
வெளிவிவகார அமைச்சர் ரவிகருணாநாயக்கவின் தில்லுமுல்லுகள் பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவில் அம்பலமாகியிருப்பதால் அவரும் அவருக்குத் துணைநின்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உடனடியாக பதவி விலகவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
பிணைமுறி மோசடி விவகாரத்தில் பிரதான சூத்திரதாரியான பெர்பெச்சுவல் ட்ரெஷரிஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜுன் அலோசியஸ், ரவி கருணாநாயக்கவுக்கு தனது நன்றிக்கடனாக இரண்டு அதிசொகுசு வீடுகளுக்கான பெருந்தொகைக் குத்தகைப்பணத்தை செலுத்தியிருக்கிறார்.
பொதுமக்களின் பணத்தை மோசடி செய்ததுடன், இவ்வாறு துஷ்பிரயோகம் செய்திருக்கும் ரவி கருணாநாயக்கவும் அவரின் தில்லுமுல்லுகள் தெரிந்திருந்தும் கண்டும் காணாதது போல் நடந்துகொண்ட பிரதமரும் தொடர்ந்தும் தங்களது பதவிகளை வகிக்க தகுதியற்றவர்கள் எனவும் நாமல் ராஜபக்ஸ சாடியுள்ளார்.
இதேவேளை, ரவியின் மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்த குற்றச்சாட்டுக்கள் ராஜபக்ஸ குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்டிருந்தால் இந்நேரம் அவர்கள் தயவுதாட்சண்யமின்றி சிறையில் தள்ளப்பட்டிருப்பார்கள்.
மேலும், ரவிக்கு ஒரு நீதி, ராஜபக்ஸவுக்கு ஒரு நீதி என்ற தாற்பரியத்தை அரசு கைவிட்டுவிட்டு குற்றவாளிகளுக்கு எதிராக பாரபட்சமற்ற சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.