அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள Fort Lauderdale விமான நிலையம் எப்போதும் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும்.
இந்நிலையில் நேற்று அங்கு வந்த சாண்டியாகோ என்ற இளைஞர், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த மக்களை நோக்கி திடீரென சுடத் தொடங்கினார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர், 8க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவருடைய கைப்பையில் இருந்து துப்பாக்கி ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் நடந்த பின்னர் விமான நிலையத்தில் இருந்த பொதுமக்கள் பலர் அழுது கொண்டிருக்க, பலர் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர்.
இது குறித்து அங்கிருந்த ஒரு பெண் கூறுகையில், துப்பாக்கி சூடு நடக்கும் போது குண்டுகள் அங்குமிங்குமாக பறந்தன. முதலில் பட்டாசு சத்தம் என பலர் நினைத்தோம்.
பின்னர் தான் அது துப்பாக்கி சத்தம் என தெரியவந்தது. அவன் சுடும் போது பலர் தப்பித்து கொள்ள சுவற்றின் பின்னால் மற்றும் சூட்கேசின் பின்னால் ஒளிந்து கொண்டோம் என கூறியுள்ளார்.