ரமழான் மாதம் என்கின்றபோது எங்களை பண்படுத்திக் கொள்வதற்கும், எங்களுக்கு மத்தியிலிருக்கிற நற்பண்புகளை சீர்படுத்திக் கொள்வதற்கும் ஒரு சந்தர்ப்பமாகும். குறிப்பாக மற்ற சமூகங்களிலிருந்து எங்களை வேறுபடுத்திக் காட்டுகின்ற முக்கியமான குணவியல்புகளை வளர்த்துக் கொள்வதற்கான நல்ல படிப்பினைகளையும் இந்த ரமழான் மாதம் எங்களுக்கு தருவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு நேற்று (27) ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதியமைச்சர்களான எச்.எம்.எம். ஹரீஸ், செய்யித் அலி ஸாஹிர் மௌலானா, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் நபீல் அமானுல்லாஹ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான எஸ்.எம்.ஏ. கபூர், எஸ்.எல்.எம். பழீல், வாஹிட், பிரதேச சபை உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.