ரஷ்யாவில் 2018 உலகக் கோப்பை கால்பந்து 

479

லகக் கோப்பை கால்பந்து தொடரை, ரஷ்யா முதன்முறையாக ஏற்று நடத்துகிறது. செலவு, கிட்டத்தட்ட 12 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்! ரஷ்ய அரசு 6.7 பில்லியன் டாலர்களும் மாகாண அரசுகள் 1.5 பில்லியன் டாலர்களும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 3.4 பில்லியன் டாலர்களும் இந்தப் போட்டிக்காகச் செலவழித்துள்ளன. ரஷ்யாவில் மாஸ்கோ, சோச்சி, பீட்டர்ஸ்பர்க், கஸான் உள்ளிட்ட நகரங்களில் 12 மைதானங்களில் மொத்தம் 64 போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிக்காக ரஷ்யா முழுவீச்சில் தயாராகிவருகிறது. இத்தாலி, நெதர்லாந்து போன்ற சாம்பியன் அணிகள் இல்லாதது, போட்டியின் சுவாரஸ்யத்தைக் குறைக்காது என்று நம்பப்படுகிறது. எகிப்து போன்ற புதுமுக அணிகள் திறமையை நிரூபிக்கப் போராடலாம். இந்த உலகக் கோப்பைதான் 32 அணிகளுடன் விளையாடப்படும் கடைசி தொடர். 2022-ம் ஆண்டு கத்தார் உலகக் கோப்பை முதல், 48 அணிகள் களமிறங்கப்போகின்றன. 16 அணிகளுக்குப் புதியதாக உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்.

ரஷ்யா உலகக் கோப்பை கால்பந்து

உலகக் கோப்பை போட்டியைக் காண ரஷ்யா செல்பவர்களுக்கு விசா தேவையில்லை. போட்டிக்கான டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு,  Fan-ID ரஷ்ய அரசால் வழங்கப்படும். ரஷ்யா சென்று போட்டியைக் கண்டுகளித்து வெளியேறும் வரை இந்த ஐ.டி போதுமானது. அதேவேளையில், பாஸ்போர்ட் அல்லாத பிற ஆவணங்கள், டிக்கெட் வாங்கியதற்கான சான்று போன்றவற்றை அவசியம் வைத்திருக்க வேண்டும்.

ரஷ்ய உலகக் கோப்பையில், 45 வயது வீரர் ஒருவரும் விளையாட உள்ளார். எகிப்து அணியின் கோல்கீப்பர் எல் ஹத்ரி `அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர்.  எகிப்து அணிக்காக இவர் 156 சர்வதேசப்  போட்டிகளில் எல் ஹத்ரி விளையாடியுள்ளார். கொலம்பிய கோல்கீப்பர் ஃபாரீத் மான்ட்ரெகன் 43 வயதில் உலகக் கோப்பை போட்டியில் விளையாடியதே இதற்கு முன் சாதனையாக இருந்தது. ரஷ்ய உலகக் கோப்பைத் தொடரில் எல் ஹத்ரி களமிறங்கும்பட்சத்தில் புதிய சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா உலகக் கோப்பை

இந்த உலகக் கோப்பைத் தொடரின் தர வரிசையில் கடைசி இடத்தில் உள்ள அணி எது என்று பார்த்தால், அது போட்டியை நடத்தும் ரஷ்யாதான். உலகத் தரவரிசையில் ரஷ்யா 65-வது இடத்தில் இருக்கிறது. முதல் ஆட்டத்தில் ரஷ்ய அணி தரவரிசையில் 63-வது இடத்தில் உள்ள சவுதி அரேபியாவைச் சந்திக்கிறது.

SHARE