
இரு நாட்டு நட்புறவை பலப்படுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
தென் ஆப்பிரிக்கா நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரிலுள்ள சாண்டான் சர்வதேச மாநாட்டு மையத்தில், பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் பங்கேற்கும் ‘பிரிக்ஸ்’ நாடுகளின் 3 நாள் உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது.
இந்த மாநாட்டில், உலகளாவிய முக்கிய பிரச்சினைகள், சர்வதேச அமைதி, பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஐந்து நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிக்ஸ் உச்சி மாநாடுகளின் சந்திப்புகளுக்கிடையே இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இரு நாட்டு உறவை வலுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதினுனடான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ”ரஷ்ய அதிபர் புதினை மறுபடியும் சந்தித்தது எனக்கு பெரும் மகிழ்ச்சி. எனது முந்தைய பயணமான சோச்சியில் இருவரும் சந்தித்து பேசியது குறித்து புதின் நினைவு கூர்ந்தார். இரு நாட்டு நட்புறவையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்த சந்திப்பு அமைந்ததாக கருதுகிறேன்” எனக் கூறினார். மேலும் இந்த சந்திப்பில் உலக கோப்பை கால்பந்து போட்டியை திறம்பட நடத்திய ரஷ்ய நாட்டிற்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதனிடையே பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து ரஷ்ய அதிபர் புதின் கூறுகையில், ”அக்டோபர் மாதம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள தயாராகவுள்ளேன். எங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைந்துள்ளன, வர்த்தகரீதியான எங்களுடைய பரஸ்பர வளர்ச்சி தொடர்ந்து முன்னேறும்” எனக் கூறினார்.
கடந்த 4 மாதங்களில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, பிரதமர் மோடி சந்திப்பது இது 3-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.