ற காலத்திற்கு இணையான காலத்தில் உக்ரைன் போராளிகளுக்கு இலங்கையை சேர்ந்த அமைப்பு ஒன்றின் ஊடாக ஆயுதங்களை விநியோகித்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. எனினும் இது சம்பந்தமான முன்னைய அரசாங்கமோ, தற்போதைய அரசாங்கமோ விசாரணைகள் எதனையும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE